You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
தமிழக சட்டமன்ற தேர்தல் 2021: பள்ளிவாசலுக்குள் சென்று வாக்கு சேகரிக்க முயன்ற அதிமுக வேட்பாளர்; எதிர்ப்பு தெரிவித்த இளைஞர்கள்
தமிழக மற்றும் புதுச்சேரி சட்டமன்ற தேர்தல் குறித்த செய்திகளை நேயர்கள் இந்த பக்கத்தில் தெரிந்து கொள்ளலாம்.
தேர்தல் நடத்தை விதிகளை மீறி வழிபாட்டு தலத்திற்குள் சென்று வாக்கு சேகரிக்க முயன்றதாக மேலூர் அதிமுக வேட்பாளர் பெரியபுள்ளான் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
மேலூர் சட்டமன்றத் தொகுதியில் அதிமுக சார்பாக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பெரிய புள்ளான் வேட்பாளராக போட்டியிடுகிறார். இவர் திமுக கூட்டணியின் தலைமையில் காங்கிரஸ் கட்சி சார்பாக போட்டியிடும் டி. ரவிச்சந்திரனை எதிர்கொள்கிறார்.
பெரியபுள்ளான் சனிக்கிழமை அன்று மேலூர் தொகுதியில் உள்ள சொக்கலிங்கபுரத்தில் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தார். வாக்கு சேகரிப்பதற்காக அங்குள்ள பள்ளிவாசலுக்கு சென்றதை அடுத்து, அங்கு கூடிய இஸ்லாமிய இளைஞர்கள் அவர் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷம் எழுப்பினர். இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் அவரை பாதுகாப்பாக வெளியே அனுப்பி வைத்தனர்.
தகவல் கிடைத்தவுடன் பறக்கும் படை அதிகாரியும், அலங்காநல்லூர் வட்டார வளர்ச்சி அலுவலருமான பாலச்சந்தர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை செய்த பிறகு கொட்டாம்பட்டி காவல் துறையில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில், போலீசார் பெரியபுள்ளான் மீது சட்டவிரோதமாகச் சென்றதாகவும், பொதுப்பணியாளர் முறைப்படி பிரகடனப்படுத்தப்பட்ட உத்தரவிற்கு கீழ்ப்படியாததாகவும் இந்திய தண்டனைச் சட்டம் 143 மற்றும் 188 வது பிரிவுகளின் கீழ் ஞாயிற்றுக்கிழமை வழக்கு பதிந்தனர்.
பறக்கும் படை அலுவலர் பாலச்சந்தர், வேட்பாளர் பெரியபுள்ளான் பள்ளிவாசலுக்குள் ஜமாத் தலைவர்களை சந்தித்து ஆசி பெறுவதற்காகச் சென்றதாகவும், அதற்கு அங்கே இருந்த இளைஞர்கள் ஆட்சேபனை தெரிவித்ததாகவும் கூறினார். அந்த சம்பவம் தொடர்பாக காவல் துறையில் தான் புகார் அளித்து இருப்பதாகவும் தெரிவித்தார்.
மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித் குமாரிடம் இது தொடர்பாக பிபிசி தமிழ் கேட்டபோது, "அந்த வேட்பாளர் பள்ளிவாசலுக்கு உள்ளே செல்லவில்லை. சில இஸ்லாமிய இளைஞர்கள் பிரச்னை செய்தவுடன் அங்கிருந்து சென்று விட்டார். எந்த ஒரு புகாரும் பெறப்படாததால் முதல் தகவல் அறிக்கை பதியவில்லை," என்று கூறினார்.
புதுச்சேரி காங்கிரஸ் அறிக்கை வெளியீடு
புதுச்சேரியில் குடும்பத் தலைவிக்கு மாதம்தோறும் ரூ.1000 உதவித்தொகை வழங்கப்படும் எனக் காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி மாநிலத்திற்கான காங்கிரஸ் கட்சியின் சட்டப்பேரவை தேர்தல் அறிக்கையை முன்னாள் மத்திய அமைச்சரும், புதுச்சேரி மாநில தேர்தல் பொறுப்பாளருமான வீரப்பமொய்லி மற்றும் முன்னாள் முதல்வர் நாராயணசாமி ஆகியோ வெளியிட்டனர்.
இந்த அறிக்கையில், பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட மாநில அந்தஸ்து, மாநில கடன் உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.
புதுச்சேரி காங்கிரஸ் கட்சி தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ள சில முக்கிய வாக்குறுதிகள்:
- புதுச்சேரிக்கு முழுமையாக மாநில அந்தஸ்து.
- புதுச்சேரி அரசு மத்திய அரசிடம் இருந்து பெறப்பட்ட கடன்கள் ரத்து.
- புதுச்சேரியை 15வது நிதிக் கமிஷனில் சேர்க்க நடவடிக்கை.
- ஆதிதிராவிடர், பழங்குடியினர் பிற்படுத்தப்பட்டோர்,
- மீனவர் உட்பட அனைத்து தரப்பு அனைத்து மாணவர்களுக்கு ஆரம்பக் கல்வி முதல் ஆராய்ச்சி கல்வி வரை இலவசம்.
- குடும்பத் தலைவிக்கு மாதாமாதம் ரூ.1000 வழங்கப்படும்.
- மேல்நிலை பள்ளி மற்றும் கல்லூரி பயிலும் மாணவர்களுக்கு 60 GB டேட்டா மாதந்தோறும் வழங்கப்படும்.
- நீட் தேர்வை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.
- மூடப்பட்ட ரேஷன்கடைகள் மீண்டும் திறக்கப்படும்.
- அனைவருக்கும் மருத்துவ காப்பீடு செய்து தரப்படும்.
- விவசாயம், சட்டம் மற்றும் மருத்துவக் கல்விக்கு தனித்தனியே பல்கலைக்கழகம் நிறுவப்படும்.
- மீனவர்களின் ஓய்வூதியம் இரண்டு மடங்காக உயர்த்தி வழங்கப்படும் .
- இயற்கை சீற்றத்தால் மீனவர்கள் இறந்தால் ரூபாய் 10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும்.
- மீன்வளத் துறையில் மீனவர்களுக்கு வேலையில் இட ஒதுக்கீடு செய்து தரப்படும்.
- குடும்பத்தில் ஒருவருக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கப்படும்.
- விவசாயிகளுக்கு ஹெக்டேருக்கு 24000லிருந்து ரூபாய் 30000ஆக மானியத் தொகை உயர்த்தி வழங்கப்படும்.
- நெல் கரும்பு போன்ற அனைத்து விவசாயிகளுக்கும் அதிகபட்சமாக மானியத்தொகை ரூபாய் 25000 ஆயிரம் வழங்கப்படும்.
- புதுச்சேரியில் நான்கு பிராந்தியங்களிலும், நகரப்பகுதியில் சாலையோரம் வசிக்கும் வீடற்ற நபர்களுக்குத் தங்கும் வசதி கட்டித் தரப்படும்.
- பிற்படுத்தப்பட்டோர் வாரியத்தின் மூலம் கடன்கள் முழுவதுமாக ரத்து செய்யப்படும்.
- ஆதிதிராவிடர் வாரியத்தின் மூலம் வாங்கப்பட்ட கடன்கள் முழுமையாக ரத்து செய்யப்படும்.
- உடனடியாக உள்ளாட்சித்தேர்தல் நடத்த நடவடிக்கை எடுக்கப்படும்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: