You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
அஜித் பவார் தொடர்புடைய 1000 கோடி ரூபாய் சொத்துகளை முடக்கிய வருமான வரித்துறை
மகாராஷ்டிர மாநில துணை முதலமைச்சர் அஜித் பவார் தொடர்புடைய நிறுவனங்களுக்குச் சொந்தமான 1,000 கோடி ரூபாய்க்கும் மேலான சொத்துகள் முடக்கப்பட்டிருப்பதாக வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.
முடக்கப்பட்டுள்ள சொத்துகள் அனைத்தும் முறைகேடாக சம்பாதித்த பணத்தைக் கொண்டு வாங்கப்பட்டவை என்று வருமான வரித்துறை குற்றம்சாட்டுகிறது.
தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர் அஜித் பவார். இவர் தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத் பவாரின் அண்ணன் மகன்.
முடக்கப்பட்ட நிறுவனங்கள் அனைத்தும் முறையாக வருமான வரியை செலுத்தியுள்ளதாக அஜித் பவார் தெரிவித்துள்ளார்.
மும்பை நாரிமன் பாயின்டடில் உள்ள நிர்மல் டவர் உள்பட 5 கட்டடங்கள் உள்ளிட்ட சொத்துக்கள் இவ்வாறு முடக்கப்பட்டிருப்பதாக ஏ.என்.ஐ செய்தி முகமை தெரிவிக்கிறது.
தெற்கு மும்பை பகுதியில் உள்ள, அஜித் பவாரின் மகன் பர்த் பவாரின் அலுவலகம், டெல்லியிலுள்ள அடுக்குமாடி குடியிருப்பு வளாகம் ஒன்றில் இருக்கும் வீடு, கோவாவில் இருக்கும் ஒரு ரிசார்ட், ஒரு சர்க்கரை ஆலை மற்றும் வேளாண் நிலங்கள் ஆகியவையும் முடக்கப்பட்ட சொத்துகளில் அடக்கம்.
அஜித்தின் சகோதரிகளின் வீடுகளில் கடந்த மாதம்தான் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். அவர் தொடர்புடைய இடங்களில் நடத்தப்பட்ட சோதனைகளில் கணக்கில் வராத 184 கோடி ரூபாய் கண்டறியப்பட்டதாக வருமான வரித்துறை அப்பொழுது தெரிவித்தது. அந்த வழக்கிலேயே தற்பொழுது சொத்துகள் முடக்கப்பட்டிருக்கின்றன.
அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சி, சிவசேனை மற்றும் காங்கிரஸ் கட்சி ஆகியவற்றுடன் இணைந்து மகாராஷ்டிராவில் கூட்டணி ஆட்சி நடத்தி வருகிறது.
"இந்த நடவடிக்கைகள் ஏற்கனவே முடிவு செய்யப்பட்டவைதான். மகாராஷ்டிரா விகாஸ் அங்காடி கூட்டணியைச் (தேசியவாத காங்கிரஸ், சிவசேனை மற்றும் காங்கிரஸ்) சேர்ந்த முக்கிய தலைவர்கள் மத்திய விசாரணை அமைப்புகளால் அச்சுறுத்தப்படுகிறார்கள். அஜித் பவாருக்கு நெருக்கமானவர்களுக்கு எதிராக இன்று நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பாரதிய ஜனதா கட்சியைச் சார்ந்தவர்கள் காட்டிலா வாழ்கிறார்கள்? அவர்களுக்கு சொத்துகள் எதுவும் இல்லையா அல்லது அவை முறைகேடாக வாங்கப்படவில்லையா?" என்று சிவசேனை கட்சியைச் சார்ந்த சஞ்சய் ராவத் வருமானவரித் துறை நடவடிக்கைக்கு கடுமையாக எதிர்வினை ஆற்றியுள்ளார்.
மத்திய அமலாக்கத் துறைக்கு பலரின் முறைகேடுகள் குறித்து நாங்கள் தகவல் தெரிவித்துள்ளோம். ஆனால் அவர்கள் யாரையும் இன்னும் அமலாக்கத்துறை தொடக்கூட இல்லை என்றும் சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார்.
2019ல் இரு முறை துணை முதல்வர் பதவியேற்ற அஜித் பவார்
2019ஆம் ஆண்டு நடந்த மகாராஷ்டிர சட்டப்பேரவை தேர்தலில் பாரதிய ஜனதா மற்றும் சிவசேனை ஆகிய கட்சிகள் இடையே முதல்வர் பதவி யாருக்கு என்பது தொடர்பாக நீடித்த இழுபறியால் உடனே ஆட்சி அமைக்க முடியவில்லை.
சரத் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சி, சிவசேனை ஆட்சியமைக்க ஆதரவு தருவது என்று முடிவு செய்த நிலையில், திடீரென இரவோடு இரவாக பாஜக ஆட்சி அமைப்பதற்கு ஆதரவு தெரிவித்த அஜித் பவார் துணை முதல்வர் பதவியையும் ஏற்றுக் கொண்டார். ஆனால், சரத் பவாரும், அந்தக் கட்சியை சேர்ந்த பெரும்பான்மை எம்.எல்.ஏ.க்களும் அஜித் பவாரின் முடிவை ஏற்றுக்கொள்ளவில்லை.
தேசியவாத காங்கிரஸ் அதிகாரபூர்வமாக ஆதரவு அளிக்காத நிலையில், அந்தக் கட்சியின் ஆதரவு தங்களுக்கு இருப்பதாகத் தெரிவித்து பாஜக அளித்த கடிதத்தை ஏற்று அதிகாலை நேரத்தில் மகாராஷ்டிரத்தில் அமலில் இருந்த குடியரசுத் தலைவர் ஆட்சி விலக்கிக் கொள்ளப்பட்டு, ஆட்சியமைப்பதற்கு பாஜகவின் தேவேந்திர பட்னவிசுக்கு அழைப்பு விடுத்தார் ஆளுநர். தேவேந்திர பட்னவிஸ் முதல்வராகவும், அஜித் பவார் துணை முதல்வராகவும் பதவியேற்றனர்.
இதனை எதிர்த்து சிவசேனை, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் ஆகியவை உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தன. இதனை விசாரித்த உச்சநீதிமன்றம் வாக்கெடுப்பு நடத்த உத்தரவிட்டது. இந்நிலையில், தேவேந்திர பட்னவிஸ், அஜித் பவார் ஆகியோர் வாக்கெடுப்புக்கு முன்னரே பதவி விலகினார்.
நான்கு நாட்கள் மட்டுமே நீடித்த பாஜக அரசில் துணை முதல்வராக இருந்த அஜித் பவார், தம் மீதான ஊழல் வழக்குகளை ரத்து செய்ய வைத்தார். அடுத்த நாளே மீண்டும் தமது கட்சிக்குத் திரும்பி, சரத் பவாருடன் நல்லிணக்கம் ஆனார். பின்னர் சிவசேனை தலைவர் உத்தவ் தாக்ரே முதல்வரானபோது, அந்தக் கூட்டணி அரசிலும் துணை முதல்வரானார்.
பிற செய்திகள்:
- பருவநிலை மாநாட்டில் இந்தியாவுக்கு கிடைக்கப் போவது என்ன?
- 2070-இல் இந்தியா பூஜ்ய உமிழ்வு இலக்கை அடையும்: உலகத்துக்கு மோதியின் 5 வாக்குறுதிகள்
- இலங்கை ஜனாதிபதி செயலணியில் தமிழர்கள் இல்லாதது ஏன்? - அரசின் பதில்
- கிளாஸ்கோ COP26 மாநாட்டில் மாநாட்டில் அதிகம் கவனம் பெறும் 5 பேர்
- 10.5% உள் ஒதுக்கீடு ரத்து: தி.மு.க மீது பாயும் வன்னியர் அமைப்புகள்
- ஜெய் பீம் - சூர்யா படத்தின் சினிமா விமர்சனம்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்