You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
சத்ய பால் மாலிக்கின் சர்ச்சை பேச்சுகள்: நரேந்திர மோதி, அமித் ஷா பொறுமைக்கு என்ன காரணம்? யார் இவர்?
இந்திய பிரதமர் நரேந்திர மோதியுடன் வாக்குவாதம் செய்து விட்டு மேகாலயாவுக்கு திரும்பியதாக அம்மாநில ஆளுநர் சத்யபால் மாலிக் பேசிய விவகாரம் சர்ச்சையாகியிருக்கிறது. ஆனால், இந்த கருத்தால் பிரதமர் நரேந்திர மோதி தரப்பில் இருந்தோ அவர் சார்ந்த பாரதிய ஜனதா கட்சியிடம் இருந்தோ எதிர்ப்பு வராமல் மோதியை ஒரு மாநில ஆளுநரே எதிர்க்கிறார் என எதிர்கட்சியான காங்கிரஸ் கடுமையாக விமர்சித்து கருத்துகளை வெளியிட்டிருக்கிறது.
மேகாலயா ஆளுநர் சத்ய பால் மாலிக், நரேந்திர மோடி அரசாங்கத்திலும் ஆளும் பாரதிய ஜனதா கட்சியிலும் வித்தியாசமானவராக கருதப்படுபவர். அதற்கு காரணம், மத்திய அரசின் கொள்கைகளை எதிர்த்தும், பிரதமர் நரேந்திர மோதி உட்பட அவர் சார்ந்த பாரதிய ஜனதா கட்சியையும் வெளிப்படையாகவே பொது தளங்களில் விமர்சிக்கும் நபராக அதுவும் ஆளுநராக அவர் இருப்பது அவரை தனித்துவமாக பார்க்க வைக்கிறது.
மேகலாய ஆளுநர் சத்தியபால் மாலிக் அண்மையில் பிரதமர் மோதியை சந்தித்துப்பேசியது தொடர்பாக ஹியாணாவில் நடைபெற்ற ஒரு கூட்டத்தில் விவரித்தார்.
அப்போது, 'பிரதமர் மோதி மிகவும் திமிரு பிடித்தவர்'' என்று கூறிய அவர், நான் அவரிடம் நம்முடைய 500 விவசாயிகள் உயிரிழந்துள்ளார்கள் என்று சொன்னபோது, 'அவர்கள் என்ன எனக்காகவா இறந்தார்கள்?' என்று கேட்டார் மோதி. அதற்கு நான், 'நீங்கள்தானே இந்தியாவின் பிரதமர்' எனக் கூறி அவருடன் வாக்குவாதம் செய்தேன். பிறகு 'இந்த விவகாரம் பற்றி அமித் ஷாவிடம் பேசுங்கள்' என்று கூறினார் மோதி. அமித் ஷாவிடம் மோதியின் பேச்சு பற்றி நான் குறிப்பிட்டபோது, 'அவர் ஏதோ பேசி விட்டார் விடுங்கள்' என்று தெரிவித்தார் என்றார் சத்ய பால் மாலிக்.
ஆனால், இப்படி வெளிப்படையாக இவர் கருத்துகளை வெளியிடுவது இது முதல் முறை அல்ல.
சத்யபால் மாலிக் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் இந்தியா டுடே தொலைக்காட்சிக்கு அளித்த நேர்காணலில், பாஜக ஆளும் கோவா அரசாங்கத்தில் ஊழல் மலிந்து காணப்படுகிறது என்று கூறினார். மேலும், ஜம்மு காஷ்மீரில் 370ஆம் சட்டப்பிரிவு ரத்து செய்யப்பட்டபோது, ஊழல் நிறைந்ததாக கருதிய சில கோப்புகளுக்கு அனுமதி வழங்க தான் மறுத்து விட்டதால் அதன் ஆளுநர் பதவியில் இருந்து தாம் மாற்றப்பட்டதாக கூறியிருந்தார்.
இவரது இந்த குற்றச்சாட்டுகள் மிகத் தீவிரமானவை. ஆனால், அதை ஆளும் மத்திய அரசோ பாரதிய ஜனதா கட்சியோ பெரிதாக கண்டுகொள்ளவில்லை அல்லது எதிர்வினையாற்றவில்லை.
மாநில ஆளுநர் என்றபோதும் விவசாயிகள் போராட்டம் தொடர்பாக தொடர்ந்து குரல் கொடுத்து வந்தார் சத்ய பால் மாலிக்.
மோதியை எதிர்ப்பது இவருக்கு முதல் முறையல்ல
கடந்த ஆண்டு மார்ச் மாதம், மேகாலயா ஆளுநரான சத்ய பால் மாலிக், 2020இல் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மூன்று விவசாய மசோதாக்கள் மீதான விவசாயிகளின் போராட்டத்தை மோதி அரசாங்கம் எவ்வாறு கையாண்டது என்பதை எதிர்த்துக் குரல் கொடுக்க, அவரது சொந்த மாநிலமான உத்தரபிரதேசத்தில் உள்ள பாக்பத்தில் ஒரு பேரணியை நடத்தினார்.
வழக்கமாக அரசியலமைப்பு உயர் பதவியான ஆளுநர் பொறுப்பை வகிப்பவர்கள் அரசியல் நிகழ்வுகளில் பங்கெடுப்பதில்லை.
ஆனால், விதிவிலக்காக சத்ய பால் மாலிக்கின் செயல்பாடு பலரது புருவங்களை உயர்த்தியது. 2022இல் உத்தர பிரதேச சட்டப்பேரவை தேர்தலில் பாஜக தோல்வியடையும் என்றும் அவர் கடந்த ஆண்டு ஒரு கணிப்பை வெளியிட்டார்.
உத்தர பிரதேசத்தின் பாக்பத், முசாபர்நகர் மற்றும் மீரட் மாவட்டங்களில் விவசாய சட்டங்களுக்கு எதிராக கோபத்தில் விவசாயிகள் இருந்ததால் அவர்களை பார்க்க பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த ஒரு எம்எல்ஏ, எம்பிக்கும் துணிச்சல் வரவில்லை என்று அவர் சாடினார்.
ஆரம்பத்தில் மோதி அரசு விவசாயிகள் கோரி வந்த குறைந்தபட்ச ஆதார விலை கோரிக்கையை நிராகரித்தபோது, அதை வெளிப்படையாகவே எதிர்ப்பதாக சத்ய பால் மாலிக் கூறினார்.
விவசாயிகள் போராட்டம் தொடர்பாக பிரதமர் மோதி மற்றும் இந்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம் முன்பே பேசியதாகவும், பிரச்னைக்கு தீர்வு காண தாம் அளித்த ஆலோசனைகளுக்கு அந்தத் தலைவர்கள் செவிசாய்க்கவில்லை என்றும் சத்ய பால் மாலிக் குற்றம்சாட்டினார்.
உத்தர பிரதேசம், உத்தராகண்ட், பஞ்சாப், கோவா, மணிப்பூர் ஆகிய மாநிலங்களுக்கு இந்த ஆண்டு தொடக்கத்தில் சட்டப்பேரவை தேர்தல்கள் நடைபெறவுள்ள நிலையில், இந்த தேர்தல்களில் பாரதிய ஜனதா கட்சி பெரிய விலையை கொடுக்கும் என்று அவர் கூறியிருந்தார்.
சத்ய பால் மாலிக்கிடம் பொறுமை காட்டும் மோதி, அமித் ஷா
இந்த விவகாரத்தில் சத்ய பால் மாலிக்கை கண்டித்தோ அவரது செயல்பாடுகளுக்கு மத்திய அரசு தரப்பில் இருந்து ஏன் யாரும் எதிர்வினை ஆற்றவில்லை என்று பாரதிய ஜனதா கட்சியில் உள்ள இரண்டாம் நிலை தலைவர்கள் பலரும் கேள்வி எழுப்புகின்றனர்.
இதற்கு ஒரு பின்னணி இருக்கவும் செய்கிறது.
75 வயதாகும் சத்ய பால் மாலிக் ஒரு காலத்தில் பாரதிய ஜனதா கட்சியில் தீவிர அரசியலில் ஈடுபட்டவர். அடிப்படையில் அவர் ஜாட் சமூகத்தைச் சேர்ந்தவர். இந்த சமூகத்தினர் உத்தர பிரதேசத்தின் மேற்கு மற்றும் கிழக்குப் பகுதியில் அதிகமாக உள்ளவர்கள்.
அவர்களில் பெரும்பாலானோர் விவசாயம் மற்றும் கால்நடை பராமரிப்புப் பணியை செய்பவர்கள். உத்தர பிரதேச மாநில அரசியலில் பல கட்சிகளில் களம் கண்டு வந்தாலும், பாரதிய ஜனதா கட்சியில் சேர்ந்ததன் மூலம் மாநில அரசியலில் வேரூன்ற வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்த்த சத்ய பாலுக்கு அரசியலுக்கு அப்பாற்பட்ட ஆளுநர் பதவியே கிடைத்தது.
கிட்டத்தட்ட கடந்த நான்கு ஆண்டுகளாக ஆளுநராக இருப்பதால் அவரால் தீவிர அரசியலில் பங்கெடுக்க வாய்ப்பில்லாமல் போய் விட்டது.
இத்தனைக்கும் அவர் நியமிக்கப்பட்ட ஆளுநர் பதவிக்காலத்தை ஒரு இடத்தில் கூட அவர் முழுமையாக நிறைவு செய்யவில்லை. எல்லா இடங்களிலும் ஒன்று அல்லது ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக அவர் ஆளுநர் பதவியை வகித்ததில்லை.
சத்ய பால் மாலிக் கடந்த நான்கு ஆண்டுகளுக்குள் நான்காவது மாநிலத்திற்கு மாற்றப்பட்டிருக்கிறார். ஒடிஷாவுக்கான கூடுதல் பொறுப்பை வகித்ததன் மூலம் அவர் ஐந்து மாநிலங்களில் ஆளுநராக இருந்துள்ளார்.
2017இல் பிகாரில் தான் அவர் முதல் முறையாக ஆளுநராக நியமிக்கப்பட்டார். பிகாரில் உள்ள தங்கும் விடுதிகளில் பாலியல் செயல்பாடுகள் வெளிச்சத்துக்கு வந்ததால் அதை எதிர்கொள்வதுஅம்மாநிலத்தில் ஆளும் ஐக்கிய ஜனதா தளம் - பாரதிய ஜனதா கட்சி கூட்டணிக்கு பெரும் சவாலாக இருந்தது.
அந்த விவகாரம் தொடர்பாக ஊடகங்களில் வெளி வரும் செய்திகள் குறித்து அதிருப்தி வெளியிட்டு மாநில முதல்வர் மற்றும் மத்திய அரசுக்கு கடிதங்களை மாநில 'ஆளுநர்' என்ற முறையில் எழுதினார் சத்யபால் மாலிக்.
இதன் பின்னர், 2018இல் அவர் ஜம்மு காஷ்மீருக்கு மாற்றப்பட்டபோது, அங்கு மத்திய அரசாங்கத்தின் ஒப்புதல் இல்லாமல் "அரசியல் கூட்டங்களை" நடத்தினார்.
இதனால் எழுந்த சர்ச்சை அடங்குவதற்குள்ளாக அவர் கோவாவுக்கு மாற்றப்பட்டார், அங்கு அவர் பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான பிரமோத் சாவந்த் அரசாங்கத்துடன் மோதும் வகையில் கருத்துகளை வெளியிட்டார்.
இறுதியாக, அவர் மேகாலயாவுக்கு கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் மாற்றப்பட்டார். சில மாதங்கள் அரசியல் கருத்துகளை வெளியிடாமல் இருந்த சத்ய பால் மாலிக், உத்தர பிரதேசத்தில் ஆளும் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜகவை கடுமையாக விமர்சிக்க விவசாயிகளின் பிரச்னையை கையில் எடுத்தார்.
விவசாயிகளின் போராட்டங்கள் தொடர்பாக பாஜக மற்றும் மோதி அரசை அவர் கடுமையாக விமர்சித்தார்.
உத்தர பிரதேசத்தில் எட்டு உயிர்கள் பலியாகக் காரணமான லக்கிம்பூர் கேரி வன்முறையைத் தொடர்ந்து, சத்ய பால் மாலிக் ஆளுநர் பதவி வகிக்கும் முன்பாக சார்ந்திருந்த பாரதிய ஜனதா கட்சி மற்றும் மத்திய, மாநில அரசாங்கத்திற்கு எதிராக தனது எதிர்ப்பை கடுமையாக வெளிப்படுத்தினார். இதன் தொடர்ச்சியாக அவர் பதவியை ராஜிநாமா செய்யவும் முன்வந்ததாக கூறப்பட்டது.
இருப்பினும், சொந்த கட்சியுடன் மோதும் அளவுக்கு துணிந்த பிறகும் கூட அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் மிகவும் சகிப்புத்தன்மையுடனேயே அவரை பாஜக மற்றும் மோதி அரசு கையாண்டு வருகிறது. இப்படி வெளிப்படையாக மோதி அரசை சத்ய பால் மாலிக் எதிர்க்கவும் அவர் மீது மோதி அரசு ஏன் நடவடிக்கை எடுக்காமல் தவிர்க்கிறது என்பதை விளக்குவதற்கும் வெளிப்படையான தகவல்கள் ஏதுமில்லை.
இத்தனைக்கும் அவர் 2004இல் பாரதிய ஜனதா கட்சியில் சேருவதற்கு முன்புவரை அவர் பல கட்சிகளில் அரசியல் களம் கண்டிருந்தார்.
சத்ய பால் மாலிக் அரசியல் பயணம்
சத்ய பால் மாலிக் பாரதிய ஜனதா கட்சியில் சேருவதற்கு முன்பு, மேற்கு உத்தர பிரதேசத்தில் அதிகார மையங்களில் ஒன்றாக தன்னை நிலைநிறுத்திக் கொள்ளும் பல்வேறு அரசியல் கட்சிகளுடன் இருந்தார். அவர் ஒரு விவசாய தலைவராக தன்னை மாநிலத்தில் அடையாளப்படுத்திக் கொண்டார்.
சத்ய பால் மாலிக் தனது மீரட் பல்கலைக்கழக நாட்களில் ஒரு சோசலிஸ்ட் தலைவராக நற்பெயரைப் பெற்றார். முக்கிய அரசியலில், அவர் முன்னாள் பிரதமரான சௌத்ரி சரண் சிங்கின் பாரதிய கிராந்தி தளத்தின் வேட்பாளராக 1974இல் தேர்தல் களம் கண்டு சட்டப்பேரவை உறுப்பினர் ஆனார்.
1975இல் லோக் தளம் கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளராக இருந்தார். அதன் பிறகு 1980இல் அவர் மாநிலங்களவை நியமன உறுப்பினராக நியமிக்கப்பட்டார்.
1984ஆம் ஆண்டு காங்கிரஸில் அவர் சேர்ந்த போது பலர் அந்த கட்சியில் இருந்து பிரிந்தனர். 1986இல் அவர் மாநிலங்களவை காங்கிரஸ் உறுப்பினர் ஆக தேர்வு செய்யப்பட்டார். ஆனால், போஃபர்ஸ் ஊழலைத் தொடர்ந்து ஒரே ஆண்டில் மாநிலங்களவை உறுப்பினர் பதவியை ராஜிநாமா செய்ததுடன் காங்கிரஸில் இருந்தும் வெளியேறினார்.
பிறகு ஜன் மோர்ச்சா என்ற பெயரில் ஒரு கட்சியைத் தொடங்கிய அவர், அதை 1988இல் வி.பி.சிங் நடத்தி வந்த ஜனதா தளத்துடன் இணைத்தார். 1989இல் உத்தரபிரதேசத்தில் உள்ள அலிகார் மக்களவைத் தொகுதியில் ஜனதா தளம் வேட்பாளராக போட்டியிட்டு அவர் வெற்றி பெற்றார்.
1990 ஏப்ரல் 21ஆம் தேதி முதல் 1990 நவம்பர் 10ஆம் தேதிவரை அப்போதைய வி.பி. சிங் தலைமையிலான மத்திய அமைச்சரவையில் நாடளுமன்ற விவகாரங்கள் மற்றும் சுற்றுலா துறை அமைச்சராகவும் இருந்துள்ளார்.
2004இல் பாரதிய ஜனதா கட்சியில் சேர்ந்த அவர், மக்களவை தேர்தலில் பாக்பாத் தொகுதியில் போட்டியிட்டார். அப்போது முதல் உத்தர பிரதேச அரசியலில் தீவிர கவனம் செலுத்திய அவர் 2009இல் அகில இந்திய பாரதிய ஜனதா கிசான் மோர்ச்சோ என்ற கட்சியின் விவசாய அணியின் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார். பிறகு பாஜக தேசிய துணைத்தலைவராக 2009இல் அவர் நியமிக்கப்பட்டு தீவிர கட்சி அரசியலில் பங்கெடுத்தார்.
2014இல் நடைபெற்ற மக்களவை தேர்தலுக்கு முன்பாக கட்சியின் தேர்தல் செயல் திட்ட அறிக்கை தயாரிப்பு குழுவில் விவசாயிகள் பிரச்னைகள் தொடர்பாக முன்மொழியப்பட்ட பல திட்டங்களின் யோசனைகளுக்கு இவரது பங்களிப்பும் முக்கியமாக இருந்துள்ளது.
2017ஆம் ஆண்டு அக்டோபரில் பிகார் ஆளுநராக பதவியேற்கும்வரை, சத்ய பால் மாலிக் பாரதிய ஜனதா கட்சியின் விவசாயிகள் அணி பொறுப்பாளராக இருந்தார்.
விவசாயிகளின் அமைப்புகளுடனான அவரது தொடர்புகள், போராடிய விவசாயிகளுக்கு ஆதரவாக ஒரு நிலைப்பாட்டை எடுக்க அவரை தூண்டியிருக்க வேண்டும் என்று அவரது ஆதரவாளர்கள் கூறுகின்றனர். இருப்பினும், அவர் ஆளுநராகப் பணியாற்றிய மாநிலங்களில் உள்ள அரசாங்கங்களுக்கு எதிராகவும், மோதி அரசாங்கத்திற்கு எதிராகவும் அவர் வெளிப்படுத்திய கருத்துகள் கடுமையானதாகவே கருதப்படுகிறது.
எதிர்ப்பை மட்டுப்படுத்திய ஆளுநர்
இந்த நிலையில், சத்ய பால் மாலிக், பிரதமர் மோதிக்கு எதிராகவும் பாரதிய ஜனதா கட்சிக்கு எதிராகவும் பேசிய தகவல்கள் ஊடகங்களில் விரிவாக வெளியானதைத் தொடர்ந்து தமது கருத்துகளுக்கு விளக்கம் கொடுத்திருக்கிறார் சத்யபால் மாலிக்.
இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், "விவசாயிகள் பிரச்னை விவகாரத்தில் பிரதமர் மோதி தற்போது சரியான பாதையிலேயே சென்று கொண்டிருக்கிறார். அமித் ஷாவை நான் சந்தித்தபோது ஏன் சர்ச்சையாக ஏதாவது பேசி வருகிறீர்கள் என்று கேட்டபோது, ஒரு ஆளுநராக விவசாயிகள் செத்து மடிவதை பார்க்காமல் இருக்க முடியாது. அவர்களுக்காக நடுநிலையானாக இருக்க வேண்டும் என தெரிவித்தேன். அதை அவர் ஏற்றுக் கொண்டார். தொடர்ந்து மக்களை சந்தித்து பேசுங்கள். அவர்களுக்கு புரிய வையுங்கள் என்று அமித் ஷா அறிவுறுத்தினார். பிரதமர் பற்றிய எனது கருத்துகள் தவறாக புரிந்து கொள்ளப்பட்டு செய்தியாக்கப்பட்டுள்ளன," என்று சத்ய பால் மாலிக் கூறியிருக்கிறார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்