You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
இந்து மதத்துக்கு மாறும் மலையாள இயக்குநர் அலி அக்பர் - ஏன் கிறிஸ்துவத்துக்கு மாறவில்லை?
- எழுதியவர், இம்ரான் குரேஷி
- பதவி, பிபிசிக்காக
கேரள மாநிலத்தைச் சேர்ந்த மலையாள இயக்குநர் அலி அக்பர் இந்து மதத்துக்கு மாற தீர்மானித்துள்ளார். மேலும் தனது பெயரை ராம் சிம்மன் என மாற்றிக் கொள்ளவிருக்கிறார். முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த விஷயத்தில் சிலர் நகைச்சுவையை வெளிப்படுத்தும் எமோஜிக்களை சமூக வலைத்களங்களில் பதிவிட்டதால் ஏற்பட்ட கோபத்தின் வெளிப்பாடாக இந்த முடிவு எடுத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
"இந்திய ராணுவத்தின் முப்படைத் தளபதி பிபின் ராவத் உயிரிழந்தது தொடர்பாக பல்வேறு எமோஜீக்கள் பகிரப்பட்டன. அது மிகவும் தவறானது. அப்படிப் பகிர்ந்தவர்கள் யாரெனப் பார்த்தால் அவர்கள் அனைவரும் இஸ்லாமியர்களாக இருக்கிறார்கள். நாம் எப்படி மதத்தை மட்டுமே முதன்மையாகக் கொண்டு வாழ முடியும்? என்னைப் பொருத்தவரை மதம் மூன்றாவது தான். முதல் இடம் என் நாட்டுக்குத்தான், இரண்டாவது இடம் மீண்டும் என் நாட்டுக்குத் தான். மூன்றாவது இடத்தில்தான் மதம்" என பிபிசி இந்தியிடம் கூறினார் அக்பர்.
பிபின் ராவத் பாகிஸ்தானுக்கு எதிராகவும், காஷ்மீரில் உள்ள ஆயுதமேந்தியவர்களுக்கு எதிராகவும் நடவடிக்கைகளை எடுத்ததற்காக, அவர் உயிரிழந்த போது இப்படிப்பட்ட எதிர்வினைகள் வந்ததாக அலி அக்பர் நம்புகிறார்.
"ஒரே ஒரு இஸ்லாமிய தலைவர் கூட, இப்படிப்பட்ட பதிவுகளைச் எதிர்த்து, பதிவிட வேண்டாம் என ஒரு வார்த்தை கூட கூறவில்லை. கேரளத்தில் உள்ள இஸ்லாமிய இயக்கங்கள் தொடர்ந்து இஸ்லாமிய இயக்கங்களாக இல்லை. அவர்கள் கேரளத்தை இஸ்லாமிய நாடாக மாற்ற விரும்புகிறார்கள். சில தலைவர்கள் அதை வெளிப்படையாகவே கூறியுள்ளனர்".
1921ஆம் ஆண்டு நடந்த பிரபலமான மலபார் கிளர்ச்சி, உண்மையில் ஒரு சமூகக் கலவரம் என்றும், அதை இஸ்லாமியர்கள் எப்படி கொத்து கொத்தாக இந்துக்களை படுகொலை செய்ய பயன்படுத்தினர் என்று கூறப்படுகிறது என ஒரு திரைப்படம் எடுப்பதாக அறிவித்த இயக்குநர்களில் முதன்மையானவர் அலி அக்பர். '1921 புழ முதல் புழ வரே' என்கிற தலைப்பில் அப்படம் தயாரிக்கப்பட்டு வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
"அவர்கள் (இஸ்லாமிய தலைவர்கள்) கடந்த ஒன்றரை ஆண்டுக்கு மேலாக என்னைப் பின் தொடர்ந்தனர். அவர்கள் சமூகத்துக்கு உண்மையைச் சொல்ல விரும்பவில்லை. நான் இப்போது படப்பிடிப்பை நிறைவு செய்துவிட்டேன், அடுத்த மாதம் வெளியிடுவேன்" என்று கூறினார்.
தான் பிறந்தபோது தனக்கு கொடுக்கப்பட்ட ஆடை ஒன்றை கழற்றி எறிய உள்ளதாக ஒரு காணொளியை சமூக வலைதளத்தில் பதிவேற்றினார் அவர். மேலும் அப்பதிவில், இன்று முதல் தான் ஒரு இந்தியன் என்றும், இந்தியாவுக்கு எதிராக எமோஜீக்களைப் பதிவிட்டவர்களுக்கு இதுதான் தனது பதில் என்றும் கூறியுள்ளார். பலரும் கடுமையாக அக்காணொளியை விமர்சித்த பின் அதை நீக்கினார்.
அக்பர், தான் இஸ்லாத்திலிருந்து வெளியேற காரணமான சில சம்பவங்களை சுட்டிக்காட்டினார். "கேரள மாநிலத்தில் பலாவில் உள்ள ஒரு கிராமத்தில் கிறிஸ்துவர்கள் அதிக எண்ணிக்கையில் வசிக்கின்றனர். அந்த கிராமத்தில் ஒருபெரிய தேவாலயமும் இருக்கிறது. இஸ்லாமிய மதஅடிப்படைவாதிகள் எரிடிபெட்டா என்கிற அக்கிராமத்தின் பெயரை அருவிதுரா என்று மாற்றி வைக்க விரும்பினர். அது கிறிஸ்தவ கிராமம் என்பதாலேயே பெயரை மாற்ற விரும்பினர்" என்று கூறினார்.
இஸ்லாமிய கடும்போக்குவாதம் 1970களில் தொடங்கப்பட்டதாகக் கூறுகிறார். "அது வளைகுடா நாடுகளிலிருந்து கேரளத்துக்கு பணம் அனுப்பப்பட வழிவகுத்தது, டன் கணக்கில் கஞ்சா போன்ற போதை பொருட்கள் கேரளத்துக்குள் வந்து கொண்டிருக்கின்றன. அரசோ இதற்கு பொறுப்பானவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் இருக்கிறது. நான் ஒரு தசாப்த காலத்துக்கு முன் குவைத்தில் வாழ்ந்து கொண்டிருந்த போதே இது குறித்து புகாரளித்தேன். லவ் ஜிஹாத் மற்றும் ஹலால் ஜிஹாத் குறித்து நான் முன்பே எச்சரித்தேன்" என்கிறார் அலி அக்பர்.
"இஸ்லாமியர்களோடு மற்ற மதத்தினர் ஒன்றாக அமர்ந்து உணவு சாப்பிடாத, பேச்சு வார்த்தைகளை வவைத்துக் கொள்ளாத காலம் வரும் என நான் முன்பே எச்சரித்திருந்தேன். அப்படி ஒரு சூழல் கேரளத்தில் ஏற்கனவே உருவாக்கப்பட்டுவிட்டது. மற்ற சமூகத்தினர் இஸ்லாமியர்களை சந்தேகத்தோடு பார்க்கத் தொடங்கிவிட்டனர்." என்றார்.
"எங்கள் மதத்தில் ஒருவர் தவறு செய்கிறார் என்றால், உச்சபட்சத் தலைவர்தான் பொறுப்பு. அவர்கள் பிரசாரங்களை மேற்கொள்ள வேண்டும். ஆனால் இங்கு தலைமையிடமிருந்து எந்தவித எதிர்வினையும் இல்லை" என்கிறார் அவர்.
அக்பரின் மனைவி லூசியம்மா கிறிஸ்துவ மதத்தைச் சேர்ந்தவர். அக்பர் மற்றும் லூசியம்மா இருவரும் அடுத்த வாரம் ஆரிய சமாஜத்தில் மத மாற்றத்துக்கு பதிவு செய்ய திட்டமிட்டு வருகின்றனர். மேலும் அடுத்த 20 நாட்களில் இந்து சமயத்துக்கு மாற திட்டமிட்டு வருகின்றனர். "என் குழந்தைகள் முறையே 30 மற்றும் 25 வயதினர் என்பதால், அவர்களை மதம் மாறச் சொல்லவில்லை" என கூறியுள்ளார்.
இந்து மதத்துக்கு ஏன்? ஏன் கிறிஸ்துவத்துக்கு ஏன் மாறவில்லை?
"இந்துத்துவம் என்பது ஒரு மதமல்ல, அது ஒரு கலாச்சாரம். அங்கு நரகம் குறித்த அச்சம் இல்லை. நீங்கள் ஓர் ஆணாக, ஒரு மனிதராக வாழலாம், காரணம் கடவுள் நமக்குள் இருக்கிறார். அது இறைவனைக் காண சிறந்த வழி".
"ராம சிம்மன் என்பவர் தான் கேரளாவில், இஸ்லாத்திலிருந்து இந்து மதத்துக்கு மாறிய முதல் நபர். இந்தியா 1947 ஆகஸ்டில் சுதந்திரம் பெறுவதற்கு சில தினங்களுக்கு முன், அவர் கொல்லப்பட்டார்" எனவே அப்பெயரை தேர்வு செய்ததாகக் கூறினார்.
இதற்கு முன்பும் இஸ்லாமியவாதிகளுக்கு எதிராக அக்பர் சில கருத்துக்களை பேசி சர்ச்சையாகி செய்திகளில் வந்துள்ளார். இந்தியாவின் புகழ்பெற்ற இசையமைப்பாளரான ஏ ஆர் ரஹ்மான் மதம் மாறியதைப் பயன்படுத்தி, இந்துக்களை இஸ்லாத்துக்கு மதம் மாற்றுகிறார்கள் என அவர் 2018ஆம் ஆண்டு கூறியது, பெரும் சர்ச்சையைக் கிளப்பியது. அதற்கு மூன்று ஆண்டுகளுக்கு முன்னர், தான்ஒரு உஸ்தாத் என்றழைக்கப்படும் மதராஸா ஆசிரியரால் பாலியல் ரீதியில் துன்புறுத்தப்பட்டதாகக் குற்றம்சாட்டினார்.
ஆர் எஸ் எஸ் அமைப்பின் கொள்கைகளை பின்பற்றுவதாக உங்கள் மீது குற்றச்சாட்டுகள் எழுகின்றதே? என அவரிடம் கேட்டபோது,
"நான் ஏன் பின்பற்றக் கூடாது? ஆர் எஸ் எஸ் என்பது இந்திய கலாச்சாரப் பிரிவு. அதில் ஒரு இஸ்லாமிய அமைப்பும் இருக்கிறது. அது ஒரு தேசியவாத அமைப்பு" என கூறினார் அலி அக்பர்.
பிற செய்திகள்:
- "உன் மீதான நம்பிக்கையை ஒருபோதும் இழந்துவிடாதே" ஆப்கன் பள்ளி மாணவிக்கு மலாலா எழுதிய கடிதம்
- ஓமிக்ரான்: ஜனவரியில் அடுத்த கொரோனா அலையைக் கொண்டுவருமா?
- நாட்டிய கலைஞர் ஜாகீர் உசேன் ஸ்ரீரங்கம் கோயிலில் இருந்து துரத்தப்பட்டாரா? நடந்தது என்ன?
- ரஜினிகாந்த் பிறந்தநாள்: விரும்பி ஏற்ற கதாப்பாத்திரம் முதல் கடைசி என அறிவித்த படம் வரை
- இலங்கையில் வாகன இறக்குமதி தடை 2022 இறுதி வரை தொடரும்: பொருளாதாரத்தை மீட்க அடுத்தகட்ட நடவடிக்கை என்ன?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்