குண்டர் சட்டம்: அடுத்தடுத்து 4 பேர் மீது பாய்ந்த குண்டர் சட்டம் - தமிழக அரசின் அதிரடியால் என்ன நடக்கும்?

    • எழுதியவர், ஆ விஜயானந்த்
    • பதவி, பிபிசி தமிழுக்காக

போக்சோ உள்பட பாலியல் வன்கொடுமை வழக்குகளில் கைதான சிலரின் மீது குண்டர் சட்டத்தின் கீழ் காவல்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். காவல்துறையின் தடுப்புக் காவல் சட்டங்களால் குற்றங்கள் குறைய வாய்ப்பிருக்கிறதா?

சென்னையில் தனியார் பள்ளி ஒன்றில் வணிகவியல் துறை ஆசிரியராகப் பணிபுரிந்து வந்த ராஜகோபாலன் என்பவர் மீது பள்ளி மாணவிகள் சிலர் புகார் எழுப்பினர். இவர் ஆன்லைன் வகுப்புகளில் மாணவிகளிடம் அத்துமீறுவதாக அதிர்ச்சி குற்றச்சாட்டும் முன்வைக்கப்பட்டது.

இது தொடர்பாக சமூக வலைதளங்கள் மூலமாக சில மாணவிகள் புகார் மனுக்களை அளித்தனர். இதையடுத்து கடந்த மே மாதம் 24 ஆம் தேதி ராஜகோபாலன் கைது செய்யப்பட்டார். இவர் மீது போக்சோ சட்டப் பிரிவுகள் உள்பட பல்வேறு பிரிவுகளின்கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இது தொடர்பாக அந்தப் பள்ளியின் தாளாளரும் முதல்வரும் காவல்துறையின் விசாரணையில் ஆஜராகி விளக்கம் அளித்தனர்.

அடுத்தடுத்து பாய்ந்த குண்டர் சட்டம்

தற்போது சிறையில் அடைக்கப்பட்ட ராஜகோபாலன் மீது மேலும் சில மாணவிகள் புகார் அளித்து வந்த நிலையில் கடந்த 25 ஆம் தேதி குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதே வரிசையில், சென்னையில் தடகள பயிற்சிக்கு வந்த பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வகையில் பயிற்சியாளர் நாகராஜன் என்பவர் கைது செய்யப்பட்டு கடந்த மே மாதம் 29 ஆம் தேதி சிறையில் அடைக்கப்பட்டார். இவர் மீதும் புகார்கள் அணிவகுக்கவே, குண்டர் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்குமாறு சென்னை மாநகர ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இதன் அடிப்படையில் நாகராஜன் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது. இது தவிர, தனியார் பள்ளியை நடத்தி வந்த சிவசங்கர் பாபா என்ற சாமியார் மீது மாணவிகள் அளித்த புகாரின்பேரில் போக்சோ பிரிவுகளின்கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டாலும் அவர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

கிஷோர் கே சாமி முதல் சி.டி. மணி வரை!

இவர்களைத் தவிர, தி.மு.கவின் முன்னாள் தலைவர் கருணாநிதி, முதலமைச்சர் ஸ்டாலின் ஆகியோர் குறித்து அவதூறு பரப்பியதாக கிஷோர் கே சாமி என்ற நபர் கைது செய்யப்பட்டார்.

இவர் பா.ஜ.கவின் ஆதரவாளராகப் பார்க்கப்படுகிறவர். இவரை சங்கர் நகர் காவலர்கள் கைது செய்தனர். இவர் மீது பெண் பத்திரிகையாளர்களைப் பற்றி தவறான கருத்துகளை வெளியிட்டதாகவும் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

தொடர்ந்து நடிகை ரோகிணி உள்பட 3 பேர் கிஷோர் கே சாமி மீது புகார் கொடுத்தனர். இந்நிலையில் செங்கல்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள கிஷோர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இவர்களைத் தவிர தென் சென்னையில் முக்கிய ரவுடியாக வலம் வந்த சி.டி.மணி என்பவர் மீது 26 ஆம் தேதி குண்டர் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவர் மீது கொலை, கொள்ளை, துப்பாக்கி முனையில் மிரட்டிப் பணம் பறித்தல் என 25-க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன.

கடந்த 2 ஆம் தேதி இவரை கைது செய்தபோது ஏற்பட்ட காயத்தின் காரணமாக தற்போது ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். தமிழ்நாடு காவல்துறையின் இந்த அதிரடி நடவடிக்கைக்கு பொதுமக்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்துள்ளது. அதேநேரம், `குற்றவாளிகள் சட்டத்தின் பிடியில் இருந்து தப்பி விடக் கூடாது' எனவும் குரல் எழுப்புகின்றனர்.

அடிப்படை உரிமைக்கு எதிரானது அல்ல!

``தடுப்புக் காவல் எனப்படும் குண்டர் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுப்பதால் குற்றங்கள் குறைவதற்கு வாய்ப்புள்ளதா?" என சிறைக் கைதிகள் உரிமை மையத்தின் இயக்குநர் வழக்குரைஞர் புகழேந்தியிடம் பிபிசி தமிழுக்காக பேசினோம்.

"தடுப்புக் காவல் சட்டத்தைப் போடுவதற்கு காவல்துறைக்கு உரிமை உள்ளது. ஆனால், அதை முறையாகப் பயன்படுத்துகிறார்களா என்பதுதான் முக்கிய கேள்வியாக உள்ளது. ஒவ்வொரு வழக்கும் ஒவ்வொரு தன்மையில் இருக்கும். `இந்த வழக்குக்கு நீங்கள் குண்டர் சட்டம் போடக் கூடாது' என நாங்கள் கூற முடியாது. அது அவர்களின் அதிகாரத்துக்குட்பட்டது.

உச்ச நீதிமன்றமும், `தடுப்புக் காவல் சட்டம் என்பது அடிப்படை உரிமைக்கு எதிரானது அல்ல' எனக் கூறியுள்ளது. அதேநேரம், சட்டத்தைப் பயன்படுத்தும்போது உண்மையான குற்றவாளிக்கு எதிராகத்தான் பயன்படுத்த வேண்டும். பொய் வழக்கைப் போட்டு அதன் அடிப்படையில் இதனைப் பயன்படுத்தக் கூடாது என்பதுதான் எங்களின் கோரிக்கை" என்கிறார்.

தொடர்ந்து பேசுகையில், "அண்மைக்காலமாக குண்டர் சட்டம் பதிவு செய்யப்பட்டதில் பள்ளி மாணவிகளை பாலியல்ரீதியாக துன்புறுத்திய வழக்கு ஒருபுறம், பல்வேறு வழக்குகளில் குற்றம் செய்த நபர்களின் வழக்கு மறுபுறம் என இரு பிரிவாக உள்ளன. ஒருவர் குண்டர் சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டால் அதுதொடர்பான ஆவணங்களை புத்தகமாகக் கொடுப்பார்கள். அதனைப் பார்த்த பிறகுதான் முறையாகப் பதிவு செய்யப்பட்டுள்ளதா என்பது தெரியவரும். இந்த புத்தகத்தை அடிப்படையாக வைத்துக் கொண்டு சிறைக் கைதிகள் உயர் நீதிமன்றத்தை அணுகுகின்றனர்.

ஆண்டுக்கு 4,000 வழக்குகள்!

ஒவ்வொரு ஆண்டும் குண்டர் சட்டம் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றம், சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை ஆகியவற்றில் சுமார் 4,000 வழக்குகள் விசாரணைக்கு வருகின்றன. இதில் 99.5 சதவிகித வழக்குகளில், `தடுப்புக் காவல் சட்டத்தின்கீழ் பதிவு செய்யப்பட்டது தவறு' எனக் கூறி உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.

காரணம், ஒன்று வழக்கை தவறாகப் பதிவு செய்திருக்கலாம் அல்லது முறைப்படி வழக்குகளை நடத்தாமல் இருந்திருக்கலாம். குண்டர் தடுப்புச் சட்டத்தின்கீழ் ஒருவர் 9 மாதங்கள் சிறையில் இருக்கிறார் என்றால் அவர் மீதான குண்டர் சட்டம் ரத்து செய்யப்பட்டாலும் அதற்கான இழப்பீடுகள் எதுவும் வழங்கப்படுவதில்லை.

உதாரணமாக, ஒருவர் கொலை செய்கிறார் என்றால் அவர் மீது குற்ற வழக்கைப் பதிவு செய்து சிறையில் வைப்பார்கள். அவர் 2 மாதங்களுக்குப் பிறகு ஜாமீனில் வெளியில் வந்துவிடுவார். இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடக்கும்.

ஆனால், குற்ற வழக்கில் உள்ளவர் வெளியில் வந்தால் சட்டம் ஒழுங்கு சிக்கல் ஏற்படும் என்றால் அவரை குண்டர் சட்டத்தின்கீழ் சிறையில் அடைக்கின்றனர். இதன்பிறகு அந்த நபர் சிறையில் இருந்து வெளியில் வரவிடாமல் செய்யும் வேலைகளை காவல்துறை செய்வதில்லை.

அப்படியானால், குற்றத்தைத் தடுக்க வேண்டும் என்ற எண்ணத்தைவிட கூடுதல் மாதங்கள் அந்த நபர் சிறையில் இருந்தால் போதும் என்ற மனநிலையில் காவல்துறை உள்ளதாக எடுத்துக் கொள்ளலாம்" என்கிறார்.

நீர்த்துப் போவது ஏன்?

மேலும், "ஒரு நபர் தடுப்புக் காவலில் எத்தனை மாதங்கள் சிறையில் இருந்தாலும் அதற்கான நிவாரணத்தை அரசிடம் பெற முடியாது. சட்டத்தைத் தவறாகப் பயன்படுத்திய காவல்துறை அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுப்பது இல்லை.

குண்டர் சட்டம் தொடர்பாக 99.5 வழக்குகள் ஏன் நீர்த்துப் போகிறது என்பது தொடர்பாக எந்த ஆய்வும் நடத்தப்படுவதில்லை. இதில் தவறு செய்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுப்பதற்கு சட்டத்தில் வழிவகை இல்லாததால் தொடர்ந்து குண்டர் சட்டத்தைக் காவல்துறை பயன்படுத்தி வருகிறது.

ஒரு தடுப்புக் காவல் உத்தரவை தேவையற்று பயன்படுத்தினால் துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டால் மட்டுமே அவர்கள் இந்த வழக்குகளில் உரிய கவனம் செலுத்துவார்கள்.

காவல்துறை உயர் அதிகாரிகள் இந்த விவகாரத்தில் உரிய கவனம் செலுத்த வேண்டும். சட்டம் ஒழுங்கில் சீர்குலைவு ஏற்படும் இடங்களில் மட்டுமே லத்தியை பயன்படுத்த வேண்டும். அனைத்து இடங்களிலும் லத்தியை பயன்படுத்துவது சரியான ஒன்றாக இருக்க முடியாது.

அதேபோல், குற்றச் செயலில் ஈடுபட்ட நபரால் மீண்டும் சிக்கல் வரும் என்ற நிலை இருந்தால் மட்டுமே தடுப்புக் காவலைப் பயன்படுத்த வேண்டும்" என்கிறார்.

``பாலியல் குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்வது சரியான ஒன்றுதானே?" என்றோம். `` உண்மைதான். சில ரவுடிகளை சுட்டுக் கொல்லும்போதும் மக்கள் ஆதரிக்கிறார்கள். இதனை தங்களுக்குச் சாதகமாக போலீசார் பயன்படுத்திக் கொள்வதால்தான் சாத்தான்குளம் வியாபாரிகள் மரணம், சேலம் மளிகைக் கடைக்காரர் மரணம் போன்ற சம்பவங்கள் நடந்தன. ஒரு சம்பவத்தில் ஆதரவு கிடைப்பதால் மற்றவற்றிலும் இதனை செயல்படுத்தலாம் என்ற மன நிலையில் காவலர்கள் உள்ளனர். இதில் மாற்றம் வரவேண்டும்," என்கிறார்.

குற்றவாளிகள் தப்பிக்க என்ன காரணம்?

அதே நேரம், குண்டர் சட்டம் தொடர்பாக பிபிசி தமிழிடம் சில தகவல்களை விவரித்தார், ஓய்வுபெற்ற காவல்துறை கண்காணிப்பாளர் கருணாநிதி. இதுதொடர்பாக பேசியவர், "தடுப்புக் காவல் சட்டம் என்பதே முழுக்க முழுக்க ஆவணங்களின் அடிப்படையில் செயல்படக் கூடிய ஒன்று. அந்த ஆவணங்களில் சிறிய அளவிலான தொழில்நுட்பக் குறைபாடுகள் இருக்கும்.

அதாவது குற்றவாளியின் தந்தை பெயர், முகவரி ஆகியவற்றில் ஏதேனும் சில தவறுகள் நேரலாம். ஆவணங்களை எல்லாம் வட்டார மொழியில் கொடுக்க வேண்டும்; 7 முதல் 15 நாள்களுக்குள் கொடுக்க வேண்டும் என்பன போன்ற விதிகள் உள்ளன. இவற்றில் ஏதாவது சிறு தவறு நேர்ந்தால் கூட அதையே காரணமாகக் காட்டி குற்றவாளிகள் வெளியில் வருவதும் நடக்கிறது," என்கிறார்.

மேலும், "அடிப்படையில் குண்டர் சட்டம் என்பது தண்டனை கிடையாது. அது ஒரு தடுப்பு நடவடிக்கை. `இந்த நபர் வெளியில் இருந்தால் பொது அமைதிக்குப் பங்கம் ஏற்படும்' என்பதற்கான ஆவணங்களைச் சமர்ப்பிக்க வேண்டும். இதில் எந்தவித சாட்சிகளின் விசாரணையோ நடப்பதில்லை. ஆவணங்களை அடிப்படையாக வைத்து வழக்கு நடப்பதால் தொழில்நுட்பத் தவறுகள் காரணமாக விடுதலை செய்யப்படுவதும் தொடர்கிறது. இதை காவல்துறை நிர்வாகத்தின் தவறு என்பதாக எடுத்துக் கொள்ள முடியாது," என்கிறார்.

தொடர் சிரமங்கள் தான் தண்டனை!

``குண்டர் சட்டம் ரத்து செய்யப்பட்டால், அதனை காவல்துறை சரியாக ஆய்வு செய்வதில்லை என்கிறார்களே?" என்றோம். `` அப்படியில்லை. தொடர்ந்து ஆய்வு செய்து கொண்டுதான் இருக்கிறார்கள். தடுப்புக் காவல் சட்டத்தைப் பயன்படுத்தும்போது அதற்கென உள்ள விதிமுறைகளை மிகச் சரியாகப் பயன்படுத்த வேண்டும். அதில் ஏதாவது ஒரு அதிகாரி தவறு செய்தால் அதனைச் சுட்டிக் காட்டி குண்டர் சட்டத்தை ரத்து செய்துவிடுகிறார்கள். இதன் அடிப்படையில் அந்த அதிகாரிக்குத் தண்டனை வழங்கினால், குண்டர் சட்டம் போடுவதற்குத் தயங்கக் கூடிய நிலை ஏற்பட்டுவிடும்.

காவல்துறையில் குண்டர் சட்டம் பதிவு செய்வது என்பதே மிக முக்கியமான பணிதான். அதற்கான ஆவணங்களைத் தயாரித்து மிக விரைவாகச் செய்ய வேண்டிய பணி அது. அதில் உள்ள தவறுகளால் அந்தக் குற்றவாளி விடுதலை செய்யப்பட்டாலும் குறிப்பிட்ட காலம் அந்த நபர் சிறையில் இருப்பது மிக முக்கியமானது.

இதனை உடைத்துக் கொண்டு வெளியே வருவது அவ்வளவு எளிதானதல்ல. நீதிமன்ற விசாரணை எனத் தொடர்ந்து சிரமங்களை சந்தித்த பிறகுதான் வெளியில் வருகின்றனர். அந்தச் சிரமமே தண்டனையாக இருப்பதால் இதனை பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை," என்கிறார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :