You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
தமிழ்நாடு சட்டப்பேரவை நூற்றாண்டு விழா: மகனாக நெகிழ்ந்த ஸ்டாலின்; `கருணாநிதி உருவப்படத்தை திறந்து வைத்த ராம்நாத் கோவிந்த்
தமிழ்நாடு சட்டப்பேரவையில் கருணாநிதி உருவப்படத்தை குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று திறந்து வைத்தார். `அவரது படத்தை குடியரசுத் தலைவர் திறந்து வைத்ததை எண்ணி, தமிழ்நாட்டின் முதலமைச்சராக மகிழ்கிறேன், கருணாநிதியின் மகனாக நெகிழ்கிறேன்' என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
தமிழ்நாடு சட்டப்பேரவை, 1921 ஆம் ஆண்டு ஜனவரி 12ஆம் தேதி உருவானது. இதையடுத்து பேரவையின் நூற்றாண்டு விழா இன்று கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் உருவப்படத்தை திறந்து வைப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இந்நிகழ்வில் பங்கேற்க வருமாறு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சபாநாயகர் அப்பாவு ஆகியோர் தனித்தனியாக நேரில் அழைப்பு விடுத்தனர்.
இதை ஏற்று இன்று பிற்பகலில் டெல்லியில் இருந்து சென்னைக்கு தனி விமானத்தில் வந்த குடியரசுத் தலைவரை விமான நிலையத்தில் புத்தகங்களைக் கொடுத்து வரவேற்றார் முதலமைச்சர் ஸ்டாலின்.
பின்னர் ஆளுநர் மாளிகைக்குச் சென்ற குடியரசுத் தலைவர், 5 மணியளவில் சட்டப்பேரவைக்கு வந்தார். இந்த நிகழ்ச்சியில் பேசிய சபாநாயகர் அப்பாவு, `தென் மாநிலங்களின் தாய் சட்டப்பேரவையாக தமிழ்நாடு பேரவை உள்ளது. மாநில முதல்வர்கள் கோட்டையில் கொடியேற்றும் உரிமையை கருணாநிதி பெற்றுத் தந்தார்' என்றார்.
தொடர்ந்து, பெண்களுக்கு சொத்துரிமை உள்ளிட்ட கருணாநிதியின் சாதனைகளையும் அவர் பட்டியலிட்டார். அந்த வகையில், `கருணாநிதியின் உருவப்படத்தை குடியரசுத் தலைவர் திறந்து வைப்பது மிகப் பொருத்தமானது' என்றார்.
தொடர்ந்து கருணாநிதியின் உருவப் படத்தை குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் திறந்து வைத்தார்.
விழாவில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ` வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கத்தக்க நாளாக இந்த ஆகஸ்ட் 2-ஆம் நாள் இனி வரும் காலங்களில் சிறப்பு பெறவுள்ளது. குடியரசு தலைவரை பொருத்தவரையில், பட்டியலின மற்றும் பழங்குடியின மக்களின் நலனை முன்னிறுத்தி, வாதாடுவதில், போராடுவதில் தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர். பழைமையும் வரலாற்றுச் சிறப்பும் கொண்ட இந்த சட்டப்பேரவை, கடந்த ஒரு நூற்றாண்டில் பல புதுமையான சட்டங்களை, முன்னோடித் திட்டங்களை உருவாக்கி, சமதர்ம சமூகத்தைப் படைத்திட வழிவகுத்துக் கொடுத்திருக்கிறது' என்றார்.
தொடர்ந்து பேசுகையில், ` 1919 ஆம் ஆண்டில் 'மாண்டேகு - செம்ஸ்போர்டு' சீர்திருத்தங்களின் அடிப்படையில் இயற்றப்பட்ட இந்திய அரசு சட்டத்தின் மூலம்தான் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் அந்நாளைய மாகாண சட்டப்பேரவைகளில் முதன்முதலில் இடம்பெறத் தொடங்கினர். அச்சட்டமே பின்னர் மாகாணங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகள் உருவாவதற்கு வழியமைத்தது. அந்தச் சட்டத்தின்படி, சென்னை மாகாண சட்டமன்றத்துக்கு 1920 ஆம் ஆண்டு முதன்முதலாகத் தேர்தல் நடந்தது.
அந்தத் தேர்தலில் நீதிக்கட்சி வெற்றி பெற்று ஆட்சிப் பொறுப்பில் அமர்ந்தது. 1921 ஆம் ஆண்டு கன்னாட் கோமகனால் முதல் மாகாண சுயாட்சி சட்டமன்றம் தொடங்கி வைக்கப்பட்டதன் பவளவிழா நிகழ்வும் அதேபோல 1935-ஆம் ஆண்டு இந்திய அரசுச் சட்டத்தின் கீழ் முதன்முதலாக 1937-ஆம் ஆண்டு ஜூலை மாதம் ஏற்படுத்தப்பட்ட சென்னை சட்டமன்றப் பேரவையின் வைரவிழா நிகழ்வும் 1997-ஆம் ஆண்டு அப்போதைய முதலமைச்சராக இருந்த கருணாநிதியின் தலைமையிலான அரசால் சிறப்புடன் கொண்டாடப்பட்டது. அதே வேளையில், இந்த சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த ஒரு சில சட்டங்களை எடுத்துச் சொல்லவும் நான் கடமைப்பட்டிருக்கிறேன்.
ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்திலேயே மகளிருக்கு வாக்குரிமை அளிக்கும் சட்டத்தை முதன்முதலாக நிறைவேற்றிய பெருமை சென்னை மாகாணச் சட்டமன்றத்திற்கு உண்டு. அதோடு, தேவதாசி ஒழிப்புச் சட்டம், மகளிருக்கு உள்ளாட்சிப் பதவிகளில் உரிய இடஒதுக்கீடு, பெண் குழந்தைகளைப் பாதுகாக்க சிறப்புத் திட்டம் என மகளிர் நலன் காப்பதில் நாட்டிற்கே முன்னோடித் திட்டங்களை உருவாக்கித் தந்த பெருமை கொண்டது. அதுமட்டுமல்ல, சென்னை மாநிலத்திற்கு `தமிழ்நாடு' எனப் பெயர் சூட்டி வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த தனித் தீர்மானத்தை அண்ணாவின் அரசு நிறைவேற்றியது.
சுயமரியாதை மற்றும் சீர்திருத்த திருமணத்தைச் செல்லுபடியாக்கும் சட்டம் வகுத்தது; நிலச் சீர்திருத்தச் சட்டம் உருவாக்கியது; மே தினத்தை அரசு விடுமுறை ஆக்கியது; மாநில சுயாட்சிக்கான தீர்மானம் நிறைவேற்றியது; பெண்களுக்குச் சொத்தில் சம உரிமை வழங்கும் சட்டம், டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் அமைக்க சட்டம் நிறைவேற்றியது; தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை நிறைவேற்றியது எனப் பல சட்டங்களை தீர்மானங்களை நிறைவேற்றிய பெருமை உண்டு.
சமூகநீதிக்கு அடித்தளம் அமைத்த மண்டல் ஆணைய அறிக்கையைச் செயல்படுத்த தீர்மானம், தமிழ்நாட்டின் காவிரி நதிநீர் உரிமையை நிலைநாட்ட காவிரி நடுவர் மன்றத்தை அமைக்கக் கோரும் தீர்மானம், அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற சட்டம், மாணவர்கள் உயர்கல்வி பெறுவதில் இருந்த இடர்களை நீக்க நுழைவுத் தேர்வை ஒழிக்கும் சட்டம் போன்ற பல்வேறு தீர்மானங்களையும் சட்டங்களையும் இயற்றியவர் கருணாநிதி.
முன்னாள் முதலமைச்சரான அவரது படத்தைப் பார்க்கும்போது, இன்றும் நம் முன்னால் இருந்து வழிநடத்தும் ஒரு முதலமைச்சராக காண்கிறேன். இந்தியாவின் முதல் குடிமகனான குடியரசுத் தலைவர், கருணாநிதியின் உருவப் படத்தைத் திறந்து வைத்ததை எண்ணி, தமிழ்நாட்டின் முதலமைச்சராக மகிழ்கிறேன், கருணாநிதியின் மகனாக நெகிழ்கிறேன்' என்றார்.
இதன்பின்னர், `வணக்கம்' எனக் கூறி உரையைத் தொடங்கினார், குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த். `இன்றைய வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்த கலைஞர் மு.கருணாநிதியின் படத்தைத் திறந்து வைப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன், உண்மையில் இது முக்கியத்துவம் வாய்ந்த நாள்' எனத் தமிழில் பேசப் பேச கூட்டத்தில் கைத்தட்டல் எழுந்தது.
தொடர்ந்து பேசியவர், ``தமிழ்நாடு சட்டப்பேரவை நூற்றாண்டு விழாவில் பங்கேற்பதில் பெருமிதம் கொள்கிறேன். பொதுநலம் என்ற நோக்கில் அனைவரும் இணைந்து செயல்பட வேண்டுகிறேன். ஜனநாயக அடிப்படையிலான நிர்வாகத்தை உறுதி செய்வதில் சட்டப்பேரவை சிறப்பான அமைப்பாக உள்ளது" என கூறிவிட்டு. பாரதியின், `வானை அளப்போம், கடல் மீனை அளப்போம், சந்திர மண்டலத்தியல் கண்டு தெளிவோம்' என்ற வரிகளை தமிழில் மேற்கோள் காட்டினார்.
தொடர்ந்து பேசுகையில், `தனது புரட்சிகரமான எண்ணங்களால் சமூக சீர்திருத்தத்துக்கு கருணாநிதி வித்திட்டார். தமிழ் இலக்கியத்துக்கும் சினிமாவுக்கும் பங்களித்தவர் அவர். அவரது படத்தைத் திறந்து வைப்பதில் மகிழ்ச்சியடைகிறேன்' என்றார். முடிவில், `ஜெய்ஹிந்த்' எனக் கூறிவிட்டு அமர்ந்தார்.
பிற செய்திகள்:
- ஒலிம்பிக் ஹாக்கி காலிறுதி: ஆஸ்திரேலிய அரணை சிதறடித்த இந்திய வீராங்கனைகள்
- இமயமலை நாட்டின் இமாலய சாதனை: பூட்டானில் 99% பேருக்கு முதல் டோஸ் தடுப்பூசி
- ஒரே ஒலிம்பிக்கில் 7 பதக்கங்கள் - உலக சாதனை படைத்த எம்மா மெக்கியோன்
- காஷ்மீர் ப்ரீமியர் லீக்: 'வெளிநாட்டு வீரர்களை பிசிசிஐ மிரட்டுகிறது ' - பாகிஸ்தான்
- "பெட்ரோல் பாண்டுகளால்தான் பெட்ரோல் விலை உயர்வதாகச் சொல்வது பொய்" - ஆனந்த் ஸ்ரீநிவாசன்
- நரபலி கொடுக்கும் ஆஸ்டெக் பேரரசு: மத்திய அமெரிக்காவை ஆட்டிப்படைத்த பழங்குடிகளை பற்றி தெரியுமா?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்