You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
பிரதமர் இல்ல கட்டுமானம் ஆகஸ்ட் மாதத்தில் தொடங்கப்படலாம் - ஊடக செய்திகள்
(இன்று 31 மே 2021, திங்கட்கிழமை இந்தியாவில் உள்ள சில முக்கிய நாளிதழ்களிலும் அவற்றின் இணையதளங்களிலும் வெளியான முக்கிய செய்திகள் சிலவற்றை இங்கே தொகுத்து வழங்குகிறோம்.)
15 ஏக்கர் நிலபரப்பில் கட்டப்பட உள்ள பிரதமர் அலுவலகம் மற்றும் பிரதமர் வீட்டு கட்டுமானப் பணிகள், வரும் ஆகஸ்ட் மாதத்தில் தொடங்க இருப்பதாக டைம்ஸ் ஆஃப் இந்தியாவில் செய்தி வெளியாகியுள்ளது.
இந்த திட்டத்தை 2021 டிசம்பர் மாதத்துக்குள் நிறைவு செய்வதாக, கடந்த ஜனவரி மாதம் மத்திய பொதுப் பணித் துறை அலுவலகம் கூறியது. கொரோனா இரண்டாம் அலை காரணமாக பணிகள் தொடங்கப்பட தாமதமாயின.
இந்த பிரம்மாண்ட பிரதமர் அலுவலகம் மற்றும் இல்லத்தில் 1,000 அரசு ஊழியர்கள் வேலை பார்க்கலாம். 112 வாகனங்கள் நிறுத்தப்படுவதற்கான இட வசதிகள் உண்டு.
பிரதமருக்கு பாதுகாப்பு வழங்கும் சிறப்பு பாதுகாப்புப் படை குழுவுக்கான கட்டடமும், பிரதமர் இல்லத்துக்கு அருகில் 2.5 ஏக்கர் நிலபரப்பில் வர இருக்கிறது.
இந்த வளாகம், பிரதமரின் அலுவலகம் மற்றும் பிரதமரின் இல்லம் என ஒருங்கே கொண்டதாக இருக்கும். பிரதமரின் இல்லத்துக்கு செலவழிக்க இருக்கும் தொகை குறித்த விவரங்கள் வெளியிடப்படவில்லை.
ஆனால் சென்ட்ரல் விஸ்டா திட்டத்துக்கு 13,400 கோடி ரூபாய் செலவழிக்க இருப்பதாக அச்செய்தியில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இந்த தொகையில் நாடாளுமன்றம் மற்றும் ராஜ்பத் மறுசீரமைப்புச் செலவுகள் அடங்காது.
"எனக்கு பரோல் வேண்டாம், சிறையே பாதுகாப்பாக உணர்கிறேன்" என கூறிய மீரட் கைதி
ஆசிஷ் குமார் என்பவர் உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள மீரட் சிறையில் ஆறு ஆண்டு கால சிறை தண்டனையில் இருக்கிறார். அவருக்கு சிறப்பு பரோல் வழங்கப்பட்டது. ஆனால் அதை ஆசிஷ் ஏற்கவில்லை என தி இந்தியன் எக்ஸ்பிரஸில் செய்தி வெளியாகியுள்ளது.
கொரோனா வைரஸ் பரவிக் கொண்டிருக்கும் இந்த காலகட்டத்தில், தான் வெளியே செல்வதை விட சிறையிலேயே பாதுகாப்பாக உணர்வதாக கூறியுள்ளார் ஆசிஷ்.
மாநில அரசின் வழிகாட்டுதல் பேரில், மீரட் சிறையில் இருக்கும் 43 குற்றவாளிகளுக்கு எட்டு வார கால சிறப்பு பரோல் வழங்கப்பட்டது. அதில் ஆசிஷ் தவிர மற்ற 42 பேரும் பரோலை ஏற்றுக் கொண்டனர்.
சிறையில் ஜன நெருக்கடியைக் குறைக்கும் நோக்கத்தோடு மீரட் சிறையில் இருக்கும் 326 விசாரணைக் கைதிகளுக்கும் சிறை நிர்வாகம் பரோல் வழங்கியது குறிப்பிடத்தக்கது.
ஆசிஷைப் போலவே, உத்தரப் பிரதேசத்தில் 21 சிறைக் கைதிகள், தங்களுக்கு பரோல் வேண்டாம் என மறுத்துள்ளதாக பிடிஐ முகமையில் செய்தி வெளியாகியுள்ளது.
பரோல் பெறுபவர்கள், எத்தனை நாட்கள் பரோல் பெறுகிறார்களோ, அத்தனை நாட்களையும் தண்டனை காலத்துக்குப் பிறகு சிறையில் கழித்துவிட்டு தான் வெளியே வர முடியும் என அச்செய்தியில் கூறப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் எம்.எல்.ஏ.க்கள் பலத்தை உயர்த்தியதன் மூலம் தனித்து ஆட்சி அமைக்க பா.ஜ.க. முயற்சியா? நமச்சிவாயம் எம்.எல்.ஏ பதில்
எம்.எல்.ஏ.க்கள் பலத்தை உயர்த்தியதன் மூலம் புதுச்சேரியில் தனித்து ஆட்சி அமைக்க பா.ஜ.க. முயற்சிக்கிறதா? என்பதற்கு நமச்சிவாயம் பதில் அளித்திருகப்பதாக தினத்தந்தியில் செய்தி வெளியாகி இருக்கிறது.
புதுச்சேரியில் அமைச்சரவை விவகாரத்தில் என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜ.க. இடையே முரண்பாடு ஏற்பட்டுள்ளது. இந்த பரபரப்பான சூழ்நிலையில் கட்சியின் மேலிட அழைப்பை ஏற்று பா.ஜ.க. தலைவர்கள் நமச்சிவாயம், ஏம்பலம் செல்வம் ஆகியோர் டெல்லி சென்றனர்.
அங்கு பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவை சந்தித்து புதுச்சேரி அரசியல் நிலவரம், அமைச்சரவையில் பங்குபெறுவது குறித்து பேசினர்.
அதன்பின் நேற்று நமச்சிவாயம் புதுச்சேரி திரும்பிய போது, பா.ஜ.க. தனது எம்.எல்.ஏ.க்கள் பலத்தை உயர்த்தியதை பயன்படுத்தி புதுவையில் தனித்து ஆட்சி அமைக்க முயற்சிப்பதாக தகவல் வெளியாகிறதே? என நிருபர்கள் கேட்டனர்.
அந்த குற்றச்சாட்டு உண்மை அல்ல. புதுவையில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி முதலமைச்சர் ரங்கசாமி தலைமையில் நடக்கும். மிகச் சிறப்பான முறையில் தொடர்ந்து மக்கள் நலத்திட்டங்கள் செயல்படுத்தப்படும் என தெரிவித்திருப்பதாக அச்செய்தியில் கூறப்பட்டுள்ளது.
மெஹுல் சோக்ஸியை அழைத்து வருவதற்கான ஆவணங்களை தனி விமானத்தில் அனுப்பிய இந்தியா: ஆன்டிகுவா பிரதமா்
பல கோடி ரூபாய் கடன் மோசடியில் ஈடுபட்ட தப்பியோடிய மெஹுல் சோக்ஸியை நாடு கடத்தி இந்தியாவுக்கு அழைத்துச் செல்வதற்கான ஆவணங்களை தனி விமானத்தில் இந்தியா அனுப்பி வைத்துள்ளது என ஆன்டிகுவா - பார்புடா தீவுகளின் பிரதமா் கஸ்டோன் பிரெளன் தெரிவித்துள்ளதாக தினமணியில் செய்தி வெளியாகியுள்ளது.
ஆன்டிகுவாவில் நடைபெற்ற வானொலி நிகழ்ச்சி ஒன்றில் இத்தகவலை அவா் தெரிவித்தார். இருந்தபோதும், இந்திய அதிகாரிகள் சார்பில் இந்த தகவல் உறுதிப்படுத்தப்படவில்லை.
ரூ.13,500 கோடி வங்கிக் கடன் மோசடியில் ஈடுபட்ட வைர வியாபாரிகள் நீரவ் மோடியும், அவருடைய உறவினா் மெஹுல் சோக்ஸியும் கடந்த 2018-ஆம் ஆண்டு ஜனவரியில் வெளிநாடுகளுக்குத் தப்பிச் சென்றனா்.
இவா்கள் மீது வழக்குப் பதிவு செய்து விசாரித்து வரும் சிபிஐ, அவா்களை இந்தியாவுக்கு நாடு கடத்தி கொண்டுவருவதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளது.
நீரவ் மோடி பிரிட்டனுக்கு தப்பிச் சென்ற நிலையில், மெஹுல் கரீபியன் தீவுகளில் ஒன்றான ஆன்டிகுவா-பார்புடாவில் தஞ்சம் அடைந்தார். கடந்த ஞாயிற்றுக்கிழமை மாயமான அவா், படகு மூலம் டொமினிகா தீவுக்குத் தப்பிச் சென்றார். அவருடைய தோழியுடன் சொகுசுப் படகில் டொமினிகாவுக்கு உல்லாசப் பயணம் செய்ததாகவும் அங்கு அவா் போலீஸாரிடம் சிக்கியதாகவும் கூறப்படுகிறது.
இதற்கிடையே, அவரைக் கைது செய்வதற்காக இன்டா்போல் அமைப்பு நோட்டீஸ் வெளியிட்டது. அதனைத் தொடா்ந்து சுதாரித்துக் கொண்ட டொமினிகா போலீஸார், மெஹுல் சோக்ஸியை கைது செய்து, ஆன்டிகுவாவுக்கு திருப்பியனுப்பும் நடவடிக்கையை மேற்கொண்டனா்.
ஆனால், அவரை நாடுகடத்த இடைக்கால தடை விதித்த டொமினிகா உயா் நீதிமன்றம், வழக்கின் விசாரணையை வரும் ஜூன் மாதம் 2-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது. அதுவரை, இந்த விவகாரத்தில் எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என நீதிமன்றம் உத்தரவிட்டது.
அதனைத் தொடா்ந்து, மெஹுல் சோக்ஸியை நாடு கடத்தி அழைத்து வருவதற்கு தேவையான ஆவணங்களை, தனி விமானத்தில் இந்தியா அனுப்பிவைத்துள்ளது. முக்கிய நபா்களை அழைத்துச் செல்வதற்கான சிறிய ரக ஏ7சிஇஇ என்ற கத்தாரைச் சோ்ந்த தனியார் விமானம் டெல்லியிலிருந்து வெள்ளிக்கிழமை பிற்பகல் 3 மணிக்குப் புறப்பட்டு டொமினிகாவின் டக்ளஸ் - சார்லஸ் விமான நிலையத்தைச் சென்றடைந்தது என ஆன்டிகுவா செய்தி சேனலில் செய்தி வெளியானது.
இந்தத் தகவலை ஆன்டிகுவாவில் நடைபெற்ற வானொலி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அந்நாட்டு பிரதமா் கஸ்டோன் புரெளன் உறுதிப்படுத்தியுள்ளார்.
'மெஹுல் சோக்ஸியை நாடுகடத்தி அழைத்துச் செல்வதற்குத் தேவையான ஆவணங்களை எடுத்துக்கொண்டு சிறப்பு விமானம் ஒன்று இந்தியாவிலிருந்து வந்துள்ளது' என அவா் கூறியதாக ஆன்டிகுவா செய்தி சேனல் செய்தி வெளியிட்டதாக அச்செய்தியில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் தமிழகத்தின் கோரிக்கைகளை நிராகரிப்பதா?- தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கம் அதிருப்தி
ஜிஎஸ்டி கவுன்சிலின் 43-வது காணொளிக் காட்சி கூட்டம் மே 28-ல் நடந்தது. இதில் கொரோனா தடுப்பூசிகளுக்கு விதிக்கப்படும் 5 சதவீத ஜிஎஸ்டி வரி, கொரோனா சிகிச்சைக்கான மருந்துகள், ஆக்சிஜன் செறிவூட்டிகளுக்கு விதிக்கப்படும் 12 சதவீத வரியை ரத்து செய்வது உட்பட பல்வேறு கோரிக்கைகளுக்கு தீர்வு காணப் படவில்லை என தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கம் கூறியுள்ளதாகச் இந்து தமிழ் திசையில் செய்தி வெளியாகியுள்ளது.
தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கத் தலைவர் என்.ஜெகதீசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் "2017 முதல் 2021 ஏப்ரல் வரைக்கான ஜிஎஸ்டிஆர்-1 மற்றும் ஜிஎஸ்டிஆர்-3பி படிவங்களைச் சமர்ப்பிக்க தாமதக் கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது.
இது சிறிய அளவில் வணிகம் செய்வோருக்கு உதவும். ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள தொழில் வணிகத் துறையினர் இந்த ஆண்டு சமர்ப்பிக்க வேண்டிய பல்வேறு ஜிஎஸ்டி படிவங்களை சமர்ப்பிப்பதற்கான காலக்கெடுவை அபராதம் மற்றும் தாமதக் கட்டணம் இன்றி ஆக.31 வரை நீட்டிக்க வேண்டும்.
உள் நாட்டிலேயே தயாரிக்கப்படும் கொரோனா சிகிச்சை உபகரணங்கள் மற்றும் மருந்துகளுக்கு ஜிஎஸ்டி வரி விலக்கு அளிப்பது தொடர்பாக அமைத்துள்ள குழுவில் பல்வேறு மாநிலங்களுக்குப் பிரதிநிதித்துவம் அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் தமிழகம் புறக்கணிக்கப்பட்டுள்ளது.
அசாதாரணமான சூழலில் அரசியல் சார்புகளுக்கு இடம் அளிக்காமல் நோக்கம் நிறைவேற வேண்டும் என்ற ஒரே இலக்கை கருத்தில் கொண்டு மத்திய அரசு செயல்பட வேண்டும்" என அச்செய்தியில் கூறப்பட்டுள்ளது.
பிற செய்திகள்:
- ஏஐசிடிஇ அனுமதி: பிராந்திய மொழிகளில் பொறியியல் வகுப்புகள்: யாருக்கு சாதகம்?
- கோவைக்கு எந்த பாரபட்சமும் இல்லை: மு.க. ஸ்டாலின் விளக்கம்
- பிபிஇ பாதுகாப்பு ஆடையுடன் கொரோனா வார்டில் ஆய்வு செய்த முதல்வர் ஸ்டாலின்
- பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் - கேரி சாம்சன் திருமணம் எளிமையாக நடந்தது
- நரேந்திர மோதி அழைத்த கூட்டத்திற்கு ஏன் போகவில்லை? மம்தா சொல்லும் காரணம்
- 1933ஆம் ஆண்டிலேயே சாதனை படைத்த எகிப்தின் முதல் பெண் விமானி
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்