ஐபிஓக்களில் முதலீடு செய்வது லாபகரமானதா? ஆனந்த ஸ்ரீனிவாசன் விளக்கம்

பங்குச் சந்தை முதலீடு, சேமிப்பு, காப்பீடு போன்ற நிதி விவாகரங்கள் குறித்து ஒவ்வொரு வாரமும் பிபிசி தமிழுக்கென பிரத்யேகமாகப் பேசுகிறார் பொருளாதார நிபுணர் ஆனந்த் ஸ்ரீநிவாசன். IPO எனப்படும் தொடக்கப் பங்கு வெளியீடு விற்பனையில் சிறிய முதலீட்டாளர்கள் பங்கேற்கலாமா என்பது குறித்துப் விவரிக்கிறார்.

ஒரு நிறுவனம் பங்குச் சந்தையில் நுழைவதற்காக, ஆரம்பகட்ட பங்கு விற்பனையை (Initial Public Offer) அறிவிக்கும்போது, அதில் முதலீடு செய்ய வேண்டுமென்றால் என்னவெல்லாம் கவனிக்க வேண்டுமென்ற கேள்வி பலரிடமும் இருக்கிறது. அதை பலரும் தாயம் விழும் ஆட்டமாகத்தான் பார்க்கிறார்கள். இந்த முறை தாயம் விழுந்தால் நல்லது என நினைக்கிறார்கள். ஆனால், அதனை யாரும் சொல்ல முடியாது.

உதாரணமாக, உணவு டெலிவரி செய்யும் ஒரு நிறுவனம். அது நிச்சயம் லாபம் ஈட்டாது. ஆனால், முதலில் 75 ரூபாய்க்கு விற்று, பிறகு 145, 160 என்று உயர்ந்துகொண்டே போய் இப்போது 135 ரூபாய்க்கு விற்கிறது. பெரும்பாலான பங்குகளை உரிமையாளர்தான் வைத்துள்ளார்.

வாடகைக் கார் செயலி நிறுவனம் ஒன்று, அதன் பங்குகளை வைத்திருந்த உரிமையாளர்கள் தங்கள் பங்குகளை சந்தையில் விற்றுவிட்டுச் சென்றுவிட்டார்கள். ஆனால், அந்த நிறுவனம் ஒரு போதும் லாபமீட்டியதில்லை. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக அந்த நிறுவனத்தின் பங்கு என்ன விலையில் விற்றதோ, அதே விலையில்தான் விற்கிறது. அதனால், புதிதாக வரும் நிறுவனங்களின் பங்குகளை வாங்கும்போது ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.

இப்போது ஒரு பிரபல நிறுவனம் பங்குச் சந்தைக்கு வருகிறதென்றால், வங்கியல்லாத பல நிறுவனங்கள் பெரிய அளவில் கடன் தர முன்வருகின்றன. அந்தக் கடனை 18 சதவீத வட்டியில் வாங்கி, இந்த புதிய நிறுவன பங்குகளை வாங்குகிறார்கள். அந்தப் பங்கு பெரும் வெற்றிபெற்றால், உடனடியாக அந்தப் பங்குகளை விற்றுவிட்டு, லாபத்தை முதலீட்டாளர் எடுத்துக் கொள்ளலாம். கடன் கொடுத்த நிறுவனத்திற்கு கடனையும் 18 சதவீத வட்டியையும் செலுத்தினால் போதும் என்கிறார்கள்.

ஆனால், பங்குகள் எதிர்பார்த்த விலைக்கு விற்காமல் போனால் பெரும் இழப்பு ஏற்படும். மொத்த பணமும்கூட போய்விடும். இந்த நிலையில்தான் இப்போது இந்திய ரிசர்வ் வங்கி ஒரு விதியை வகுத்திருக்கிறது. அதாவது, இம்மாதிரி நிறுவனங்கள் ஒரு நபருக்கு ஒரு கோடிக்கு மேல் இம்மாதிரி கடன்களை வழங்கக்கூடாது என்று சொல்லியிருக்கிறது.

இம்மாதிரி நிறுவனங்கள் வங்கிகளிடமிருந்து 4 - 6 சதவீத வட்டிக்குக் கடனை வாங்கி, அதனை இம்மாதிரி சிறிய முதலீட்டாளர்களுக்கு 18 சதவீத வட்டிக்குக் கொடுக்கின்றன. ஒரு சில பங்குகளில் லாபம் பார்க்கும் சிறிய முதலீட்டாளர்கள், அதே போன்ற லாபம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில், கடனை வாங்கி புதிய பங்குகளில் முதலீடு செய்கிறார்கள். ஆனால், எதிர்பார்த்த லாபம் கிடைக்கிவிட்டால் அவ்வளவுதான்.

இப்போது மறுபடியும் பிட்காயின் குறித்து கேள்வியெழுப்பப்படுகிறது. பிட்காயினின் விலை வீழ்ந்தபோது அதைப் பற்றி மோசமாகச் சொன்னீர்களே, இப்போது விலை வெகுவாக உயர்ந்திருக்கிறதே எனக் கேட்கிறார்கள். இப்போது விலை உயர்ந்திருப்பதற்குக் காரணம் இருக்கிறது.

பிட் காயின்களை வைத்து ETF முதலீடுகளைச் செய்யலாம் என அமெரிக்க பங்குச் சந்தை கூறியிருக்கிறது. ஆனால், இந்தியாவில் அப்படி கண்காணிப்பாளர் (Regulator) என யாரும் இல்லை. விளம்பரங்களிலேயே அதைச் சொல்லியிருக்கிறார்கள். அப்படியெனில், இது ஒரு ஈமு கோழி என்று அர்த்தம். இந்த நிறுவனங்கள் திடீரென காணாமல் போய்விட்டால் யாரையும் கேட்க முடியாது. இது ஒரு உலகளாவிய ஈமு கோழி திட்டம். என்றைக்கு சரியுமென இப்போது சொல்ல முடியாது.

அவரது வீடியோ வடிவிலான ஆலோசனைகளைக் கேட்க:

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :