You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
தமிழ்நாடு அரசியல்: துரை வையாபுரிக்கு பதவி கேட்கும் நிர்வாகிகள்; ரசிக்காத வைகோ - என்ன நடக்கிறது மதிமுகவில்?
- எழுதியவர், ஆ. விஜயானந்த்
- பதவி, பிபிசி தமிழ்
மதிமுகவில், `வைகோவின் மகன் துரை வையாபுரிக்கு பதவி கொடுக்க வேண்டும்' என்ற குரல்கள் வலுப்பெற்றுள்ளன. `அரசியல் வாழ்க்கையில் தான் அடைந்த சிரமங்களை தன் குடும்பத்தினரும் பெற்றுவிடக் கூடாது என வைகோ நினைக்கிறார். ஆனால், அது கடந்து போக வேண்டிய ஒன்று' என்கிறார் மதிமுக துணைப் பொதுச்செயலாளர் மல்லை சத்யா. என்ன நடக்கிறது ம.தி.மு.கவில்?
தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலுக்கு முன்பிருந்தே மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் மகன் துரை வையாபுரி, பல மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வந்தார். மதிமுக தொண்டர்களின் வீடுகளில் நடக்கும் சுப நிகழ்ச்சிகள், துக்க காரியங்கள் என அனைத்திலும் அவர் பங்கேற்றார். இதுதவிர, தந்தையின் வழியில் வெளிநாடுகளில் துன்பப்படும் தமிழர்களை மீட்டுக் கொண்டு வருவதிலும் சமூக சேவையிலும் மிகுந்த ஆர்வம் காட்டி வந்தார். தவிர, உடல்நலக் குறைவால் வைகோ அவதிப்பட்டு வந்ததால், அவரால் செல்ல முடியாத நிகழ்வுகளிலும் துரை வையாபுரி பங்கேற்றதை அக்கட்சியின் தொண்டர்கள் வரவேற்றனர்.
என்னோடு அரசியல் போகட்டும்
சட்டப்பேரவை தேர்தலின்போது, `தேர்தலில் துரை நிற்க வேண்டும்' என்ற குரல்கள் எழுந்தன. அதற்கு வைகோவிடம் இருந்து எந்தப் பதிலும் வரவில்லை. அவரை கட்சிப் பதவிக்கு முன்னிறுத்துவதிலும் வைகோ ஆர்வம் காட்டவில்லை. இந்நிலையில், கடந்த 9ஆம் தேதி தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் அருகே உள்ள குருவிகுளம் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட கலிங்கப்பட்டி ஊராட்சியில் உள்ள வாக்குச்சாவடியில் மகன் துரை வையாபுரியுடன் சென்று வைகோ வாக்களித்தார்.
அப்போது தனது மகன் அரசியலுக்கு வருவது குறித்துப் பேசிய வைகோ, ` என்னுடைய வாழ்க்கையில் 56 வருடங்களை பொதுவாழ்க்கைக்காக செலவழித்துள்ளேன். அதில் 28 வருடங்களில் லட்சக்கணக்கான மைல்கள் பயணம் செய்துள்ளேன். நடை பயணமாகவும் ஆயிரக்கணக்கான மைல்கள் சென்றுள்ளேன். ஏராளமான போராட்டங்களில் பங்கேற்று ஐந்தரை வருடங்களுக்கு மேல் சிறையில் இருந்துள்ளேன். என்னுடைய மகனுக்கும் அப்படிப்பட்ட கடினமான நிலை வர வேண்டாம் என்பதுதான் என்னுடைய கருத்து. என்னோடு அரசியல் போகட்டும் என நினைக்கிறேன். ஆனால், கட்சிக்காரர்கள் எல்லாம் என்ன முடிவில் இருக்கிறார்கள் என தெரியவில்லை' என பேசியிருந்தார்.
93 சதவிகிதம் பேரின் ஆதரவு
வைகோவின் பேச்சு, மதிமுக நிர்வாகிகள் மத்தியில் கலவையான உணர்வுகளை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக, பிபிசி தமிழிடம் பேசிய ம.தி.மு.க மாநில நிர்வாகி ஒருவர், ``கடந்த 2 மாதங்களுக்கு முன்பு நடந்த மாவட்ட செயலாளர் கூட்டத்தில், `அரசியலுக்கு துரை வர மாட்டார்' என வைகோ கூறினார். அப்போது பேசிய மாவட்ட செயலாளர் ஒருவர், ` தலைவரின் உடல்நிலையை கருத்தில் கொண்டு அவர் கட்சிப் பதவிக்கு வர வேண்டும். கட்சிக்குள் அதிகளவில் இளைஞர்களைக் கொண்டு வருவதற்கு ஒருவர் வேண்டும். துரையின் சுற்றுப்பயணத்தின்போது, அவரது செயல்பாடுகளை இளைஞர்கள் வரவேற்கிறார்கள். எனவே, அவர் வர வேண்டும்' என குறிப்பிட்டார்.
தொடர்ந்து பேசிய வட மாவட்டத்தைச் சேர்ந்த மாவட்ட செயலாளர் ஒருவர், `நீங்கள் நீண்டகாலம் வாழ வேண்டும் என விரும்புகிறோம். நீங்கள் மீண்டும் அலைந்து கொண்டிருந்தால் அது சரியாக இருக்காது. தவிர, உடல்நலனையும் வருத்திக் கொண்டிருக்கிறீர்கள். நீங்கள் செய்ய வேண்டிய பணிகளை எல்லாம் தாயகத்தில் அமர்ந்து துரை செய்து முடிப்பார்' என்றார். அந்தக் கூட்டத்தில் பேசிய 93 சதவிகிதம் பேர், துரை வையாபுரியின் வருகையை ஆதரித்துப் பேசினார்கள். ஆனால், அதனை வைகோ ஏற்றுக் கொள்ளவில்லை," என்கிறார்.
வைகோவின் மனநிலை என்ன?
தொடர்ந்து பேசியவர், ``ம.தி.மு.கவில் இளைஞரணி செயலாளர் பொறுப்பில் துரை வையாபுரியை அமர்த்த வேண்டும் என்பதில் நிர்வாகிகள் உறுதியாக உள்ளனர். அரசியலுக்கு வந்து சேவை செய்ய வேண்டும் என துரையும் நினைக்கிறார். தற்போது இளைஞரணி செயலாளர் பொறுப்பில் இருக்கும் கோவை ஈஸ்வரனுக்கு மாநில துணைப் பொதுச்செயலாளர் பதவியை அளித்துவிட்டு, அவரது இடத்தில் துரை நியமிக்கப்பட வேண்டும் என நிர்வாகிகள் வலியுறுத்தி வருகின்றனர். இளைஞரணியில் அவர் இருந்தால்தான் சிறப்பாக இருக்கும் எனவும் நிர்வாகிகள் நினைக்கின்றனர்.
மாவட்ட சுற்றுப்பயணத்தின்போது, கட்சிக்காரர்களின் வாரிசுகளிடம் துரை பேசும்போது, `அப்பாவுடன் சேர்ந்து கட்சிக்காக உழைக்க வேண்டும்' என்றெல்லாம் பேச மாட்டார். `என்ன தொழில் செய்கிறீர்கள்?, அதனை எப்படி வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்லப் போகிறீர்கள்?' என்றுதான் பேசுவார். இந்தக் கட்சியில் பணம் என்று எதுவும் இல்லை. எப்போதும் ஜீரோ பேலன்ஸில்தான் கட்சி செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. எனவே, விமர்சனங்களுக்கு பதில் அளிக்க வேண்டிய அவசியம் இல்லை. கடந்த சட்டமன்றத் தேர்தலில் துரை போட்டியிட வேண்டும் என சிலர் விரும்பினர். அதனை வைகோ விரும்பவில்லை. `கட்சிக்காக உழைக்கட்டும், மக்கள் விரும்பினால் பதவிக்கு வரட்டும்' என்றுதான் வைகோ நினைக்கிறார்," என்கிறார்.
பதவி கொடுப்பதில் என்ன சிரமம்?
``துரைக்கு பதவி கொடுப்பதில் என்ன சிரமம்?" என்றோம்.
``அரசியல்ரீதியாக தன் மீது வைக்கப்படுகின்ற விமர்சனத்தை வைகோ தாங்கிக் கொள்வார். அதேநேரம், தனது பிள்ளைகளைப் பற்றி யாரும் விமர்சனம் செய்துவிடக் கூடாது என்பதில் அவர் உறுதியாக இருக்கிறார். அண்மையில், மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நிறைவடைந்த பிறகும், துரையை முன்னிறுத்துவது தொடர்பாக சிலர் பேசியபோதுகூட, `நான் பட்ட துயரங்கள் போதாதா.. அந்த சிரமத்தை என் பிள்ளையின் தலையில் தூக்கி வைக்க நினைக்கிறீர்களா?' என வைகோ கோபப்பட்டார். தி.மு.க, அ.தி.மு.கவை போல பலமான கட்சியாக ம.தி.மு.க இல்லை. இங்கு அனைத்தையும் இழந்து நிற்பவர்கள்தான் ஏராளம். இப்படிப்பட்ட நிலையில், `துரை வந்தால் கட்சி பழையபடி கட்சி செயல்படும்' என நிர்வாகிகள் எதிர்பார்க்கின்றனர்" என்கிறார்.
இது தொடர்பாக, ராமநாதபுரம் மாவட்ட ம.தி.மு.க செயலாளர் பேட்ரிக்கிடம் பிபிசி தமிழுக்காக பேசினோம். `` கட்சிப் பதவிக்கு துரை வர வேண்டும் என்பதுதான் அனைவரின் விருப்பம். அரசியல் வாழ்வில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக கடுமையான உழைப்பை வைகோ கொடுத்துள்ளார். அண்மையில் உடல் நலமில்லாமல் இருந்தவர், தற்போது பழையபடி வந்துவிட்டார். இனியும் பழையபடி அவரால் சுற்றுப்பயணம், நடைப்பயணம், ஆர்ப்பாட்டம் என ஈடுபட முடியாது.
அதேநேரம், கொரோனா தொற்று காலத்தில் கட்சிக்காரர்களின் அனைத்து நிகழ்வுகளிலும் துரை பங்கேற்றார். இதனைப் பயன்படுத்திக் கொண்டு தலைவர் வைகோவுக்கு சற்று ஓய்வு கொடுக்க வேண்டும் என கட்சிக்காரர்கள் நினைக்கின்றனர். ஆனால், அவர் எந்தக் காலத்திலும் சோர்வடைய மாட்டார். அவர் உழைத்துக் கொண்டேதான் இருப்பார். களத்தில் துரையை இறக்கி வேலை பார்க்க வேண்டும் என்பதுதான் கட்சிக்காரர்களின் விருப்பம்" என்கிறார்.
தலைவருக்குத்தான் அதிகாரம்
`` தலைவரின் மகன் அரசியலுக்கு வருவதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. ஒரு கட்சித் தலைவரின் மகன் மாற்றுக் கட்சிக்கு சென்றால்தான் அது தவறு. அவர் இங்கு வந்து இயக்கப் பணிகளைச் செய்வது என்பது வரவேற்கத்தக்க ஒன்றுதான். அரசியல் பணியில் தான் அடைந்த சிரமங்களை குடும்பத்தினரும் அடையக் கூடாது எனத் தலைவர் நினைக்கிறார். அதுமட்டுமல்லாமல், வாரிசு அரசியலை ஊக்குவிக்கும் என்பது போலவும் ஒரு பிம்பம் உருவானது. அது கடந்து போக வேண்டிய ஒன்று. அதில் எந்தவித பொருளும் இல்லை. மற்றபடி, என்ன செய்ய வேண்டும் என்பது தலைவரின் அதிகாரத்துக்குட்பட்டது. தலைவர்தான் முடிவெடுக்க வேண்டும்" என்கிறார், ம.தி.மு.க துணைப் பொதுச்செயலாளர் மல்லை சத்யா.
``ம.தி.மு.க மாவட்ட செயலாளர்கள் கூட்டம் வரும் 20 ஆம் தேதி நடக்கவுள்ளது. அந்தக் கூட்டத்தில் வைகோவின் மகன் முன்னிறுத்தப்பட்டால், அடுத்து வரக்கூடிய பொதுக்குழுவில் அவரது நியமனத்துக்கு ஒப்புதல் பெறும் வேலைகள் தொடங்கும்" என்கின்றனர் ம.தி.மு.க நிர்வாகிகள்.
பிற செய்திகள்:
- எச்சில் துப்புவதால் வரும் கறைகளை நீக்க இந்திய ரயில்வே செய்யும் செலவு எத்தனை கோடி?
- சசிகலாவை தூண்டிவிடுகிறதா தி.மு.க - பொன்விழா நேரத்தில் அ.தி.மு.க குற்றச்சாட்டு ஏன்?
- கடன் பத்திரங்களில் முதலீடு செய்வது லாபகரமானதா? - ஆனந்த் ஸ்ரீநிவாஸன் விளக்கம்
- 'பாகிஸ்தான் அணு ஆயுத திட்டத்தின் தந்தை' அப்துல் கதீர் கான் மரணம் - யார் இவர்?
- ஜெனோபியா: ரோமாபுரி பேரரசுக்கே சவால் விட்ட பால்மைரா சிற்றரசியின் வரலாறு
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்