திராத் சிங் ராவத்: பதவியேற்ற நான்கே மாதங்களில் விலகிய உத்தராகண்ட் பாஜக முதல்வர்

உத்தராகண்ட் மாநில முதலமைச்சராக பதவியேற்று நான்கே மாதங்களில் அப்பதவியில் இருந்து விலகியுள்ளார் பாரதிய ஜனதா கட்சியைச் சார்ந்த திராத் சிங் ராவத்.

கடந்த மூன்று நாட்களாக பாஜக மேலிடத் தலைவர்களுடன் டெல்லியில் ஆலோசனை நடத்திய அவர், வெள்ளிக்கிழமை பின்னிரவில் உத்தரகாண்ட் மாநில ஆளுநர் பேபி ராணி மௌரியாவிடம் தமது பதவி விலகல் கடிதத்தை அவர் அளித்துள்ளார்.

உத்தராகண்ட் மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் நடப்பதற்கு இன்னும் ஓராண்டுக்கும் குறைவான காலமே உள்ள நிலையில் இந்தப் பதவி விலகல் நிகழ்ந்துள்ளது.

"தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் சாசன நெருக்கடியில் இதுதான் சரியானது என்று நான் கருதினேன். கோவிட்- 19 சூழ்நிலை காரணமாக இடைத்தேர்தல் நடத்த இயலவில்லை," என்று திராத் சிங் ராவத் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

பதவி விலகியது ஏன்?

முதலமைச்சராக இருந்த த்ரிவேந்திர சிங் ராவத்துக்கு அந்த மாநில பாரதிய ஜனதா கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் பெரும்பாலானவர்களிடம் உண்டான எதிர்ப்பு காரணமாக அவரை அப்பதவியில் இருந்து மாற்றிவிட்டு திராத் சிங் ராவத்தை, கடந்த மார்ச் மாதம் முதலமைச்சர் ஆக்கியது பாரதிய ஜனதா கட்சி.

முதலமைச்சராக பதவியேற்ற போது திராத் சிங் ராவத் சட்டமன்ற உறுப்பினராக இல்லை என்பதால் பதவியேற்றதும் ஆறு மாதங்களுக்குள் அவர் சட்டமன்ற உறுப்பினராக வேண்டியது கட்டாயம். இல்லாவிட்டால் அரசமைப்புச் சட்டப்படி அவரால பதவியில் தொடர முடியாது.

செப்டம்பர் 10-ஆம் தேதி வரையே அவருக்கான காலக்கெடு இருக்கும் சூழலில் இடைத் தேர்தல் நடத்துவதற்கான அறிவிப்பு எதையும் இந்தியத் தேர்தல் ஆணையம் வெளியிடவில்லை.

சட்டமன்ற உறுப்பினராகத் தேர்வாகவில்லை என்றாலும், திராத் சிங் ராவத் பாஜக சார்பில் மக்களவை உறுப்பினராகத் தொடர்கிறார்.

மார்ச் - ஏப்ரல் மாதங்களில் ஐந்து மாநிலங்களுக்கு தேர்தல் நடந்த பின்பு இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பரவல் தீவிரமானதைத்தொடர்ந்து இடைத் தேர்தல்கள் குறித்து அறிவிப்பு எதையும் தேர்தல் ஆணையம் வெளியிடவில்லை.

"பல தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடத்த வேண்டியுள்ளது. கொரோனா சூழ்நிலை ஒரு முக்கிய பரிசீலனையாக உள்ளது," என்று இந்தியத் தேர்தல் ஆணையம் நேற்று தெரிவித்திருந்தது.

சர்ச்சைகள் நிரம்பிய பதவிக்காலம்

நான்கு மாத காலம் மட்டுமே திராத் சிங் ராவத் உத்தராகண்ட் மாநில முதலமைச்சராக இருந்திருந்தாலும் அவரது பதவிக் காலம் சர்ச்சைகளால் நிரம்பியிருந்தது.

அவருக்கு முன்னதாக முதலமைச்சர் பதவியில் இருந்த த்ரிவேந்திர சிங் ராவத்தின் ஆட்சிக்காலத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை வெளிப்படையாக விமர்சித்து பாரதிய ஜனதா கட்சிக்கு தர்மசங்கடமான சூழ்நிலையை அவர் ஏற்படுத்தியிருந்தார்.

முழங்கால் தெரியும் வகையில் பெண்கள் 'ரிப்டு ஜீன்ஸ்' ஆடைகளை அணிவது குறித்து, பதவியேற்ற சில நாட்களிலேயே அவர் தெரிவித்த கருத்து பெரும் சர்ச்சைக்கு உள்ளாகியது.

பிரிட்டிஷ் இல்லை, அமெரிக்காதான் இந்தியாவை 200 ஆண்டுகாலம் ஆட்சி செய்தது என்றும் அவர் குறிப்பிட்டது பெரும் எள்ளலுக்கு உள்ளானது.

கொரோனா பரவல் உச்சத்தில் இருந்த சமயத்தில் உத்தராகண்ட் மாநிலம் ஹரித்வாரில் கும்பமேளா நடத்தப்பட்டது கடும் விமர்சனத்துக்கு உள்ளானது. கும்பமேளாவுக்கு வருபவர்களுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை தேவை இல்லை என்று அவர் அப்போது தெரிவித்திருந்தது கடும் கண்டனங்களுக்கு உள்ளானது.

புதிய முதல்வரை பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் விரைவில் தேர்வு செய்ய உள்ளனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :