புதுச்சேரி நெருக்கடி: அடுத்து என்ன நடக்கலாம்? - தமிழிசைக்கு உள்ள 3 வாய்ப்புகள்

புதுச்சேரி சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாத நிலையில், நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் கூட்டணி அரசு திங்கட்கிழமை ராஜிநாமா செய்தது. இதையடுத்து அங்கு அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பு அரசியல் கட்சிகள் மற்றும் அதன் அரசியலை உற்று நோக்கும் பொதுமக்கள் மத்தியில் மேலோங்கியிருக்கிறது.

அங்குள்ள சட்டப்பேரவையின் பதவிக்காலம் வரும் ஜூன் மாதம் முதல் வாரத்தில் நிறைவுக்கு வரும் வேளையில், தேர்தல் முன்னேற்பாடுகளை தேர்தல் ஆணையம் ஏற்கெனவே தொடங்கி விட்டது. இந்த நிலையில், ஆட்சியில் தொடரும் வாய்ப்பை நாராயணசாமி இழந்து விட்டதால் அங்கு துணைநிலை ஆளுநர் பொறுப்பு வகிக்கும் தமிழிசை செளந்தரராஜன் என்ன நடவடிக்கை எடுப்பார் என்ற பலத்த எதிர்பார்ப்பு நிலவுகிறது.

புதுச்சேரி சட்டப்பேரவையில் தற்போதைய நிலவரப்படி ராஜிநாமா செய்த எம்எல்ஏக்கள் நீங்கலாக 26 உறுப்பினர்கள் உள்ளனர். இதில் ஆட்சி அமைக்க தேவையான பெரும்பான்மை எண் 13. அந்த வகையில், எதிர்கட்சியான என்.ஆர். காங்கிரஸுக்கு ஏழு உறுப்பினர்கள், அதிமுகவுக்கு 4, நியமன உறுப்பினர்கள் 3 என மொத்தம் 14 பேர் என்ற அளவில் எதிரணியின் பலம் உள்ளது.

இந்த எண்ணிக்கை பலத்தைக் கொண்டு எதிர்கட்சி கூட்டணி ஆட்சி அமைக்க துணைநிலை ஆளுநரிடம் உரிமை கோரலாம்.

ஆனால், சட்டப்பேரவை தேர்தலுக்கு இன்னும் ஒரு சில மாதங்களே இருக்கும் நிலையில், அங்கு புதிய ஆட்சி வெறும் மூன்று மாதங்களுக்கு தொடர அனுமதிக்கப்படுமா அல்லது தேர்தல் நடத்தப்படும்வரை குடியரசு தலைவர் ஆட்சியை அமல்படுத்த துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் பரிந்துரைப்பாரா என்ற எதிர்பார்ப்பு புதுச்சேரி அரசியலில் நிலவுகிறது.

இத்தகைய நடவடிக்கை, எதிரணியில் உள்ள என்.ஆர். காங்கிரஸ், பாஜக, அதிமுகவுக்கு சாதகமாக இருக்கும். காரணம், முதல்வருக்கான எந்தவொரு சலுகையும் இன்றி பிற அரசியல் கட்சிகளைப் போலவே நாராயணசாமி எதிர்வரும் தேர்தலை எதிர்கொள்வார்.

இந்த இரண்டு வாய்ப்புகளும் இல்லாமல், மற்றொரு நடவடிக்கையாக மாற்று ஏற்பாடு செய்யப்படும்வரை காபந்து அரசாக செயல்படுமாறு நாராயணசாமியையே துணைநிலை ஆளுநர் தமிழிசை கேட்டுக் கொள்ளலாம். அப்படி ஒரு காட்சி நடந்தால் பெரும்பான்மை இழந்த பிறகு ஆட்சிக்கட்டிலில் இருந்து தங்களை அகற்றியது என்.ஆர். காங்கிரஸ் - அதிமுக - பாஜக கூட்டணிதான் என்ற குற்றச்சாட்டை நாராயணசாமியால் வலுவாக வைக்க முடியாத நிலை எழலாம்.

இந்த மூன்று வாய்ப்புகளில் ஒன்றைத்தான் துணைநிலை ஆளுநராக இருக்கும் தமிழிசை செளந்தரராஜன் எடுக்க வேண்டும். அதனால், அனைத்து பார்வைகளும் தமிழிசை செளந்தரராஜன் தற்போதுள்ள புதுச்சேரி துணைநிலை ஆளுநர் மாளிகை மீதே உள்ளன.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: