You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
பிடிஆர் Vs வானதி: "நீங்கள் ஒரு பிறவிப்பொய்யரா?..." - ட்விட்டரில் வார்த்தைப்போர் நடத்தும் அரசியல் பிரபலங்கள்
பாரதிய ஜனதா கட்சியின் அகில இந்திய மகளிர் அணி தலைவரும் கோவை தெற்கு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினருமான வானதி சீனிவாசனுக்கும், மாநில நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனுக்கு இடையே ட்விட்டரில் வார்த்தை மோதல் ஏற்பட்டுள்ளது.
கடந்த மே 28ம் தேதி மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் 43வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடந்தது.
இதில் பேசிய தமிழக நிதியமைச்சர், `ஒரு மாநிலத்துக்கு ஒரு ஓட்டு' என்ற ஜி.எஸ்.டி கவுன்சிலின் கொள்கை ஏற்கத்தக்கதல்ல என்றும், `ஒரு மாநிலத்தின் பொருளாதாரம் மற்றும் மக்கள் தொகையைக் கணக்கில் கொள்ள வேண்டும்' என்றும் கூறினார்.
''ஒரு சிறிய மாநிலமாக இருப்பதால் கோவாவின் குரலைப் பறிக்க ஜி.எஸ்.டி கவுன்சிலில் முயற்சி செய்யப்பட்டது. இது ஜனநாயகத்துக்கு எதிரானது. இதற்காகத் தமிழக நிதியமைச்சர் மற்றும் காங்கிரஸ் மாநில நிதியமைச்சர்கள் கோவா மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்,'' என கோவா சார்பில் கூட்டத்தில் கலந்து கொண்ட அம்மாநில அமைச்சர் மவ்வின் கோடின்ஹோ கூறியிருந்தார்.
இந்த செய்தியைத் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன், ''ஜி.எஸ்.டி கூட்டத்தில் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் நடந்து கொண்ட விதம் நமது ஜனநாயகத்திற்கு ஒரு அவமானம். நமது மாநிலத்தின் பெருமையை இந்த செயல் கெடுக்கிறது. பிடிஆர் மன்னிப்பு கோர வேண்டும்'' என ட்வீட் செய்திருந்தார்.
சமூக வலைதளத்தில் மிகவும் தீவிர பங்கேற்பாளரான தமிழக நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பல்வேறு விஷயங்கள் குறித்து ட்விட்டரில் கருத்து தெரிவிப்பார். இந்த நிலையில், வானதி சீனிவாசனுக்கு ட்விட்டரிலே பதில் அளித்த அவர்,'' உங்கள் பொய்களில் என்னை `டேக்' செய்வதை நிறுத்திவிட்டு, ஒரு மாறுதலுக்காக உண்மையாக வேலை செய்ய முயற்சியுங்கள். நீங்கள் வெறுமனே ஒரு பிறவிப்பொய்யரா? அல்லது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில் யாரோ ஒருவர் யாரையோ அவமதித்து விட்டதாகக் கருதும் அளவுக்குக் குறைந்த ஐ.க்யூ கொண்டவரா? இதற்கு நீங்கள் பதில் சொல்ல வேண்டாம்,'' என கூறியிருந்தார்.
இதற்கும் ட்விட்டரிலே பதில் அளித்த வானதி சீனிவாசன்,'' உங்கள் வார்த்தைகளில் உங்கள் அரசியல் முதிர்ச்சி வெளிப்படுகிறது. மக்களைத் தனிப்பட்ட முறையில் அவமதிப்பது மற்றும் துஷ்பிரயோகம் செய்வது உங்கள் தன்மைக்கு சான்றாகும்.'' எனக் கூறியுள்ளார்.
மேலும், பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தன்னை ட்விட்டரில் ப்ளாக் செய்த ஸ்கிரீன் ஷாட்டை வெளியிட்ட வானதி,'' நமது நிதியமைச்சரால் விமர்சனங்களைப் பொறுத்துக்கொள்ள முடியாதது வருத்தமளிக்கிறது. நீங்கள் என்னைப் பொய் கூறுபவர் அல்லது குறைந்த ஐ.க்யூ கொண்டவர் என அழைக்கலாம். ஆனால், இதனால் உண்மை மாறாது. ஹெச். ராஜா மற்றும் ஜக்கி வாசுதேவ் குறித்த உங்கள் கருத்துக்கள் உங்களது மோசமான தன்மையை வெளிப்படுத்துகின்றன'' என கூறியுள்ளார்.
''கெட்ட வாசனையை தவிர்க்க ஒருவர் ஜன்னல்களை தாழிட்டுக் கொள்ளும் சாதாரண மனிதரைப் போல உங்களைப் போன்றவர்களை நான் ப்ளாக் செய்து விடுவேன். உங்களிடம் 'நல்லவர்' என்ற சான்றிதழைப் பெறுவதில் அர்த்தமில்லை. தயவு செய்து என் நேரத்தை வீணாக்காதீர்கள்'' என பழனிவேல் தியாகராஜன் கூறியுள்ளார்.
இந்த இருவர் இடையிலான வார்த்தை போர், சமூக ஊடகங்களில் திமுக மற்றும் பாஜகவினர் இடையிலான சண்டையாக மாறி வருகிறது. பலரும் இவர்களின் செயல்பாடுகளை ஆதரித்தும் விமர்சித்தும் ட்விட்டர் பக்கங்களிலேயே கருத்துகளை பதிவிட்டு வருகிறார்கள்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: