You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
கோர்பிவேக்ஸ், கோவோவேக்ஸ்: இந்தியாவில் மேலும் 2 கொரோனா தடுப்பூசிகளுக்கு அனுமதி
இந்தியாவில் மேலும் புதிதாக இரண்டு கொரோனா வைரஸ் தடுப்பு மருந்துகளுக்கு அவசரகால பயன்பாட்டு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
பயாலஜிக்கல் -இ நிறுவனத்தின் கோர்பிவேக்ஸ் மற்றும் சீரம் இன்ஸ்டிட்யூட் ஆஃப் இந்தியாவின் கோவோவேக்ஸ் ஆகிய மருந்துகளுக்கு இன்று இந்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
கொரோனா வைரஸ் சிகிச்சைக்காக பயன்படுத்தக்கூடிய ஆன்டி-வைரல் மருந்தான மோல்னுபிரவிர் (Molnupiravir) எனும் மருந்துக்கும் அவசரகால பயன்பாடு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
மத்திய மருந்து தர கட்டுப்பாட்டு அமைப்பின் வல்லுநர் குழு அளித்த பரிந்துரையின் அடிப்படையில் இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
மோல்னுபிரவிர் ஆன்டி-வைரல் தடுப்பு மருந்து இந்தியாவிலுள்ள 13 நிறுவனங்களால் தயாரிக்கப்படும் என்றும் கோவிட்-19 தொற்று உண்டாகி, அது மேலும் தீவிரமடைய வாய்ப்புள்ள, வயது வந்த தொற்றாளர்களுக்கு செலுத்தப்படும் என்றும் சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார் .
ஆக்ஸ்ஃபோர்டடு பல்கலைக்கழகம் மற்றும் அஸ்ட்ராசெனீகா மருந்து நிறுவனத்தால் உருவாக்கப்பட்டு இந்தியாவில் சிரம் இன்ஸ்டியூட் ஆஃப் இந்தியா நிறுவனத்தால் உற்பத்தி செய்யப்படும் கோவிஷீல்டு தடுப்பு மருந்து மற்றும் பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்த கோவேக்சின் தடுப்புமருந்து ஆகியவற்றுக்குப் பிறகு தற்போது இந்தியாவிலேயே தயாரான கோர்பிவேக்ஸ் தடுப்பு மருந்து இந்தியாவில் பயன்படுத்த அனுமதிக்கப்பட்டுள்ளது.
இதை இந்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா 'ஹாட்ரிக்' என்று வர்ணித்துள்ளார்.
தற்போது அனுமதி வழங்கப்பட்டுள்ள இரண்டு கொரோனா தடுப்பூசிகளுடன் சேர்த்து இதுவரை இந்தியாவில் எட்டு கொரோனா தடுப்பு மருந்துகளுக்கு இந்திய மருந்து தலைமை கட்டுப்பாட்டாளர் அலுவலகத்தால் அவசரகாலப் பயன்பாட்டு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்பு கோவிஷீல்டு, கோவேக்சின், ஸ்புட்னிக்-வி, சைகோவ்-டி, மாடர்னா, ஜான்சன் அண்ட் ஜான்சன் ஆகிய தடுப்பு மருந்துகளுக்கு இந்திய அரசு அவசர கால பயன்பாட்டு அனுமதி வழங்கியிருந்தது.
கோர்பிவேக்ஸ் மற்றும் கோவோவேக்ஸ்
கோர்பிவேக்ஸ் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட முதல் ஆர்.பி.டி ப்ரோடீன் சப்-யூனிட் (RBD protein sub-unit) வகை தடுப்பு மருந்தாகும்.
சப்-யூனிட் வகை தடுப்பு மருந்துகள் நோய் கிருமியின் முழு உருவமும் செலுத்தப்பட்டு உருவாக்கப்படாது. நோய் எதிர்ப்பு மண்டலத்தைச் செயல்படத் தூண்டப் போதுமான, கிருமியின் உறுப்பு மட்டுமே பயன்படுத்தப்படும்.
கொரோனா வைரஸின் புரத இழையில் உள்ள ஆர்.பி.டி ப்ரோடீன் கோர்பிவேக்ஸ் தடுப்பு மருந்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது.
கோவோவேக்ஸ் நேனோபர்ட்டிகிள் வகை தடுப்பு மருந்தாகும். நானோபர்ட்டிகிள் வகை தடுப்பு மருந்களில் சில நேனோமீட்டர் அளவே உள்ள, நோய் எதிர்ப் பொருட்களைத் (ஆன்டிபாடி) தூண்டக்கூடிய பொருட்கள் பயன்படுத்தப்பட்டு உருவாக்கப்படும்.
பிற செய்திகள்:
- பள்ளிகளில் அதிகரிக்கும் பாலியல் வன்முறை சம்பவங்கள்: அரசு செய்ய வேண்டியது என்ன?
- அன்னை தெரசா தொடங்கிய சேவை அமைப்பு வெளிநாட்டு நிதி பெற இந்திய அரசு தடை
- "புழைச்சதே பெரிசு, ஒன்னும் மிஞ்சலை" - அப்பளம் போல நொறுங்கிய திருவொற்றியூர் கட்டடம் - கள நிலவரம்
- கொரோனா தடுப்பூசி: 15-18 வயதுடையோருக்கு எப்போது போடலாம்? - முக்கிய தகவல்கள்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்