You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
வேளாண் சட்டங்கள்: சீக்கியர்களைக் குறிவைக்கும் போலி சமூக ஊடகக் கணக்குகள் அம்பலம்
- எழுதியவர், ஷ்ருதி மேனன் மற்றும் ஃப்ளோரா கார்மைக்கெல்
- பதவி, பிபிசி ரியாலிட்டி செக் மற்றும் பிபிசி மானிடரிங்
தங்களைச் சீக்கியர்கள் என கூறிக்கொண்டு பிரிவினைவாதக் கருத்துக்களை சமூக ஊடகங்களில் பரப்பும் நபர்கள் குறித்த விவரங்கள் தற்போது அம்பலமாகியுள்ளன.
பிபிசிக்குப் பிரத்தியேகமாகக் கிடைத்த ஒரு புதிய அறிக்கை புதன்கிழமை வெளியிடப்படுவதற்கு முன்னதாக, இந்த விவகாரத்தில் தொடர்புடைய 80 கணக்குகளை அடையாளம் கண்டுள்ளன. அவை போலியானவை என்பதால் தற்போது நீக்கப்பட்டுள்ளன.
இந்து தேசியவாதம் மற்றும் இந்திய அரசு சார்புக் கருத்துகளைப் பரப்ப, ட்விட்டர், ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் கணக்குகள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
இந்த விவகாரத்தின் நோக்கம், "சீக்கிய சுதந்திரம், மனித உரிமைகள் மற்றும் விழுமியங்கள் போன்ற முக்கிய பிரச்சனைகள் பற்றிய கோணத்தை மாற்றுவது" என அறிக்கையின் ஆசிரியர் பெஞ்சமின் ஸ்ட்ரிக் கூறுகிறார்.
இந்த நெட்வொர்க்குக்கும் இந்திய அரசுக்கும் தொடர்பு இருப்பதற்கான எந்தவித ஆதாரமும் இல்லை. இந்த விவகாரம் தொடர்பாக இந்திய அரசிடம் கருத்து கேட்டது. ஆனால், இதுவரை அரசிடம் இருந்து எந்த பதிலும் வரவில்லை.
'சாக் பப்பெட்ஸ்'
இந்த நெட்வொர்க் சாக் பப்பெட் என்கிற கணக்குகளைப் பயன்படுத்தின. இந்த போலி கணக்குகள் தானியங்கி பாட்கள் இல்லாமல் மனிதர்களால் கட்டுப்படுத்தப்படும் பொய்க் கணக்குகள் ஆகும்.
இந்தப் போலி கணக்குகள் சீக்கியப் பெயர்களில் செயல்பட்டுத் தங்களை உண்மையான சீக்கியர் போல பறை சாற்றிக்கொள்கின்றன. வெவ்வேறு அரசியல் கருத்துகளை ஆதரிக்க #RealSikh என்றும், புறக்கணிக்க #FakeSikh என ஹேஷ் டேகுகளைப் பயன்படுத்துகின்றன.
சென்டர் ஃபார் இன்ஃபர்மேஷன் ரெசிலியன்ஸ் (சிஐஆர்) என்கிற லாப நோக்கற்ற நிறுவனம் வெளியிட்ட அந்த அறிக்கையில், இந்த நெட்வொர்க்கில் உள்ள பல கணக்குகள் பல தளங்களில் ஒரே மாதிரியான போலியான சுயவிவரங்களைப் பயன்படுத்துவதைக் கண்டறிந்துள்ளது. இந்தக் கணக்குகள் ஒரே மாதிரியான பெயர்கள், சுயவிவரப் படங்கள் ஆகியவற்றையே பயன்படுத்தின. பதிவுகளும் அனைத்துச் சமூக ஊடகத் தளங்களிலும் ஒன்று போலவே இருந்தன.
பல கணக்குகள் பஞ்சாபி திரையுலகில் உள்ள நடிகைகள் உட்பட பிரபலங்களின் சுயவிவரப் படங்களைப் பயன்படுத்தின.
ஒரு பிரபலத்தின் சுயவிவரப் படத்தைப் பயன்படுத்துவதால் மட்டுமே ஒரு கணக்கைப் போலியானது என்று உறுதியாகக் கூறிவிடமுடியாது. இருப்பினும், ஒருங்கிணைக்கப்பட்ட செய்திப் பரிமாற்றம், அடிக்கடி பயன்படுத்தப்படும் ஹேஷ்டேகுகள், ஒரே மாதிரியாஅ சுயவிவர விளக்கங்கள், பின்தொடர்வோர் விவரங்கள் ஆகியவற்றுடன் இணைத்துப் பார்க்கும் போது, இந்தக் கணக்குகள் ஒவ்வொன்றும் உண்மையானவை அல்ல என்பதற்கான ஆதாரத்தை உறுதி செய்வதாக அந்த அறிக்கை கூறுகிறது.
படங்கள் பயன்படுத்தப்பட்ட எட்டு பிரபலங்களைத் தொடர்பு கொள்ள பிபிசி முயற்சித்தது. தனது படம் இவ்வாறு பயன்படுத்தப்பட்டது குறித்து தங்களுக்குத் தெரியாது என்றும் இது குறித்து நடவடிக்கை எடுக்க விரும்புவதாகவும் தனது நிர்வாகத்தின் மூலம் கூறினார் ஒருவர்.
மற்றொரு பிரபலத்தின் நிறுவனம், தங்கள் வாடிக்கையாளருடன் தொடர்புடைய ஆயிரக்கணக்கான போலி கணக்குகள் இருப்பதாகவும், அதைக்கட்டுப்படுத்தத் தங்களால் முடியவில்லை என்றும் கூறியது.
அரசியல் காரணங்கள்
ஓராண்டாகத் தொடர்ந்து நடந்த போராட்டத்திற்குப் பிறகு, வெள்ளிக்கிழமையன்று, இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி, சர்ச்சைக்குரிய அந்த மூன்று வேளாண் சட்டங்களைத் திரும்பப்பெறுவதாக அறிவித்தார்.
ஓராண்டு காலத்திற்கு முன் இதே காலகட்டத்தில் தொடங்கிய விவசாயிகளின் போராட்டங்கள் மற்றும் பல தசாப்தங்கள் பழமையான காலிஸ்தான் விடுதலை இயக்கம் ஆகியவை இந்த நெவொர்க்கில் அடிக்கடி குறிவைக்கப்பட்ட இரண்டு விவாதப் பொருட்களாக உள்ளன.
சீக்கிய சுதந்திரம் பற்றிய எந்தவொரு கருத்தையும் தீவிரவாதம் என்றும், விவசாயிகள் போராட்டங்கள் "காலிஸ்தான் பயங்கரவாதிகளால்" இயக்கப்படுவதாகவும் முத்திரை குத்தி அவற்றைச் சட்டப்பூர்வமாக நீக்கவும் இந்தக் கணக்குகள் முயன்றன என்று இந்த அறிக்கை தெரிவிக்கிறது.
ஆனால் இதற்கு முன்னரே, இந்திய அரசும் விவசாயிகளின் போராட்டம் "காலிஸ்தானிகளால் ஊடுருவப்பட்டது" என்று கூறியது. இது திட்டமிட்ட அரசியல் நடவடிக்கையாக இருக்கலாம் என தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகள் கருதுகின்றனர்.
"இந்தக் கணக்குகள் அரசாங்கத்தின் உத்தரவின் பேரில் உருவாக்கப்பட்டதாகவே நாங்கள் நம்புகிறோம், மேலும் இது போராட்டங்களுக்கு எதிரான ஒரு கோணத்தை உருவாக்கவே செய்யப்பட்டதாகவும் கருதுகிறோம்" என்று போராடும் 30 யூனியன்களில் ஒன்றான பாரதிய கிசான் யூனியனின் தலைவரான ஜக்ஜித் சிங் தலேவால் கூறினார்.
சில கணக்குகள் பிரிட்டன் மற்றும் கனடாவில் உள்ள புலம்பெயர் சமூகங்களை காலிஸ்தானி இயக்கத்திற்குப் புகலிடமாக சித்தரித்தன.
இந்தக் கணக்குகளுக்கு ஆயிரக்கணக்கான பின்தொடர்பவர்கள் இருந்தனர். மேலும் இந்த நெவொர்க்கின் பதிவுகள், உண்மையாகவே ஆளுமை செலுத்துபவர்களால் விரும்பப்பட்டு மீண்டும் ட்வீட் செய்யப்பட்டு செய்தி தளங்களில் மேற்கோள் காட்டப்பட்டுள்ளன.
தாக்கமும் செல்வாக்கும்
இவ்வாறு செல்வாக்கு செலுத்த முயலும் பல முயற்சிகளில், இந்தக் கணக்குகளுடன் தொடர்பு கொள்பவர்கள் பெரும்பாலும் உண்மையான மனிதர்களாக இருப்பதில்லை. ஆனால் இந்த நெட்வொர்க்கை பொருத்தவரை, பிரபலமானவர்களின் சரிபார்க்கப்பட்ட கணக்குகள் மூலம் தொடர்புகொள்ளப்பட்டு அங்கீகரிக்கப்பட்ட இடுகைகளை இந்த ஆய்வு அடையாளம் கண்டுள்ளது.
இந்தப் போலிக் கணக்குகளின் பதிவுகள் செய்தி வலைப்பதிவுகள் மற்றும் வர்ணனைத் தளங்களிலும் இடம்பெற்றுள்ளதை இந்த அறிக்கை அடையாளம் கண்டுள்ளது.
வல்லுநர்கள் இதை "ஆம்ப்ளிஃபிகேஷன்(பெரிதாக்குதல்)" என்று குறிப்பிடுகிறார்கள். மேலும் இதில் அதிகத் தொடர்புகள் இருப்பது அதிக தாக்கத்துக்கு வழிவகுக்கும்.
இந்த நெட்வொர்க்கின் தொடர்பில் உள்ள சில சரிபார்க்கப்பட்ட கணக்குகளைக் கொண்டவர்களை பிபிசி தொடர்பு கொண்டது.
ட்விட்டரில் தன்னை ஒரு மனிதாபிமானி மற்றும் சமூக சேவகர் என்று குறிப்பிட்டிருக்கும் ரூபிள் நாகி, போலிக் கணக்குகளின் ட்வீட் ஒன்றிற்கு இரண்டு கைதட்டல் எமோஜிகளுடன் பதிலளித்திருந்தார். "இது ஒரு போலி கணக்கு என்பது வருத்தமாக உள்ளது" என்று அவர் கூறினார்.
தன்னை ஒரு புவிசார் அரசியல் ராணுவ ஆய்வாளர் என்று கூறும் கர்னல் ரோஹித் தேவ், இந்தக் கணக்குகளின் இடுகைகளில் ஒன்றிற்கு தம்ஸ்-அப் எமோஜிகளுடன் பதிலளித்தார், ஆனால் இந்தக் கணக்குக்குப் பின்னால் இயங்குபவரைத் தனக்குத் தெரியாது என்று எங்களிடம் கூறினார்.
டிஜிட்டல் உரிமை ஆர்வலரும் தொழில்நுட்பக் கொள்கை இணையதளமான மீடியாநாமாவின் ஆசிரியருமான நிகில் பாஹ்வா, இது போன்ற நெட்வொர்க்குகள், ஒரு குறிப்பிட்ட கண்ணோட்டத்தைக் கொண்ட தனிநபர்களைக் குறிவைக்கின்றன என்று கூறுகிறார்.
"இந்த 80க்கும் மேற்பட்ட கணக்குகள் எந்தப் பெரிய மாற்றத்தையும் ஏற்படுத்த முடியாது என்றாலும், தொடர் பதிவுகளின் மூலம், அவை ஒரு கண்ணோட்டத்தை இழிவுபடுத்த முயற்சிக்கின்றன," என்று அவர் கூறினார்.
"இது ஒரு அதிநவீன அணுகுமுறையாகவும் ஒரு பெரிய செயல்பாட்டின் ஒரு பகுதியாகவும் தெரிகிறது." என்றும் அவர் கூறினார்.
சீக்கியர்களின் தாய்மொழியான பஞ்சாபியை அதிகம் பயன்படுத்தாமல் அனேக பதிவுகள் ஆங்கிலத்தில் தான் இருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
அனைத்துத் தரப்பிலிருந்தும் விவசாயிகளின் போராட்டங்களைச் சுற்றி அரசியல் செயல்பாடுகள் இருந்ததாகவும், அவர்களை ஆதரிக்கவும், புறக்கணிக்கவும் இருதரப்பிலும் முயற்சிகள் நடந்ததாகவும் பாஹ்வா சுட்டிக்காட்டுகிறார்.
"அரசியல் கருத்துருவாக்கப் போரில் இது ஒரு பகுதி" என்று அவர் கூறுகிறார்.
பிபிசி இந்த அறிக்கையை ட்விட்டருடனும் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராமின் உரிமையாளரான மெட்டா நிறுவனத்துடனும் பகிர்ந்து கொண்டு, கருத்து கோரியது.
"தளத்தைத் தவறாகப் பயன்படுத்துதல்" மற்றும் போலி கணக்குகள் விதிகளை மீறியதற்காக ட்விட்டர் இந்தக் கணக்குகளை முடக்கியது.
ஒரு ட்விட்டர் செய்தித் தொடர்பாளர், "இந்த நேரத்தில், பரவலான ஒருங்கிணைப்பு, ஒற்றை நபர் பல கணக்குகளைப் பயன்படுத்துதல் அல்லது பிற முறைகேடுகள் ஆகியவற்றுக்கான எந்த ஆதாரமும் இல்லை." என்றார்.
மெட்டா "முறையற்ற நடத்தை" கொள்கைகளை மீறியதற்காக ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமில் உள்ள கணக்குகளையும் நீக்கியது.
மெட்டா செய்தித் தொடர்பாளர், இந்தக் கணக்குகள், தங்கள் உள்ளடக்கத்தின் தோற்றம் மற்றும் பிரபலத்தைப் பற்றி மக்களை தவறாக வழிநடத்தின என்றும் ஆள் மாறாட்டம் செய்வதற்கும் எங்கள் நடவடிக்கைகளைத் தவிர்ப்பதற்கும் பயன்படுத்தப்பட்டன என்றும் குறிப்பிட்டார்.
பிற செய்திகள்:
- கிரிப்டோகரன்சி என்றால் என்ன, நாடாளுமன்றத்தில் அது தொடர்பாக என்ன மசோதா அறிமுகப்படுத்தப்பட உள்ளது?
- சட்ட வரலாறு: நீதிபதிகளை சட்டமன்றத்தால் கைதுசெய்ய முடியுமா?
- ஐபோன் ஹேக்கிங் சர்ச்சை: இஸ்ரேலிய நிறுவனத்துக்கு எதிராக வழக்கு தொடர்ந்த ஆப்பிள் நிறுவனம்
- தமிழ்நாட்டில் 'கட்டாய' கொரோனா தடுப்பூசியில் இருந்து விலக்கு பெற முடியுமா?
- ஆறு வழிகளில் உலகை மாற்ற முயற்சிக்கும் சிறு செயற்கைக்கோள்கள்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்