You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
சித்தார்த் சாய்னா நேவாலிடம் மன்னிப்பு கேட்டார் - 'மரியாதைக் குறைவான நகைச்சுவை' ட்வீட்
இந்திய பேட்மின்டன் வீராங்கனை சாய்னா நேவாலை சர்ச்சைக்குரிய வகையில் விமர்சித்து ட்வீட் செய்த நடிகர் சித்தார்த் தாம் கூறிய 'மரியாதைக் குறைவான' நகைச்சுவைக்காக மன்னிப்பு கேட்பதாகத் தெரிவித்துள்ளார். ஆபாசமாகப் பொருள் கொள்ளும்படி சித்தார்த்தின் ட்வீட் இருந்தாக அவர் கடும் எதிர்ப்புக்கு ஆளாகியிருந்தார்.
சாய்னா நேவாலுக்கு சித்தார்த்தின் மன்னிப்பு கடிதம்
சாய்னா நேவாலின் ட்விட்டர் கணக்கை டேக் செய்து , தமது மன்னிப்புக் கடிதத்தை அவர் நேற்று இரவு தமது ட்விட்டர் கணக்கில் பகிர்ந்துள்ளார்.
சித்தார்த் பயன்படுத்திய சொற்களுக்கு சாய்னா, அவரது குடும்பத்தினர், தேசிய மகளிர் ஆணையம் மட்டுமல்லாது திரைத் துறையிலும், சமூக ஊடகங்களிலும் தீவிர எதிர்ப்பு கிளம்பியது.
தாம் கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளான நிலையில் சித்தார்த் இப்போது மன்னிப்பு கோரியுள்ளார்.
நான் உங்களிடம் பலவற்றில் கருத்து முரண்படலாம். ஆனால் உங்கள் டீவீட்டை படித்தபோது எனக்கு உண்டான கோபம் மற்றும் ஏமாற்றம் எந்த வகையிலும் என தொனி மற்றும் சொற்களை நியாயப்படுத்தாது என்று சித்தார்த் தெரிவித்துள்ளார்.
இதைவிட (சாய்னாவை விமர்சித்து பகிர்ந்த டீவீட்டை விட) எனக்குள் மேலும் கனிவுண்டு என்று எனக்குத் தெரியும் என்றும் அவர் கூறியுள்ளார்.
''பலரும் கூறுவது போல எனது வார்த்தைகள் மற்றும் நகைச்சுவை எந்தவிதமான தவறான நோக்கத்தையும் கொண்டிருக்கவில்லை என்பதை நான் வலியுறுத்த விரும்புகிறேன்; நான் பெண்ணியத்தை தீவிரமாக ஆதரிப்பவன்; எனது ட்விட்டர் பதிவில் நான் மறைமுகமாக எவ்விதமான பாலின பாகுபாட்டையும் வெளிப்படுத்தவில்லை என்பதை உறுதிபடக் கூறுகிறேன். ஒரு பெண் என்பதால் உங்களைத் தாக்கிப் பேச வேண்டும் என்ற நோக்கம் எனக்கில்லை,'' என்று அவர் கூறியுள்ளார்.
''நடந்தவற்றை ஒதுக்கிவைத்து இந்தக் கடிதத்தை நீங்கள் ஏற்றுக் கொள்வீர்கள் என நம்புகிறேன். நீங்கள் எப்பொழுதும் என் சாம்பியன்'' என அந்த கடிதத்தில் பதிவிட்டுள்ளார் நடிகர் சித்தார்த்.
நரேந்திர மோதிக்கு ஆதரவான சாய்னா நேவாலின் ட்வீட்
சமீபத்தில் இந்திய பிரதமர் நரேந்திர மோதி பஞ்சாப் மாநிலத்திற்கு சென்றபோது அவர் திட்டமிடப்பட்ட நிகழ்ச்சிப் பகுதிக்கு செல்லும் வழியில் பாதுகாப்பு குறைபாடுகள் இருப்பதாக, அவர் பாதியிலேயே தமது பயணத்தை முடித்துக் கொண்டு டெல்லி திரும்பினார்.
இந்த விவகாரத்தை தேசிய பாதுகாப்பு பிரச்னையாக இந்திய உள்துறை கருதிய வேளையில், சம்பவம் குறித்து விசாரிக்க பஞ்சாப் மாநில அரசு, இந்திய உள்துறை, உச்ச நீதிமன்றம் ஆகியவை தனித்தனியாக குழுக்களை அமைத்து விசாரித்து வருகின்றன.
பிரதமரின் பாதுகாப்பு குளறுபடி பிரச்னையை ஆளும் பஞ்சாப் காங்கிரஸுக்கு எதிராக பாரதிய ஜனதா கட்சி பயன்படுத்த, இது அந்த கட்சி செய்யும் நாடகம் என்று காங்கிரஸ் கட்சி எதிர்வினையாற்றி வருகிறது. இந்த விவகாரம் தேச பாதுகாப்பு பிரச்னை என்பதைக் கடந்து அரசியலாக்கப்பட்டு வரும் வேளையில், மோதி பஞ்சாப் மேம்பாலத்தில் சுமார் 15 நிமிடங்கள் சிக்கிக் கொண்ட காட்சிகள், சமூக ஊடகங்களில் பரவி டிரெண்டாகின. மேலும், #WeStandWithModi என மோதிக்கு ஆதரவு தெரிவிக்கும் ஹேஷ்டேக்கும் ட்விட்டரில் ட்ரெண்ட் ஆனது.
இந்திய பேட்மின்டன் வீராங்கனை சாய்னா நேவால் தனது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பிரதமரின் பாதுகாப்பில் சமரசம் செய்து கொண்டால் எந்த ஒரு நாடும் பாதுகாப்பாக இருக்க முடியாது. பிரதமர் மோதி மீது தாக்குதல் நடத்த வந்தவர்கள் அராஜகவாதிகள் என கூறி #BharatStandsWithModi என்ற ஹேஷ்டேக்கை பயன்படுத்தி ட்வீட் செய்திருந்தார்.
சாய்னாவின் இந்த ட்வீட்டை பகிர்ந்து சித்தார்த் தெரிவித்த கருத்துகள் ஆபாசமாக பொருள் கொள்ளும்படியான வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளதாக அவருக்கு எதிராக சமூக வலைதளங்களில் சர்ச்சை உருவானது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்