You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
செவிலியர்கள் மலையாளம் பேச தடைவிதித்த டெல்லி ஜி.பி.பந்த் மருத்துவமனை: எதிர்ப்புக்கு பின் சுற்றறிக்கை வாபஸ்
டெல்லி அரசு மருத்துவமனையான கோவிந்த வல்லப பந்த் பட்டமேற்படிப்பு மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவன (கிப்மர்) மருத்துவமனையில் வேலை செய்யும் செவிலியர் அனைவரும் இந்தி அல்லது ஆங்கிலத்தில்தான் பேசவேண்டும் என்று சுற்றறிக்கை விடப்பட்டது.
இந்த மருத்துவமனையில் வேலை செய்யும் மலையாள செவிலியர்களை இலக்கு வைத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
மருத்துவமனையின் நர்சிங் கண்காணிப்பாளர் வெளியிட்ட ஒரு சுற்றறிக்கையில் இந்த உத்தரவு இடம் பெற்றுள்ளது. இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்ததை அடுத்து, சுற்றிக்கை திரும்பப் பெறப்பட்டுள்ளது.
கிப்மரில் பணியிடத்தில் மலையாள மொழி பேசுவது தொடர்பாக புகார் வந்துள்ளது. ஆனால், பெரும்பாலான நோயாளிகளுக்கும், சக ஊழியர்களுக்கும் இந்த மொழி தெரியாது என்பதால் ஏதும் செய்ய முடியாத நிலையும், அசௌகரியமும் ஏற்படுவதாக கூறும் அந்த உத்தரவு ஆங்கிலம், இந்தி தவிர வேறு மொழிகளைப் பேசுவதாக கண்டறிவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கிறது என்று கூறுகிறது ஏ.என்.ஐ. செய்தி நிறுவனம்.
"விநோதமான, அரசமைப்புச் சட்ட விரோதமான இந்த சுற்றறிக்கையை உடனடியாகத் திரும்பப் பெறுவதற்கு இந்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ் வர்தன் உத்தரவிடவேண்டும்" என்று வலியுறுத்தியுள்ளார் காங்கிரஸ் எம்.பி. கே.சி.வேணுகோபால்.
"கேரளாவை சேர்ந்த செவிலியர்கள் உலகம் முழுவதும் அர்ப்பணிப்போடு தங்கள் கடமையை ஆற்றுகின்றனர். நோயாளிகளை கவனித்துக்கொள்கின்றனர். ஒரே வட்டாரத்தை சேர்ந்த செவிலியர்கள் இயல்பாகவே தங்களுக்குள் பேசும்போது தங்கள் தாய்மொழியில் பேசிக்கொள்வார்கள்.
தங்கள் மொழி தெரியாதவர்களிடம் அவர்கள் தங்கள் மொழியில் பேசுவதாக கற்பனை செய்துகொள்வது தர்க்கப் பொருத்தம் இல்லாதது. இந்த சுற்றறிக்கை சந்தேகத்துக்கு இடமில்லாமல் பாகுபாடானது, அரசமைப்புச் சட்டம் உறுதி செய்யும் அடிப்படை உரிமையை மறுப்பது" என்று அவர் மேலும் கூறியுள்ளார்.
இந்தியக் குடிமக்களுக்கு உள்ள அடிப்படை மனித உரிமையை மறுக்கும் செயல் இந்த சுற்றறிக்கை என கேரள நாடாளுமன்ற உறுப்பினர் சசி தரூர் கூறியுள்ளார்.
இந்தியாவில் அரசு கல்வி நிறுவனம் ஒன்று தங்கள் செவிலியர்கள் தங்கள் தாய்மொழியில், அதைப் புரிந்துகொள்கிறவர்களிடம், பேசக்கூடாது என்று உத்தரவிட முடியும் என்பது அதிர்ச்சிகரமாக இருக்கிறது. இது ஏற்றுக்கொள்ள முடியாதது, முரட்டுத்தனமானது, புண்படுத்துவது, இந்திய குடிமக்களின் அடிப்படை மனித உரிமையை மறுதலிப்பது என்று தெரிவித்துள்ளார் சசி தரூர்.
மலையாளமும் மற்ற இந்திய மொழிகளைப் போன்றதே. மொழிப் பாகுபாட்டை நிறுத்துங்கள் என்று கூறி ட்வீட் செய்துள்ளார் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்