You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ஜெயலலிதாவுக்கு சசிகலா அஞ்சலி: 'ஒன்றிணைந்து ஆட்சி அமைக்க வேண்டும்' - தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் 2021
அனைவரும் ஒன்றிணைந்து ஆட்சியை அமைக்க வேண்டும் என்றும் விரைவில் தொண்டர்களையும் பொதுமக்களையும் சந்திக்கவிருப்பதாகவும் ஜெயலலிதாவின் தோழி சசிகலா தெரிவித்திருக்கிறார்.
ஜெயலலிதாவின் 73வது பிறந்த நாளை இன்று அவரது கட்சியினரால் கொண்டாடப்படும் நிலையில், அவரது படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார் அவரது தோழியான வி.கே. சசிகலா.
சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டிக்கப்பட்ட வி.கே. சசிகலா, சில நாட்களுக்கு முன்பாக சென்னை திரும்பினார். அதற்குப் பிறகு, அவர் யாரையும் சந்திக்கவில்லை. இந்த நிலையில், ஜெயலலிதாவின் பிறந்த நாளான இன்று தியாகராய நகரில் உள்ள தன்னுடைய இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த ஜெயலலிதாவின் படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.
அப்போது அவருடன் அ.ம.மு.கவின் பொதுச் செயலாளரான டி,டி.வி. தினகரன், அவரது உறவினர் வெங்கடேஷ், ஆதரவாளர் சி.ஆர். சரஸ்வதி உள்ளிட்டோர் இருந்தனர்.
இதற்குப் பிறகு பேசிய சசிகலா, "கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த நான், கழக உடன்பிறப்புகளின் வேண்டுதலால் நலம் பெற்று தமிழகம் வந்தேன். தமிழகத்தில் நூறாண்டுகளுக்கு மேலாகவும் நம் ஆட்சி இருக்க வேண்டுமென ஜெயலலிதா கூறிச் சென்றுள்ளார். புரட்சித் தலைவியின் உண்மையான உடன் பிறப்புகள் அனைவரும் ஒன்றிணைந்து நம் ஆட்சியை அமைக்க வேண்டும். அதைச் செய்வீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. நிச்சயம் நீங்கள் இதைச் செய்வீர்கள். நானும் உங்களுக்கு உடனிருப்பேன்" என்று பேசினார்.
இதற்குப் பிறகு நீங்கள் எப்போது தொண்டர்களைச் சந்திப்பீர்கள் என செய்தியாளர்கள் கேட்டபோது, "விரைவில் நான் தொண்டர்களையும் பொதுமக்களையும் சந்திக்க வருவேன்" என்று தெரிவித்தார் சசிகலா.
ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் அமைந்துள்ள ஜெயலலிதாவின் உருவச்சிலைக்கு அ.தி.மு.கவின் இணை ஒருங்கிணைப்பாளரும், தமிழக முதல்மைச்சருமான எடப்பாடி பழனிசாமி, அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், தமிழக துணை முதலமைச்சருமான ஓ. பன்னீர்செல்வம் ஆகியோர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.
இதற்குப் பிறகு சென்னை மெரீனா கடற்கரையில் ஜெயலலிதாவின் நினைவிடத்தை ஒட்டி அமைக்கப்பட்டிருந்த ஜெயலலிதா அருங்காட்சியகம், அறிவுசார் பூங்கா ஆகியவற்றையும் முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி திறந்துவைத்தார்.
சசிசகலா - சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனையும் விடுதலையும்
சொத்துக் குவிப்பு வழக்கில் கடந்த பிப்ரவரி 2017-ல் உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி கைதான சசிசகலா கர்நாடகத்திலுள்ள பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டார்.
நான்கு ஆண்டு தண்டனைக் காலம் முடிந்து, அபராதத் தொகையான 10 கோடி ரூபாயையும் செலுத்தியப் பின்னர், கடந்த ஜனவரி 27, 2021 விடுதலை செய்யப்பட்டார்.
ஆனால் விடுதலையாவதற்கு சில தினங்களுக்கு முன், சசிகலாவின் உடல் நிலை மோசமானதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு, பெங்களூரு விக்டோரியா அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இதையடுத்து, கடந்த ஜனவரி 31ஆம் தேதி சிகிச்சை நிறைவடைந்து, மருத்துவமனையிலிருந்து வெளியேறிய சசிகலா பெங்களூருவிலுள்ள விடுதி ஒன்றில் மருத்துவர்கள் ஆலோசனைப்படி மேலும் ஒரு வார காலத்திற்கு தனிமைப்படுத்திக்கொண்டார்.
அ.தி.மு.க-வின் பொதுச் செயலளாளராக பதவியில் இருந்த சசிகலா, கடந்த ஆகஸ்ட் 2017-ல் பொதுச் செயலாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். ஆனால், சசிகலாதான் இன்னும் அதிமுக பொதுச் செயலளாளராக இருப்பதாக அவரது ஆதரவாளர்கள் கூறுகின்றனர்.
அவரது நெருங்கிய உறவினரான டி.டி.வி. தினகரன், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் (அ.ம.மு.க) என்ற கட்சியை தனியே நடத்தி வருகிறார்.
பிப்ரவரி 8ஆம் தேதி சசிகலா பெங்களூருவில் இருந்து தமிழகம் வந்தார். அதிமுகவின் எதிர்ப்பையும் மீறி, சசிகலாவின் காரில் அந்த கட்சியின் கொடி பொருத்தப்பட்டது அப்போது எடப்பாடி பழனிசாமி - ஓ. பன்னீர்செல்வம் ஆதரவாளர்களால் விமர்சிக்கப்பட்டது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: