தமிழ்நாடு அரசு அரியர் தேர்வுகளை ரத்து செய்ததை ஏற்க முடியாது: சென்னை உயர் நீதி மன்றம்

(இன்று 08.04.2021 வியாழக்கிழமை, இந்தியாவில் உள்ள சில முக்கிய நாளிதழ்களிலும் அவற்றின் இணையதளங்களிலும் வெளியான முக்கிய செய்திகள் சிலவற்றை இங்கே தொகுத்து வழங்குகிறோம்.)

அரியர் தேர்வுகளை ரத்து செய்து பிறப்பித்த உத்தரவை ஏற்க இயலாது எனவும், தேர்வு நடத்துவது குறித்துப் பரிசீலிக்க வேண்டும் எனவும் தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக இந்து தமிழ் திசையில் செய்தி வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்ததை அடுத்து, 2020-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், அரியர் தேர்வை ரத்து செய்து தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது. அந்த அரசாணையில், அரியர் தேர்வுக்குக் கட்டணம் செலுத்தியவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

இந்த அரசாணையை ரத்து செய்யக் கோரி அண்ணா பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி மற்றும் திருச்செந்தூரைச் சேர்ந்த வழக்கறிஞர்கள் குமார் ஆதித்தன் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகளைத் தாக்கல் செய்திருந்தனர்.

இந்த வழக்குகள் தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வுக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தன.

அப்போது தமிழக அரசுத் தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர், தமிழக அரசின் இந்த அரசாணைக்கு அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழுமமும், சட்டப்படிப்பு, விவசாயப் படிப்பு, மருத்துவப் படிப்பு, ஆசிரியர் படிப்புகளை நிர்வகிக்கும் அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்ததாகவும், அதைத் தொடர்ந்து தேர்வுகள் நடத்தப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார். பல்கலைக்கழக மானியக் குழு விதிகளின் அடிப்படையிலேயே கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் அரியர் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டதாகவும் குறிப்பிட்டார்.

இதற்கு ஆட்சேபம் தெரிவித்த பல்கலைக்கழக மானியக்குழு தரப்பு வழக்கறிஞர், 2020ஆம் ஆண்டு ஏப்ரல் 29 மற்றும் ஜூலை மாதங்களில் பிறப்பிக்கப்பட்ட விதிகளில் எளிய முறையில் தேர்வுகளை நடத்த அறிவுறுத்தல் வழங்கி, விதிமுறைகள் வகுக்கப்பட்டதாகவும், தேர்வுகள் நடத்த வேண்டாம் என்று தெரிவிக்கவில்லை என்றும் சுட்டிக்காட்டினார்.

அரியர் தேர்வு எழுதக் கட்டணம் செலுத்தினால் தேர்ச்சி என்ற அரசு உத்தரவை ஏற்றுக்கொள்ள இயலாது என்று தெரிவித்த நீதிபதிகள், ஏதேனும் தேர்வு நடைமுறையை மேற்கொள்வது குறித்துப் பரிசீலிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர்.

மேலும், தமிழகம் முழுவதும் பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் வாரியாக எத்தனை மாணவர்கள் அரியர் தேர்வுக்கு விண்ணப்பித்தனர் என்பது குறித்தும், எத்தனை மாணவர்கள் தேர்ச்சி அடைந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளனர் என்பது குறித்தும் முழுமையான விவரங்களைத் தாக்கல் செய்ய வேண்டுமென தமிழக அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை ஏப்ரல் 15ஆம் தேதிக்குத் ஒத்திவைத்துள்ளனர்.

கல்வியின் புனிதத்தில் எந்த சமரசமும் இல்லாமல் ஏதேனும் தேர்வு நடைமுறைகளை மேற்கொள்வது குறித்துத் தமிழக அரசும், பல்கலைக்கழக மானியக்குழுவும் கலந்து பேசி ஆலோசனைகளை வழங்க வேண்டும் என்றும் நீதிபதிகள் அறிவுறுத்தியுள்ளதாக அச்செய்தியில் கூறப்பட்டுள்ளது.

ஏப். 12 முதல் திருப்பதியில் இலவச தரிசனம் ரத்து: சா்வதரிசன டோக்கன் விநியோகம் நிறுத்தம்

திருப்பதியில் வழங்கப்பட்டு வரும் சா்வ தரிசன நேர ஒதுக்கீடு டோக்கன்கள் ஏப்ரல் 12 முதல் தற்காலிகமாக ரத்து செய்யப்படுவதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளதாக தினமணியில் செய்தி வெளியாகியுள்ளது.

திருப்பதியில் உள்ள விஷ்ணு நிவாசம், பூதேவி காம்பளக்ஸ், சீனிவாசம் உள்ளிட்ட இடங்களில் தினசரி சா்வதரிசன டோக்கன்கள் வழங்கப்பட்டு வருகின்றன. தினசரி 22 ஆயிரம் டோக்கன்கள் இங்குள்ள கவுன்டா்களில் வழங்கப்பட்டு வந்த நிலையில், கடந்த வாரம் தேவஸ்தானம் அதை 15 ஆயிரமாக குறைத்தது.

இந்நிலையில், நாடு முழுவதும் தற்போது கொரோனா தொற்றின் 2-ஆவது அலை அதிகரித்து வருகிறது. திருப்பதியில் கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை சிறிது சிறிதாக உயா்ந்து வருகிறது. எனவே, தேவஸ்தானம் பக்தா்களுக்கான பாதுகாப்பு நடவடிக்கைகளை கருத்தில் கொண்டு, வரும் ஏப்ரல் 12-ஆம் தேதி முதல் திருப்பதியில் வழங்கப்பட்டு வரும் சா்வதரிசன நேர ஒதுக்கீடு டோக்கன்களை ரத்து செய்துள்ளது. ஏப்ரல் 11 அதாவது ஞாயிற்றுக்கிழமை வரை மட்டுமே இந்த டோக்கன்கள் வழங்கப்படும்.

மகாராஷ்டிர மாநிலத்தில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த தேவஸ்தானம் ஷீரடி கோயிலில் தரிசனத்தை ரத்து செய்தது போல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தேவஸ்தானம் இந்த முடிவை மேற்கொண்டுள்ளது. மீண்டும் டோக்கன்கள் வழங்கப்படும் தேதி பின்னா் அறிவிக்கப்படும் என அச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து தங்கையை ஆணவக்கொலை செய்த சகோதரர் கைது

இளம்பெண் தற்கொலையில் திடீர் திருப்பமாக, அவரை ஆணவக்கொலை செய்ததாக அவரது சகோதரரை போலீசார் கைது செய்துள்ளனர். காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து கொலை செய்தது தெரியவந்துள்ளதாக தினத்தந்தியில் செய்தி பிரசுரமாகியுள்ளது.

பெங்களூரு ஹெண்ணூர் அருகே வசித்து வருபவர் கிரண் (வயது 25). இவர் ஆட்டோ ஓட்டி வருகிறார். இவரது சகோதரி மங்களா (வயது 19). இவர், தனியார் தொழிற்சாலை ஒன்றில் வேலை பார்த்து வந்தார். தனியார் தொழிற்சாலையில் வேலை செய்த மங்களாவும், ஒரு வாலிபரும் காதலித்துள்ளனர்.

அவர்கள் பல்வேறு பகுதிகளில் ஒன்றாக சேர்ந்து நேரத்தைச் செலவிட்டுள்ளனர். இதுபற்றி கிரணுக்கு தெரியவந்ததும், தங்கையை கண்டித்துள்ளார். வாலிபருடனான காதலை கைவிடும்படியும் அவர் கூறியுள்ளார். ஆனால் மங்களா கேட்கவில்லை.

கடந்த 4-ம் தேதி காதலனுடன் நேரத்தை செலவழித்துவிட்டு இரவு வீட்டுக்கு தாமதமாக வந்துள்ளார் மங்களா. இதுதொடர்பாக அவருடன் கிரண் சண்டை போட்டுள்ளார். திடீரென்று ஆத்திரமடைந்த கிரண், வீட்டில் இருந்த கத்தியால் மங்களாவை குத்திக் கொலை செய்தது தெரியவந்தது.

தனது தங்கை தற்கொலை செய்து கொண்டது போல இருக்க வேண்டும் என்பதற்காக, அவரது உடலை தன்னுடைய ஆட்டோவில் எடுத்து சென்று ரயில் தண்டவாளத்தில் வீசிவிட்டு வந்திருந்தார். கேமராவில் பதிவான காட்சிகளால் போலீசாரிடம் சிக்கிக் கொண்டார் கிரண். கைதான கிரண் மீது பையப்பனஹள்ளி ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருவதாக அச்செய்தியில் கூறப்பட்டுள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: