You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ஆசிரியர் தினம் செப்டம்பர் 5: தேசிய நல்லாசிரியர் விருது பெறும் தமிழ்நாடு, புதுச்சேரி தமிழர்கள் யார்?
- எழுதியவர், நடராஜன் சுந்தர், மு. ஹரிஹரன்
- பதவி, பிபிசி தமிழுக்காக
இந்திய அரசு ஆண்டுதோறும் வழங்கும் தேசிய அளவிலான சிறந்த ஆசிரியர்களுக்கான விருதினை தமிழ்நாட்டில் இருந்து இரண்டு ஆசிரியர்களும், புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் இருந்து ஓர் ஆசிரியரும் இன்று பெறுகின்றனர்.
அவர்கள் யார், அவர்கள் உண்டாக்கிய மாற்றங்கள் என்ன என்பது குறித்த சிறப்புக் கட்டுரை இது.
இந்திய அரசு சிறந்த ஆசிரியர்களை தேர்வு செய்து, அவர்களுக்கு ஆசிரியர் தினத்தன்று தேசிய நல்லாசிரியர் விருதினை வழங்கி வருகிறது. இந்த ஆண்டு தேர்வான 44 ஆசிரியர்கள் பட்டியல் சில வாரங்களுக்கு முன்புவெளியிடப்பட்டது.
அந்த பட்டியலில் தமிழ்நாட்டின் திருச்சி மாவட்டம் பிரதியூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர் கே.ஆஷா தேவி மற்றும் ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியை டி.லலிதா ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். மேலும் புதுச்சேரியில் மணப்பட்டு அரசு நடுநிலைப் பள்ளியைச் சேர்ந்த அறிவியல் ஆசிரியர் வெ.ஜெயசுந்தர் தேர்வாகியுள்ளார்.
'வட்டிக்கு கடன் வாங்கிய பெற்றோர்' - மனமாற்றம் உண்டாக்கிய ஆசிரியர்
இந்த விருது அனைவருடைய கூட்டு முயற்சிக்கு கிடைத்த வெற்றியாக பார்ப்பதாக நல்லாசிரியர் விருதுக்கு தேர்வாகியுள்ள தலைமை ஆசிரியை கே.ஆஷா தேவி பிபிசி தமிழிடம் பகிர்ந்துகொண்டார்.
"2010ஆம் ஆண்டு இந்த பள்ளிக்கு தலைமை ஆசிரியராக வந்தபோது பள்ளியுள்ள மாணவர்களின் மொத்த எண்ணிக்கை 71ஆக இருந்தது. அப்போது நான்கு ஆசிரியர்கள் மட்டுமே பணிபுரிந்தோம். ஆனால் இன்று எங்களுடைய மாணவர்களின் எண்ணிக்கை 816 ஆக உயர்ந்துள்ளது. மேலும் தற்போது 24 ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர்."
"எங்கள் பள்ளி நகரப் பகுதியில் உள்ளது. இங்குள்ள மக்கள் ஆங்கில வழிக் கல்வி படித்தால் மட்டுமே நல்லது என கருதுகின்றனர். அவர்களுடைய குழந்தைகள் ஆங்கிலத்தில் பேசுவதை பெருமையாக பார்க்கின்றனர். நான் இந்த பள்ளிக்கு முதல்முறை வந்தபோது நிறையப் பெற்றோர் அவர்களது குழந்தைகளை உள்ளூரில் இருக்கும் பள்ளிகளை விட்டுவிட்டு வெளியூர்களில் உள்ள தனியார் பள்ளிகளில் சேர்த்தனர். அவர்கள் கஷ்டப்படும் குடும்பமாக இருந்தாலும், வட்டிக்கு கடன் வாங்கி குழந்தைகளை தனியார் பள்ளிகளில் படிக்க வைத்தனர்.
"இதையடுத்து ஊர் மக்களிடமும், பெற்றோர் ஆசிரியர் கூட்டங்கள் நடத்தி எந்த காரணத்திற்காக உள்ளூர் பள்ளிகளை விட்டு வெளியே அனுப்புகின்றனர் என்பதை ஆராய்ந்தபோது ஆங்கில வழி கற்க விரும்புகிறோம். அதனால் தனியார் பள்ளிகளில் சேர்ப்பதாக பெற்றோர்கள் கூறினர். அதே போன்று ஆங்கில வழிக் கல்வியை தமிழ்நாடு அரசிடம் கேட்டுப் பெற முயற்சி செய்கிறோம். அப்படி அனுமதி கிடைத்துவிட்டால் உங்கள் பிள்ளைகளை நம் பள்ளியில் சேர்ப்பீர்களா என்று கேள்வி எழுப்பியபோது, சேர்க்கிறோம் என உறுதியளித்தனர்."
அதையடுத்து அவர்கள் விருப்பப்படி ஆங்கில வழிக் கல்வியை இந்த அரசுப் பள்ளியில் நிறுவி, அதிலிருந்து 8ஆம் வகுப்புவரை உள்ள மாணவர்களுக்கு ஆங்கில வழி கல்வி வழங்கி வருகிறோம். இதனால் மாணவர்கள் சேர்க்கை அதிகரித்தது. எங்கள் பள்ளியில் உள்ள மாணவர்களில் 90 சதவீத மாணவர்கள் ஆங்கில வழிக் கல்வியை கற்கின்றனர்," என்றார் ஆஷா தேவி.
"இதுமட்டுமின்றி மாணவர்களுக்குச் சிலம்பம், கராத்தே, யோகா, இசை உள்ளிட்ட பல்வேறு இலவச பயிற்சி வகுப்புகள் ஏற்பாடு செய்து கற்பித்தோம். இந்த பயிற்சி ஆசிரியர்களுக்கு இங்கே பணிபுரியும் ஆசிரியர்கள் ஒன்றாக இணைந்து கட்டணம் செலுத்திவிடுவோம்."
"இந்த கொரோனா நோய்த்தொற்று காலத்தில் ஆன்லைன் வகுப்பில் கல்வி கற்க முடியாத குழந்தைகளுக்கு பாடம் கற்பிக்க அந்தந்த தெருக்களில், வீதி கல்வி, வீதி நூலகம் போன்றவை ஏற்படுத்தி அவர்களுக்கு பாடங்களை கற்பித்தோம். மேலும் அனைத்து ஆசிரியர்களுக்கு ஒவ்வொரு மாணவரின் வீடுகளுக்கு சென்று அவர்கள் கற்கும் திறனை ஆராய்ந்து அதற்கேற்ப வகுப்புகளை எடுத்தோம்.
எங்கள் பள்ளியில் மாணவர்கள் சேர்க்கை அதிகரித்துள்ளது. குறிப்பாக கடந்த இரண்டு ஆண்டுகளில் இங்குள்ள 5 கிமீ சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள தனியார் பள்ளிகளில் இருந்து 526 மாணவர்கள் எங்களது அரசு பள்ளிக்கு மாறியுள்ளனர். மாணவர்களுக்கு வெறும் பாடம் நடத்துவதோடு நிறுத்திவிடாமல், அனைத்து விதத்திலும் ஒரு முழுமையான வளர்ச்சியை வழங்குவதே சிறந்த கல்வி. அந்த வகையில் இந்த நல்லாசிரியர் விருது கிடைத்துள்ளதாக பார்க்கிறேன்," என்று நல்லாசிரியர் விருதிற்கு தேர்வாகியுள்ள ஆஷா தேவி தெரிவித்துள்ளார்.
அறிவியல் ஆசிரியரின் அரும்பணி - சர்வதேச போட்டிகளில் பரிசு பெற்ற மாணவர்கள்
இதேபோல், புதுச்சேரி மாநிலத்தில் மணப்பட்டு அரசு நடுநிலைப் பள்ளியைச் சேர்ந்த அறிவியல் ஆசிரியர் வெ.ஜெயசுந்தர் (41) இந்த வருடம் தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தேர்வாகியுள்ளார். அரியாங்குப்பம் பகுதியைச் சேர்ந்த இவர், கிராமப்புற மாணவர்களுக்குப் புதுமையான முறையில் கல்வி கற்பிப்பதால் இவ்விருது வழங்கப்படவுள்ளது. வகுப்பறைக் கல்வி மட்டுமின்றி, செயல்முறை கல்வி, அனுபவக் கல்வி, தொழில்நுட்ப கல்வி, ஆன்லைன் முறையில் கல்வி என கிராமப்புற மாணவர்களுக்குப் புதுமையான முறையில் இவர் கல்வியைக் கற்பித்து வருகிறார்.
சர்வதேச அளவிலும், தேசிய அளவிலும் அறிவியல் கண்காட்சி, அறிவியல் உருவாக்குவோம், குழந்தைகள் அறிவியல் மாநாடு போன்ற போட்டிகளுக்கு மாணவர்களைத் தயார்படுத்தி அனுப்பியுள்ளார். அதில் மாணவர்கள் பங்கேற்று பல்வேறு விருதுகளையும், பரிசுகளையும் பெற்றுள்ளனர். மேலும் பள்ளியைச் சீரமைத்தல், பசுமைப் பள்ளியை உருவாக்குதல், மழைநீர் சேகரித்தல், மாணவருக்கு ஒரு மரக்கன்று நடும் திட்டம், ஏரி சீரமைப்பு செய்வது உள்ளிட்ட பணிகளில் மாணவர்களை ஈடுபடுத்தி வருகிறார்.
இதுகுறித்து நல்லாசிரியர் விருதிற்கு தேர்வாகியாக ஆசிரியர் வெ.ஜெயசுந்தர் பிபிசி தமிழிடம் கூறுகையில், ''இப்பள்ளியில் 7 ஆண்டுகளாகப் பணிபுரிந்து வருகிறேன். 6ஆம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு அறிவியல் பாடம் எடுக்கிறேன். வகுப்பில் இருக்கும் பாட புத்தகங்களை மட்டுமே மாணவர்களுக்கு நடத்தினால் போதுமானதாக இருக்காது என்பதற்காக செயல்முறை கல்வியை மாணவர்களுக்கு வழங்கி வருகிறேன். நம்முடைய வகுப்பறையை தாண்டி வெளியே இருக்கக்கூடிய வாழ்வியல் கல்வி, இயற்கை கல்வி வழங்கியதன் காரணமாக தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தேர்வாகியுள்ளேன்," என்கிறார் அவர்.
"தொடர்ந்து எங்கள் குழந்தைகள் பல்வேறு போட்டிகளில் பரிசுகளை வென்றுள்ளனர். குறிப்பாக பாரீஸ் பல்கலைக்கழகத்தின் 'அறிவியல் உருவாக்குவோம்' போட்டியில் பங்கேற்று இரண்டு முறை 100 யூரோ பரிசு பெற்றுள்ளனர். தேசிய அளவிலான குழந்தைகள் அறிவியல் மாநாட்டிலும், தென்னிந்திய அளவிலான அறிவியல் கண்காட்சியிலும் இரண்டு முறை பரிசுகளை வென்றுள்ளனர். 'இன்ஸ்பையர் மானக்' போட்டியில் தேசிய அளவிலும், மாநில அளவிலும் பங்கேற்று பலமுறை வென்றுள்ளனர்.
குறிப்பாக குழந்தைகள் அறிவியல் மாநாட்டுக்கு இதுவரை 50 அறிவியல் திட்டங்களை எங்களது குழந்தைகள் சமர்ப்பித்துள்ளனர். இவற்றில் இரண்டு திட்டங்கள் தேசிய அளவில் பரிசு பெற்றுள்ளன. எங்கள் பள்ளியை மற்ற அரசுப் பள்ளிகளுக்கு முன்மாதிரியாகத் திகழும் அளவிற்கு மாற்றியுள்ளோம்," என்றார் ஆசிரியர் ஜெயசுந்தர்.
புதுவிதமான கல்வி முறையை உருவாக்குதலுக்காக 2018-19 ஆண்டு இவருக்கு என்சிஇஆர்டி விருது கிடைத்துள்ளது. இவை அனைத்துமே இவ்விருதுக்கு முக்கியக் காரணம் என்று கூறும் அவர், அதனடிப்படையில் தற்போது தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தேர்வாகி இருப்பது மகிழ்ச்சியளிக்கிறது என்கிறார் ஜெயசுந்தர்.
'அரசு பள்ளி மாணவர்களின் வாழ்க்கை தரம் உயர வேண்டும் என்பதே என் லட்சியம்'
மத்திய அரசு வழங்கியுள்ள இந்த அங்கீகாரம் தனது கடின உழைப்புக்கான மிகப்பெரிய பரிசாக கருதுவதாக தெரிவிக்கிறார் ஈரோடு மாவட்டத்தில் உள்ள மொடக்குறிச்சி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியை த.லலிதா.
'கடந்த 19 ஆண்டுகளாக ஆசிரியர் பணியில் ஈடுபட்டுள்ளேன். புதிய யுத்திகளை பயன்படுத்தி இயற்பியல் பாடங்களை கற்பிப்பதற்காக இந்த விருது எனக்கு வழங்கப்பட்டுள்ளது. இதனை எனது கடின உழைப்புக்கான மிகப்பெரிய பரிசாக கருதுகிறேன்.
2002 ஆம் ஆண்டு எனது 25வது வயதில், கொடைக்கானல் அரசு மேல்நிலைப் பள்ளியில் இயற்பியல் ஆசிரியராக முதலில் பணியாற்றத் துவங்கினேன். 2.5 ஆண்டுகள் வரை அங்கு பணியாற்றினேன்.
2005 ஆம் ஆண்டு ஈரோடு மாவட்டம், சிவகிரியில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பணியைத் தொடர்ந்தேன்.
2019ஆம் ஆண்டு நவம்பர் மாதம் தலைமை ஆசிரியையாக பணி உயர்வு பெற்று பவானிசாகர் அருகே உள்ள தொட்டம்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பணியாற்றினேன்.
2 ஆண்டுகளுக்கு பின்பு மொடக்குறிச்சி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளிக்கு பணி மாற்றம் பெற்றேன். ஆசிரியையாக பணியேற்று சுமார் 14 ஆண்டுகள் இயற்பியல் ஆசிரியராக பணியாற்றியுள்ளேன்.
இயற்பியல் பாடங்களை புத்தகங்களின் வழியாக கற்பிப்பதை தவிர்த்து அவற்றை செய்முறை பாடங்களாக கற்பித்து வருகிறேன்.
இயற்பியல் விதிகளை வாழ்வின் அன்றாட செயல்களோடு ஒப்பிட்டு அதனை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பதையும் கூறி எளியமுறையில் தெளிவாக மாணவர்களின் மனதில் பதிய வைப்பேன். Concept Learning என்று இதனை குறிப்பிடுகிறோம்.
2009ஆம் ஆண்டு முதல் பாடம் நடத்துவதில் தொழில்நுட்பங்களை பயன்படுத்தி வருகிறேன். வகுப்பறைகளில் ப்ரொஜெக்டர் பயன்படுத்துவது முதல் தற்போது வரை யூடியூப் சேனல்கள் மூலமாக இயற்பியல் பாடங்களை எளிமயாக கற்பித்து வருகிறேன்.
எனது மாணவர்கள் பெரும்பாலானோர் மருத்துவர்களாகவும் பொறியாளர்களாகவும் உயர் பதவிகளில் இருக்கின்றனர்.
தொட்டம்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 10ஆம் வகுப்பு வரை மட்டுமே ஆங்கில வழி கல்வி பாடத்திட்டம் இருந்தது. இதனால் அப்பகுதியை சேர்ந்த பெற்றோர்கள் பத்தாம் வகுப்பிற்கு பிறகு குழந்தைகளை மெட்ரிகுலேஷன் பள்ளிகளில் சேர்க்க வேண்டிய சூழல் இருந்தது. நான் பணியில் சேர்ந்ததும் பல போராட்டங்களுக்கு பிறகு 11 மற்றும் 12 ம் வகுப்பிற்கு ஆங்கில வழி கல்வி வகுப்புகளை துவங்கினேன். இதற்காக அப்பகுதியைச் சேர்ந்த பெற்றோர்கள் எனக்கு பாராட்டுகளையும் நன்றிகளையும் தெரிவித்தனர்.
அரசு பள்ளி மாணவர்களின் வாழ்க்கை தரம் உயர வேண்டும் என்பது மட்டுமே எனது லட்சியம் அதை நோக்கிய எனது பயணங்கள் என்றென்றும் தொடரும்' என்கிறார் தலைமையாசிரியை லலிதா.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்