You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
தமிழ்நாடு மின்சார வாரியத்துக்கு சொந்தமான 2,38,000 டன் நிலக்கரி மாயம்; என்ன நடந்திருக்கும்?
- எழுதியவர், முரளிதரன் காசிவிஸ்வநாதன்
- பதவி, பிபிசி தமிழ்
தமிழக மின்வாரியத்திற்குச் சொந்தமான அனல்மின் நிலையங்களில் இருப்பு வைக்கப்பட்டிருந்த நிலக்கரியில் சுமார் 2,38,000 டன் குறைவதாக தமிழ்நாடு மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி குற்றம்சாட்டியிருக்கிறார். இது எப்படி நடந்தது?
ஆகஸ்ட் 20ஆம் தேதியன்று வடசென்னை அனல் மின்நிலையத்தின் நிலக்கரி கிடங்குகளை மாநில மின் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி நேரில் ஆய்வு செய்தார். அதற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய செந்தில் பாலாஜி, பதிவேட்டில் உள்ள கணக்குகளின்படி பார்த்தால், சுமார் 2 லட்சத்து 38 ஆயிரம் டன் நிலக்கரி குறைவதாகக் கூறினார்.
வட சென்னையில் உள்ள அனல் மின் நிலையத்திற்கு சென்னை துறைமுகம் மூலம் நிலக்கரி கொண்டுவரப்படுகிறது. இந்த நிலக்கரி உள் ஒதுக்கீடு மற்றும் வெளி ஒதுக்கீடு என இரு பிரிவுகளாகச் சேமிக்கப்படுகிறது. இதில், வெளி ஒதுக்கீட்டில் உள்ள நிலக்கரி மேட்டூரில் உள்ள இரண்டு அனல் மின் நிலையங்களுக்கு ரயில் மூலம் கொண்டுசெல்லப்படுகிறது.
இங்குள்ள நிலக்கரிக் கிடங்கில் இருப்பைச் சரிபார்த்தபோது, பதிவேட்டில் உள்ளதற்கும் இருப்பில் உள்ள நிலக்கரிக்கும் இடையில் 2,38,000 டன் வித்தியாசம் இருந்ததாக செந்தில் பாலாஜி தெரிவித்திருக்கிறார். இதன் மதிப்பு 85 கோடி ரூபாய் இருக்குமென்றும் அவர் தெரிவித்தார்.
இருப்பில் உள்ள நிலக்கரி பதிவேட்டில் குறிப்பிடப்பட்டுள்ள அளவைவிட குறைவாக இருக்கலாம் என்ற சந்தேகத்தில் இதற்கான ஆய்வுக் குழு ஒன்றை அமைக்க ஆகஸ்ட் 2ஆம் தேதி உத்தரவிடப்பட்டது.
இந்த ஆய்வுக் குழு அளித்த தகவலின்படி ஆகஸ்ட் ஆறாம் தேதியன்று பதிவேட்டில் 5,65,900 டன் நிலக்கரி இருக்க வேண்டும். ஆனால், 3,27,463 டன் மட்டுமே இருப்பில் இருக்கிறது. ஆகவே ஒட்டுமொத்தமாக 2,38,437 டன் நிலக்கரி குறைவதாக ஆய்வுக்குழு தெரிவித்தது. மார்ச் 31ஆம் தேதிவரையிலான கணக்கின்படியே இந்தக் குறைவு ஏற்பட்டிருப்பதாகவும் சம்பந்தப்பட்டவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என்றும் செந்தில் பாலாஜி தெரிவித்தார்.
முன்னாள் அமைச்சர் தங்கமணி என்ன சொல்கிறார்?
இந்த விவகாரம் குறித்து கருத்துத் தெரிவித்திருக்கும் மின்சாரத் துறையின் முன்னாள் அமைச்சர் தங்கமணி, "கடந்த ஆகஸ்ட் மாதத்தில் நான் எடுத்த கணக்கை தற்போது செந்தில் பாலாஜி தெரிவித்து முதலமைச்சரிடம் நல்ல பெயர் வாங்க முயற்சிக்கிறார். எனது மடியில் கனமில்லை. அதனால் எதற்கும் பயமில்லை. அ.தி.மு.க. ஆட்சியில் மின்துறையில் எந்தத் தவறும் நடக்கவில்லை" என்று கூறியிருக்கிறார்.
ஆனால், முன்பே இதைக் கண்டறிந்திருந்தால், ஏன் தங்கமணி இது குறித்துப் பேசவில்லையென செந்தில் பாலாஜி கேள்வியெழுப்பியிருக்கிறார்.
உண்மையில் இந்த நிலக்கரி விவகாரத்தில் என்ன நடந்திருக்கலாம்?
தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு அனல் மின்நிலையங்களுக்கு வெவ்வேறு சுரங்கங்கங்களில் இருந்து நிலக்கரிகள் கொண்டுவரப்படுகின்றன. தற்போது குறிப்பிடப்படும் வடசென்னை அனல் மின் நிலையத்தின் நிலக்கரி கிடங்கில் வடசென்னை அனல் மின்நிலையத்திற்கான நிலக்கரி மட்டுமல்லாது, மேட்டூர் அனல் மின் நிலையத்திற்கான நிலக்கரியும் இருப்பு வைக்கப்படுகிறது.
சென்னைத் துறைமுகத்திற்கு கப்பலில் வரும் நிலக்கரி கன்வேயர் பெல்ட்கள் மூலம் வடசென்னை அனல் மின் நிலையத்தின் கிடங்கிற்குக் கொண்டுசெல்லப்படுகிறது. இந்தக் கிடங்கு சுமார் ஐந்து லட்சம் டன் நிலக்கரியை சேமிக்கும் வசதியுள்ளது.
பொதுவாக அனல் மின் நிலையங்களில் இருபது நாட்களுக்கான நிலக்கரி இருப்பு வைக்கப்படும். வடசென்னை அனல் மின் நிலையத்தின் ஒரு நாள் நிலக்கரி தேவை சுமார் 15,000 டன். ஆகவே தோராயமாக 3 லட்சம் டன் முதல் மூன்றரை லட்சம் டன் வரையிலான நிலக்கரி இங்கு இருப்பு வைக்கப்படும்.
நிலக்கரி எவ்வாறு அளக்கப்படுகிறது?
பொதுவாக நிலக்கரி துல்லியமாக அளக்கப்படுவதில்லை. கப்பல்களில் கொண்டுவரப்படும் நிலக்கரி, அந்தக் கப்பல்கள் எந்த ஆழத்திற்கு மூழ்கியிருக்கின்றனவோ அதைக் கணக்கிட்டு தோராயமாக நிலக்கரியின் எடை கணக்கிடப்படுகிறது.
இந்த நிலக்கரி கன்வேயர் பெல்ட் மூலம் அனல் மின்நிலையத்திற்கு எடுத்துச் செல்லப்படும்போது அந்தக் கன்வேயர் பெல்ட்டின் துவக்கத்தில் ஒரு எடைக் கருவி இருக்கும். ஆனால், அந்த எடைக் கருவி பெரும்பாலான தருணங்களில் இயங்காது.
ஆகவே, கப்பலில் ஏற்றப்பட்டதாகச் சொல்லப்படும் தோராயமான எடையே வாங்கப்பட்ட நிலக்கரியின் அளவாகக் கொள்ளப்படும். "இதுதான் தற்போது நிலக்கரி குறைவதற்குக் காரணம் என நினைக்கிறேன். இந்தக் குறைபாடு நீண்ட காலமாகவே இருந்துவந்தது" என்கிறார் மின்துறையில் பணியாற்றிய ஓர் அதிகாரி.
மேலும், "நிலக்கரி கிடங்குகளில் லட்சக்கணக்கான டன்கள் சேமிக்கப்படுவதால், அந்த அழுத்தத்தில் ஏற்படும் வெப்பத்தில் உள்ளுக்குள்ளேயே தீ பிடித்து, பல ஆயிரம் கிலோ நிலக்கரி சாம்பலாகும். அதுவும் எடை குறைவதற்குக் காரணமாக அமையும்" என்கிறார் அவர்.
"இது தவிர துறைமுகத்திலிருந்து நிலக்கரியை எடுத்துவரும் கன்வேயர் பெல்ட் முழுமையாக மூடப்பட்டதல்ல. ஆகவே வழியெங்கும் சிந்தியபடியே வரும். அதனால், நிலக்கரி வந்து இறங்கும் இடத்தில் ஒரு அளவாகவும் சேமிக்கப்படும் இடத்தில் ஒரு அளவாகவும் காட்டப்படுவதற்கு அதுவும் ஒரு காரணமாக அமையும்" என்கிறார் தமிழ்நாடு மின்துறை பொறியாளர் சங்கத்தின் தலைவர் எஸ். காந்தி.
1980களில் நிலக்கரியுடன் சேர்ந்து கற்களும் வந்துகொண்டிருந்தன. இதனால், தமிழ்நாட்டில் அனல் மின் நிலையங்களின் இயங்கு திறன் பல வருடங்களுக்கு சுமார் 60 சதவீதத்தைத் தாண்டவில்லை. இதைக் கண்டறிந்த பொறியாளர்கள், கற்களை நீக்கி நிலக்கரியை எரிக்க ஆரம்பித்ததும் இயங்கு திறன் பல மடங்கு அதிகரித்தது. ஆனால், அந்தக் கற்களின் எடையும் நிலக்கரியின் கணக்கில்தான் வந்தன.
விரைவில் இது தொடர்பாக விரிவான விசாரணை நடத்தப்படுமென மின்துறை அமைச்சர் அறிவித்திருக்கிறார். அப்போது கூடுதல் விவரங்கள் வெளிவரலாம்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்