மக்கள் நீதி மய்யம்: வெளியேறிய நிர்வாகிகளுக்கு மாற்று; புதிய பட்டியல் வெளியிட்ட கமல் ஹாசன் - தமிழ்நாடு அரசியல்

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவராக மட்டுமல்லாது அக்கட்சியின் பொதுச்செயலாளராகவும் பணியாற்ற இருப்பதாக கமல் ஹாசன் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிந்தபின் பல மாநில நிர்வாகிகள் கட்சியில் இருந்து வெளியேறிய நிலையில் புதிய மாநில நிர்வாகிகள் பட்டியலும் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சி மற்றும் பாரிவேந்தரின் இந்திய ஜானநாயக கட்சி ஆகியவற்றுடன் தேர்தல் கூட்டணி அமைத்து போட்டியிட்ட 154 இடங்களில் மக்கள் நீதி மையம் ஓரிடத்தில் கூட வெல்லவில்லை. கோவை தெற்குத் தொகுதியில் போட்டியிட்ட நடிகர் கமல்ஹாசன், பா.ஜ.க வேட்பாளர் வானதி சீனிவாசனிடம் 1,728 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்றார்.

2019 நாடாளுமன்றத் தேர்தலில் 3.7% ஆக இருந்த அக்கட்சியின் வாக்கு சதவிகிதம் 2.5% ஆக குறைந்தது. 2019 தேர்தலை விட 2021 தேர்தலில் சுமார் 7 லட்சம் வாக்குகளை மக்கள் நீதி மய்யம் குறைவாகப் பெற்றது."உயிருள்ள வரை அரசியலில் இருப்பேன், கட்சியும் இருக்கும்" என்று தேர்தல் முடிவுகள் வெளியான நேரத்தில் கமல்ஹாசன் கூறியிருந்தார். இந்நிலையில், கமல், சர்வாதிகார போக்குடன் நடந்துகொள்வதாகக் கூறி அக்கட்சியிலிருந்து அடுத்தடுத்து பல நிர்வாகிகள் சமீபத்தில் வெளியேறியனர் இந்நிலையில் இன்று புதிய நிர்வாகிகளில் புதிதாக இரண்டு அரசியல் ஆலோசகர்கள், இரண்டு துணைத் தலைவர்கள் மூன்று மாநில செயலாளர்கள், ஒரு நிர்வாக குழு உறுப்பினர், நற்பணி மன்ற ஒருங்கிணைப்பாளர் ஆகிய பதவிகளுக்கான பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

புதிய நிர்வாகிகள் பட்டியல் பின்வருமாறு:1. பழ.கருப்பையா - அரசியல் ஆலோசகர்2. பொன்ராஜ் வெள்ளைச்சாமி - அரசியல் ஆலோசகர்3. ஏ.ஜி.மவுரியா - துணைத் தலைவர் - கட்டமைப்பு4. தங்கவேலு - துணைத் தலைவர் - களப்பணி மற்றும் செயல்படுத்துதல்5. செந்தில் ஆறுமுகம் - மாநிலச் செயலாளர் - தகவல் தொழில்நுட்பம் & செய்தித் தொடர்பு6. சிவ.இளங்கோ - மாநிலச் செயலாளர் - கட்டமைப்பு7. சரத்பாபு - மாநிலச் செயலாளர் - தலைமை நிலையம்8. ஸ்ரீப்ரியா சேதுபதி - நிர்வாகக் குழு உறுப்பினர்9. ஜி.நாகராஜன் - நற்பணி இயக்க ஒருங்கிணைப்பாளர்

மக்கள் சேவைக்காக வாழ்க்கையை அர்ப்பணித்துக்கொண்ட தலைமைப் பண்பு மிக்கவர்கள் என்று புதிய நிர்வாகிகள் பற்றி கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :