You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
தமிழக சட்டமன்ற தேர்தல் 2021: விடுதலை சிறுத்தைகள் தேர்தல் அறிக்கை சொல்வது என்ன?
தனியார் துறையில் இட ஒதுக்கீடு, ஜாதி மறுப்புத் திருமணம் செய்தோருக்கு வேலைவாய்ப்புகளில் முன்னுரிமை உள்ளிட்ட அம்சங்களுடன் விடுதலை சிறுத்தைகள் கட்சி தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது.
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் விழுப்புரத்தில் வெளியிட்டார். அப்போது அக்கட்சியின் பொதுச் செயலாளர் ரவிக்குமார் உடனிருந்தார்.
இந்த தேர்தல் அறிக்கையில், இதற்கு முன்பாக நிகழ்த்திய சாதனைகளை பட்டியலிட்டு, தற்போதைய தேர்தலுக்கான வாக்குறுதிகளை அக்கட்சி தெரிவித்திருக்கிறது.
மருத்துவ படிப்பில் அகில இந்திய ஒதுக்கீட்டிற்கு தமிழகத்திலிருந்து இடங்கள் ஒதுக்கப்படுவதை நிறுத்துவது, பொருளாதார ரீதியில் பின்தங்கியோருக்கான இடஒதுக்கீட்டை செயல்பாட்டுக்கு வர விடாமல் தடுப்பது, தனியார் துறையில் இட ஒதுக்கீட்டை விரிவுபடுத்துவதற்கான சட்டத்திருத்தத்தை கொண்டு வருவது, ஆணவ கொலைகளைத் தடுக்க தனிச் சட்டம் இயற்ற வலியுறுத்துவது, ஜாதி மறுப்புத் திருமணம் செய்தோருக்கு அரசுப் பணிகளில் முன்னுரிமை வழங்க வலியுறுத்துவது ஆகியவற்றை தனது தேர்தல் அறிக்கையில் வி.சி.க முன்வைத்துள்ளது.
மேலும், கச்சத் தீவை மீட்க தொடர்ந்து பாடுபடுவது, தற்போது திரட்டப்படும் வரிகளில் 75 சதவீதத்தை மாநிலங்களுக்கே திருப்பித் தர வலியுறுத்துவது, கேரளா, கர்நாடகா மாநிலங்களில் தமிழகத்தை ஒட்டியுள்ள தேவிகுளம், பீர்மேடு, கோலார் தங்க வயல் உள்ளிட்ட பகுதிகளில் வாக்கெடுப்பு நடத்தி, அவர்கள் எந்த மாநிலத்தோடு சேர விரும்புகிறார்கள் என கண்டறிந்து அந்த மாநிலத்தோடு அவர்களை சேர்க்க வலியுறுத்துவது, கல்வியை மாநில பட்டியலுக்குக் கொண்டு வருவது, ஆங்கில வழி மழலையர் வகுப்புகளை நீக்குவது, வெளி மாநிலத்தவர் தாங்கள் விரும்பும் மொழியில் கல்வியைத் தொடர அனுமதிப்பது, கோயில் நிலங்களை நாட்டுடைமை ஆக்குவது உள்ளிட்ட அம்சங்களை தனது தேர்தல் அறிக்கையில் வி.சி.க குறிப்பிட்டுள்ளது.
சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டுச் சட்டம் - 2020 செயல்படுத்தப்படாமல் தடுக்கப்படும், ஸ்டெர்லைட் ஆலை நிரந்தரமாக அகற்றப்படும், காட்டுப்பள்ளி துறைமுகம் முற்றிலுமாக கைவிடப்படும், பஞ்சமி நில மீட்பு ஆணையம் அமைக்கப்பட்டு, பஞ்சமி நிலங்கள் மீட்கப்பட்டு அவை உரிமைதாரர்களுக்கோ, அவர்களுடைய வாரிசுகளுக்கோ வழங்கப்படும் என்றும்த அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
அரசு வாரியங்களில் தலித் சமூகத்தினர் தலைவர்களாக நியமிக்கப்பட வழிவகை செய்வது, தலித்துகளுக்கான இட ஒதுக்கீட்டை 21 சதவீதமாக உயர்த்துவது, மதமாற்றத்தைப் பதிவுசெய்து வெளியிடுவதற்கான கட்டணத்தை குறைப்பது, ஓ.பி.சிகளுக்கான ஒதுக்கீட்டில் க்ரீமி லேயரை ஒழிப்பது, குடியுரிமை திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்தாமல் தடுப்பது, ஆக்கிரமிப்பில் உள்ள வக்பு வாரியச் சொத்துகளை மீட்டு, அவற்றை நிலமற்ற ஏழை இஸ்லாமியர்களுக்கு பிரித்துத் தருவது ஆகிய வாக்குறுதிகளை தனது தேர்தல் அறிக்கையில் வி.சி.க. முன்வைத்துள்ளது.
பிற செய்திகள்:
- தமிழ்நாட்டில் பாஜகவின் ஜாதி அணி திரட்டல்கள் அதற்கு எந்த அளவு உதவும்?
- தமிழ்நாடு மீனவர்கள் 40 பேரை கைது செய்து, படகுகளை கைப்பற்றிய இலங்கை கடற்படை
- கோவிஷீல்டு தடுப்பூசி ஏற்றுமதிக்கு இந்தியா தடை: சீரம் இன்ஸ்டிடியூட் உற்பத்தி செய்தது
- ஆதார் மூலம் வாக்காளர் செல்போன் எண்களை எடுத்து பாஜக வாட்சாப் பிரசாரம்? நீதிமன்றம் கேள்வி
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: