You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
BH எண்கள்: நாடு முழுவதும் சீரான எண்கள் திட்டம் - யாரெல்லாம் இதை பெறலாம்?
வேலைக்காகவோ தொழிலுக்காகவோ நீங்கள் வேறு மாநிலத்துக்கு இடம்பெயரும்போது உங்கள் வாகனத்தையும் கொண்டு செல்லப்போகிறீர்களா? அதை எடுத்துச்செல்ல காவல்துறையினர் அனுமதிக்கமாட்டார்கள் என்று பயப்படுகிறீர்களா? வாகனத்தை மீண்டும் பதிவு செய்ய வேண்டுமா? புதிய எண்ணுக்காக விண்ணப்பிக்க வேண்டுமா?
வேறு ஒரு மாநிலத்துக்கு மாற்றலாகி செல்பவர்கள் மனதில் பல கேள்விகள் இவ்வாறு எழும். பலருக்கு இந்த நடைமுறைகள் தெரியாது. ஒருவேளை தெரிந்திருந்தாலும் இவற்றை செய்து முடிப்பதும் புது இடத்தில் இருக்கிற வட்டார போக்குவரத்து (ஆர்.டி.ஓ) அலுவலகத்தை அணுகுவதும் சிக்கலானதாக இருக்கும்.
ஆனால் இதை செய்து முடிக்கவில்லை என்றால் போக்குவரத்துக் காவலர்கள் அடிக்கடி நிறுத்துவார்கள். அதுவும் பிரச்னையில் முடியும். ஆனால் இனிமேல் வாகன உரிமையாளர்களுக்கு இந்த சிக்கல்கள் இருக்காது.
நடைமுறையில் இருக்கும் விதி என்ன?
மோட்டார் வாகன சட்டம் 1988ல் சாலை போக்குவரத்துத் துறை அமைச்சகம் வாகனப் பதிவு பற்றிய விதிமுறைகளை விளக்கியுள்ளது. அதன்படி வேறு ஒரு மாநிலத்துக்குச் சென்று வசிப்பவர்கள், அங்கு தங்கள் வாகனத்தை மீண்டும் பதிவு செய்யவேண்டும்.
முதல்முறை வாகனம் வாங்கும்போது 15 ஆண்டுகளுக்கு சாலை வரி கட்டவேண்டும். ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு வாங்கிய வாகனங்களை வெளி மாநிலத்துக்கு எடுத்துச் சென்றால் 10 ஆண்டுகள் வரிப்பணம் திரும்பக் கிடைக்கும். ஆனால், சம்பந்தப்பட்ட அலுவலகத்திலிருந்து அதற்கான தடையின்மைச் சான்றிதழ் (NOC) தேவை.
இதுபோன்ற அதிகாரபூர்வ நடைமுறைகளை முடித்தபிறகு, குடிபெயர்ந்த மாநிலத்துக்கு ஏற்றவாறு வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் (Regional Transport Office) வரிப்பணம் செலுத்தவேண்டும். பணம் செலுத்தியபின்பே புதிய பதிவு எண் கிடைக்கும்.
இது பெரிய வேலை என்பதால் பலமுறை வட்டார போக்குவரத்து அலுவலகத்துக்குச் செல்ல வேண்டியிருக்கும். ஆற்றலும் நேரமும் செலவாகும். ஆகவே இப்போது அறிவிக்கப்பட்டுள்ள புதிய விதிமுறை வாகன உரிமையாளர்களுக்கு ஆறுதலாகவே இருக்கும்.
நாட்டின் எல்லா வாகனங்களுக்கும் ஒரே மாதிரியான பதிவு எண்
BH (Bharat) என்ற எழுத்துக்களில் தொடங்கும்படி, இந்தியாவில் பதிவு செய்யப்பட்டுள்ள எல்லா வாகனங்களுக்கும் ஒரே மாதிரியான எண்கள் கொண்ட ஒரு திட்டத்தை மத்திய அரசு துவக்கியுள்ளது. வேறு ஒரு மாநிலத்துக்குச் சென்றாலும், அங்கு மீண்டும் வாகனத்தைப் பதிவு செய்து புதிய எண் பெறத்தேவையில்லை.
26 ஆகஸ்ட் 2021ல் மத்திய சாலைப்போக்குவரத்து அமைச்சகத்தால் இந்த அறிவ்ப்பு வெளியிடப்பட்டுள்ளது. மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு இடையில் எளிதாக வாகனங்களை எடுத்துச் செல்ல இந்த விதி உதவும் என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மோட்டார் வாகன சட்டம் 1988ன் 64வது பிரிவு திருத்தியமைக்கப்படும். இந்தப் பிரிவில் வரவிருக்கிற இருபதாவது திருத்தம் இது. 15 செப்டம்பர் 2021ல் இந்த விதி அமலுக்கு வரும்.
BH வரிசை எண்கள் எப்படி இருக்கும்?
வாகனத்தின் பதிவு எண் என்பது, அந்த வாகனத்துக்கான முக்கியமான அடையாளம். அந்தந்த மாநிலத்தில் உள்ள வட்டார போக்குவரத்து அலுவலகங்கள் பதிவு எண்களை வழங்குகின்றன.
உதாரணமாக, மகாராஷ்டிராவின் வாகன எண்கள் MH என்றும், மத்தியப் பிரதேச எண்கள் MP என்றும் தொடங்குகின்றன. ஆந்திர பிரதேசம் (AP), கேரளா (KA), கோவா (GA) என ஒவ்வொரு மாநிலத்துக்கும் தனித்தனி அகர,எண் வரிசை உண்டு.
இதற்குப் பின்னால் வரும் எண்கள் வாகனத்தைப் பதிவு செய்த வட்டார அலுவலகத்தைக் குறிப்பிடுகின்றன. மும்பையில் பதிவு செய்த வாகன எண்கள் MH01 எனவும், புனேவில் பதிவு செய்த வாகன எண்கள் MH12 எனவும் தொடங்கும். ஆனால் BH வரிசை எண்கள் சற்றே வித்தியாசமானவை.
புதிய BH வரிசையில், பதிவு செய்த ஆண்டு முதலில் வரும். பிறகு BH என்ற எழுத்துக்கள் வரும். பிறகு 0000க்கும் 9999க்கும் இடையில் ஒரு எண்ணும், AA முதல் ZZ வரையிலான ஆங்கில எழுத்துக்களில் ஒன்றும் இறுதியாக வரும்.
உதாரணமாக, 2021ல் பதிவு செய்யப்பட்ட வாகனத்திற்கு AB வரிசையில் 1234 என்ற எண் தரப்பட்டால், அதன் முழு எண் 21 BH 1234 AB என்பதாக இருக்கும்.
BH வரிசை எண்களுக்கு யார் விண்ணப்பிக்கலாம்?
இப்போதைக்கு இந்த வரிசை எண்களுக்காகப் பொதுமக்கள் விண்ணப்பிக்க முடியாது. கீழ்க்காணும் பிரிவினரில் வருபவர்களே இந்த எண்ணைப் பெறலாம் என்று அமைச்சகம் அறிவித்திருக்கிறது.
ராணுவத்தைச் சேர்ந்தவர்கள்
மத்திய அரசு ஊழியர்கள்
மாநில அரசு ஊழியர்கள்
சில பொதுத்துறை நிறுவனங்களின் ஊழியர்கள்
நான்குக்கும் மேற்பட்ட அலுவலகங்கள் உள்ள தனியார் நிறுவனங்களின் ஊழியர்களும் இந்த எண்ணுக்காக விண்ணப்பிக்கலாம்.
பொதுமக்களுக்கு இந்த எண் வழங்கப்படுமா, அவர்கள் எப்போதிலிருந்து விண்ணப்பிக்கலாம் போன்ற தகவல்களை அமைச்சகம் இன்னும் வெளியிடவில்லை.
இதற்கான கட்டணம் என்ன?
10 லட்சத்துக்கும் குறைவான மதிப்புள்ள பெட்ரோல் வாகனங்களின் உரிமையாளர்கள் 8% கட்டணம் செலுத்த வேண்டும். 10 முதல் 20 லட்சம் மதிப்புள்ள பெட்ரோல் வாகன உரிமையாளர்க்ளுக்கு 10% கட்டணமும், அதற்கும் மேல் மதிப்புள்ள பெட்ரோல் வாகனங்களுக்கு 12% கட்டணமும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
டீசல் வாகனங்களுக்கு மேலே உள்ள எல்லா கட்டணங்களிலும் 2% கூடுதலாக இருக்கும். மின்சார வாகனங்கள் 2% குறைவாக செலுத்தவேண்டும். வாகன பதிவு முடிந்து 14 ஆண்டுகளுக்குப் பிறகு வருடாவருடம் சாலை வரி செலுத்த வேண்டும். இது முன்பு செலுத்திய வரியில் பாதி அளவு இருக்கும்.
பிற செய்திகள்:
- 'தாலிபன்' என்ற சொல் நீக்கம்: ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா போட்ட யூ-டர்ன்
- அணு உலையை மீண்டும் இயக்கும் வடகொரியா: அமெரிக்காவுக்கு புதிய தலைவலி
- குழந்தையை இழுத்துச் சென்ற மலைச் சிங்கம்; போராடி மீட்ட தாய்
- அவனி லெகரா: இந்திய பாராலிம்பிக் வரலாற்றில் முதல் தங்கம் வென்ற பெண் - 8 முக்கிய தகவல்கள்
- ரத்த தானம் செய்து 88 உயிர்களைக் காப்பாற்றிய நாய்க்கு இனி ஓய்வு
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்