"சேலம் கட்டடம் இடிந்து விழுந்த சம்பவம்: பலி எண்ணிக்கை 6 ஆக உயர்வு

சேலத்தில் வீட்டு கேஸ் சிலிண்டர் வெடித்ததில் நான்கு வீடுகள் தரைமட்டமான சம்பவத்தில் ஐந்து பேர் உயிரிழந்த நிலையில், மேலும் ஒருவர் இன்று இறந்துள்ளார். இதனால் பலி எண்ணிக்கை ஆறு ஆக உயர்ந்துள்ளது.

90 சதவீத தீக்காயங்கள் ஏற்பட்டு மிகவும் ஆபத்தான நிலையில் இருந்தவர் இன்று இறந்துள்ளதாக தெரிய வந்துள்ளது.

கட்டடம் இடிந்து தரைமட்டமான சம்பவத்தில் 15க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

சேலம் கருங்கல்பட்டி பாண்டுரங்கன் கோவில் தெரு பகுதியில் ஏராளமான தனியார் குடியிருப்புகள் உள்ளன. அங்கு வெங்கட்ராஜன் என்பவரின் கட்டடத்தில் கணேசன், பத்மநாபன், கோபி ,முருகன் ஆகிய நான்கு குடும்பங்கள் வாடகைக்கு குடியிருந்து வருகின்றன.

இந்த நிலையில் கோபி வீட்டில் அவரது மனைவி ராஜலட்சுமி இன்று காலை வழக்கம்போல் சமையல் செய்வதற்காக கேஸ் அடுப்பை பற்ற வைத்துள்ளனர். அப்போது பயங்கர சத்தத்துடன் சிலிண்டர் வெடித்தது.

இதில் கோபி வீடு, அவரது அருகில் இருந்த வீடு, மேல்தளத்தில் இருந்த இரண்டு வீடுகள் என நான்கு வீடுகளும் இடிந்து விழுந்து தரைமட்டமாகின.

மேலும் சிலிண்டர் வெடித்துச் சிதறியபோது உடைந்த கட்டட பாகங்கள் அல்லது கற்கள் சாலையில் இருந்த பால்காரர் மற்றும் அருகே கோலம் போட்டு கொண்டிருந்த தனலட்சுமி என்பவரின் மீது விழுந்ததில் இருவரும் பலத்த காயமடைந்தனர். இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து இருவரையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த செவ்வாய்பேட்டை தீயணைப்பு துறையினர், காவல்துறையினர் மற்றும் பொதுமக்கள் இணைந்து இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

இதில் சுதர்சன், கோபால், சுப்பிரமணி, தனலட்சுமி, நாக சுதா, இந்திராணி, மோகன்ராஜ், கோபி, லோகேஷ், ராஜலட்சுமி , பூஜாஸ்ரீ,வெங்கடராஜன் உள்ளிட்ட 12 பேர் சேலம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.

அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 80 வயதான ராஜலட்சுமி என்பவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் போது வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். 

நவம்பர் 24ஆம் தேதி, இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களின் நிலை குறித்து சேலம் அரசு மோகன் குமாரமங்கல மருத்துவ கல்லூரிமருத்துவமனை மருத்துவ கண்காணிப்பாளர் தனபாலிடம் கேட்டபோது, இதுவரை ஐந்து பேர் இறந்துள்ளனர் என்று கூறினார்.

"தற்போது மருத்துவமனையில் ஏழு ஆண்கள் , நான்கு பெண்கள் , ஒரு சிறுமி , ஒரு சிறுவன் உட்பட 13 சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் தனலட்சுமி , முருகன் உட்பட மூன்று பேருக்கு எலும்புமுறிவு ஏற்பட்டுள்ளது . மற்றவர்களுக்கு தீக்காயம் , சில இடங்களில் உடலில் சிதைவும் ஏற்பட்டுள்ளது. கோபி 90 சதவீத தீக்காயங்கள் ஏற்பட்டு மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளார். அனைவருக்கும் சிறந்த முறையில் சிகிச்சையளித்து வருகிறோம்," என்று தெரிவித்தார்.

தொடர்ந்து நடைபெற்ற மீட்புப் பணியின்போது முருகன் என்பவரது 10 வயது மகள் பூஜாஸ்ரீ என்ற சிறுமி காயத்துடன் மீட்கப்பட்டார்.

மேலும் தீயணைப்பு துறையில் பணிபுரிந்து வரும் பத்மநாபன் அவரது மனைவி தேவி மற்றும் பூஜாஸ்ரீயின் அண்ணன் கார்த்திக் ராம் ஆகிய மூன்று பேரும் இடிபாடுகளில் சிக்கி உள்ளனர். அவர்களை மீட்கும் பணி தொடர்ந்து 6 மணி நேரமாக நடைபெற்று வந்த நிலையில் இடிபாடுகளில் சிக்கிய தீயணைப்புத்துறை சிறப்பு அலுவலர் பத்மநாபன் அவரது மனைவி தேவி மற்றும் கார்த்திக் ராம், எல்லம்மாள் ஆகியோர் சடலமாக மீட்கப்பட்டனர்.

மீட்பு பணியில் 55 பேர் ஈடுபட்டு இருப்பதாகவும் இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை பத்திரமாக மீட்கும் பொருட்டு மிகுந்த எச்சரிக்கையுடன் மீட்பு பணிகள் நடைபெற்று வருவதாகவும் சேலம் மாவட்ட ஆட்சித்தலைவர் கார்மேகம் தெரிவித்தார்.

மேலும் அவர், விபத்து குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் அதன் முடிவிலேயே விபத்துக்கான முழு விவரம் தெரியவரும் என்றும் அவர் கூறினார்.

இதற்கிடையே, இந்த சம்பவம் பற்றி கேள்விப்பட்ட பலர், வெவ்வேறு பகுதிகளில் இருந்து வந்ததால் அந்த பகுதியில் கூட்டம் அதிகமானது.

இந்த சம்பவம் தொடர்பாக செவ்வாப்பேட்டை காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

அமைச்சர் நேரில் ஆய்வு

சேலம் கருங்கல்பட்டி ஆண்டு ரங்கநாதர் கோவில் தெருவில் எரிவாயு சிலிண்டர் வெறித்த கோர விபத்தில் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த நிலையில் விபத்து நடந்த பகுதியை தமிழக நகர்புற நிர்வாகத் துறை அமைச்சர் கே என் நேரு நேரில் பார்வையிட்டார்.பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் நேரு எரிவாயு கசிவு ஏற்பட்டதால் நேர்ந்த விபத்தில் நான்கு வீடுகள் சேதம் அடைந்து 5 பேர் இறந்துள்ளனர். 13 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இடிபாடுகளில் வேறு யாரும் சிக்கி உள்ளனரா? என பார்க்க அரக்கோணத்தில் இருந்து தேசிய பேரிடர் மீட்பு படையினர் வரவழைக்கப்பட்டு உள்ளனர் என்று கூறினார்.

விபத்து குறித்து முதலமைச்சருக்கு தெரிவித்து உயிரிழந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்களுக்கு அரசு சார்பில் உதவி வழங்க ஏற்பாடு செய்யப்படும். வணிக எரிவாயு சிலிண்டர் பயன்படுத்தி பலகாரம் செய்த போது தான் விபத்து நடந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனால் வணிக எரிவாயு சிலிண்டர்களை வீடுகளில் வைத்து பலகாரம் செய்வதை கண்காணித்து அதைத் தடுக்க அதிகாரிகளிடம் அறிவுறுத்தப்பட்டுள்ளது.மேலும், வணிக எரிவாயு சிலிண்டர் உரிய பாதுகாப்பு இல்லாமல் வீடுகளில் வைக்கப்பட்டிருந்தால் அகற்றவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது என்றார் அமைச்சர் நேரு.சேலம் மாநகராட்சி பகுதி முழுவதும் இதுபோன்ற கமர்சியல் சிலிண்டர்கள் வீடுகளில் யாரும் பயன்படுத்துகிறார்களா? என்று பார்க்கவும் அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டு உள்ளது.இனி இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் இருக்க அனைத்து நடவடிக்கையும் அதிகாரிகள் மூலம் எடுக்கப்படும் என்றும் அமைச்சர் நேரு தெரிவித்தார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :