ஸ்ரீவில்லிபுத்தூர் காங்கிரஸ் வேட்பாளர் மாதவராவ் உயிரிழப்பு: இடைத் தேர்தல் வர வாய்ப்பு

ஸ்ரீவில்லிபுத்தூர் (தனி) தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் மாதவ ராவ் (62) உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சைப் பலனின்றி இன்று காலை உயிரிழந்தார்.

வாக்கு எண்ணிக்கை முடிந்தபின் மாதவ ராவ் வெற்றிபெற்றால், இந்தத் தொகுதிக்கு இடைத் தேர்தல் நடத்த வேண்டிய சூழல் உருவாகியுள்ளது.

தமிழக சட்டமன்றத் தேர்தலூக்கான வாக்குப்பதிவு கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற்றது. விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் (தனி) சட்டமன்றத் தொகுதியில் மதச் சார்பற்ற கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக வத்திராயிருப்பை சேர்ந்த காங்கிரஸ் கட்சியின் மாநில பொதுக்குழு உறுப்பினர் மாதவ ராவ் போட்டியிட்டார்.

வேட்பு மனுத் தாக்கல் செய்து இரண்டு நாட்கள் பிரசாரத்தில் ஈடுபட்ட, நிலையில் கடந்த மார்ச் மாதம் 20ஆம் தேதி அவருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது. கொரோனா அறிகுறியுடன் மதுரையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார் அவர். மாதவ ராவிற்கு பதிலாக அவரது மகள் திவ்யா பிரசாரத்தில் ஈடுபட்டு வந்தார்.

மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் இன்று காலை 7.55 மணி அளவில் மாரடைப்பால் காங்கிரஸ் வேட்பாளர் மாதவராவ் உயிரிழந்த விட்டதாக அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர் முத்து மதுரையில் செய்தியாளர்களிடம் பேசுகையில், மாதவராவ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதிலிருந்து சுவாசக் கோளாறு இருந்து வந்தது.

அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளித்தும், முன்னேற்றம் ஏற்படவில்லை. இரண்டு முறை கொரோனா பரிசோதனை செய்த போதும் பரிசோதனையில் முடிவில் கொரோனா தொற்று உறுதி செய்யப்படவில்லை.

இருப்பினும் கொரோனோ அறிகுறிகள் இருந்ததால் கொரோனோ பாதிப்பிற்கு அளிக்கும் சிகிச்சையை முழுமையாக வழங்கினோம். மாதவராவுக்கு நிமோனியா நோயால் நுரையீரல் தொற்று பாதிப்பு ஏற்பட்டு மூச்சு திணறல் ஏற்பட்டு இன்று காலை உயிரிழந்தார் என தெரிவித்தார்.

யார் இந்த மாதவராவ்

விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பில் 1952ஆம் ஆண்டு மாதவராவ் பிறந்தார். இவர் பட்டப்படிப்பு படித்தவர். இவரது மனைவி 2015-ல் உடல் நல குறைவால் உயிரிழந்தார். இவருக்கு திவ்யா என்கின்ற ஒரு மகள் உள்ளார். கடந்த 1985ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டு அரசியல் பயணத்தை தொடங்கினார்.

இவர் 1986ஆம் ஆண்டு அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் விருதுநகர் மாவட்ட மாணவர் அணிச் செயலாளராக இருந்தார். பின் 1987ஆம் ஆண்டு தமிழ்நாடு தேசிய காங்கிரஸ் மாணவர் அணி துணைத் தலைவரானார்.

பின்னர் தேசிய காங்கிரஸ் இளைஞர் அணி செயலாளர், தேசிய காங்கிரஸ் ஒருங்கிணைப்பாளர் குழு ஆலோசகர், சட்ட ஆலோசனை குழு துணை செயலாளர், விருதுநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் என பல்வேறு பொறுப்புகளை வகித்தவர். இறக்கும்போது தமிழ்நாடு காங்கிரஸ் மாநில பொதுக்குழு உறுப்பினராக இருந்தார்.

மாதவராவ் மகள் திவ்யா தீவிர தேர்தல் பிரசாரம்

ஸ்ரீவில்லிபுத்தூர் (தனி) தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராகப் போட்டியிட்ட மாதவ ராவ் உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கபட்டதால் அவரால் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட முடியவில்லை.

இதனால் மாதவராவ் மகள் திவ்யா, தேர்தல் களத்தில் மிகத் தீவிரமாக, தன் தந்தைக்காக பிரசாரத்தில் ஈடுபட்டார். மாதவராவ் உடல் நிலை மிகவும் மோசமடைந்த நிலையில், அவரது மகள் திவ்யா காங்கிரஸ் வேட்பாளராக மாற்றப்படுவார் என்ற தகவல் ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் பரவியது.

இதனையடுத்து டம்மி வேட்பாளராக வேட்பு மனு தாக்கல் செய்த திவ்யா தனது வேட்பு மனுவை வாபஸ் பெற்று தனது தந்தைக்காக வீதி வீதியாக தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டடார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: