You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வு ஏன்?: ஆனந்த் ஸ்ரீநிவாஸன் விளக்கம்
- எழுதியவர், முரளிதரன் காசி விஸ்வநாதன்
- பதவி, பிபிசி தமிழ்
பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருள்களின் விலை தொடர்ந்து உயர்ந்துவரும் நிலையில், சமையல் எரிவாயுவின் விலையும் 50 ரூபாய் அளவுக்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வின் பின்னணி, இதன் தாக்கம் ஆகியவை குறித்து பிபிசியிடம் பேசினார் பொருளாதார நிபுணரான ஆனந்த் ஸ்ரீநிவாஸன். பேட்டியிலிருந்து:
கே. பெட்ரோல், டீசல் விலை உயர்வதற்கு என்ன காரணம்?
ப. கோவிட்- 19 உலகம் முழுவதும் பரவ ஆரம்பித்தபோது க்ரூட் பெட்ரோலியத்தின் விலை ஒரு பீப்பாய் 65 டாலராக இருந்தது. அதற்குப் பிறகு வந்த ஊரடங்கினால், அதன் விலை வெகுவாகச் சரிந்து 25 டாலர் வரை கீழே இறங்கியது. Futures சந்தையில் பூஜ்ய விலைக்குக்கூட விற்றது. அந்தத் தருணத்தில் அரசு பெட்ரெலின் விலையை 25 ரூபாய் அளவுக்குக் குறைத்திருக்க வேண்டும்.
ஆனால், அரசுக்கு மனதில்லை. ஆகவே 19 ரூபாய் அளவுக்கு சுங்கவரியும் சிறப்பு வரியும் விதித்தார்கள். ஆகவே பெட்ரோலின் விலை அதே இடத்தில் நீடித்தது. அதாவது விலை உயர்வின் பலனை அரசு எடுத்துக்கொண்டது.
கோவிட் - 19 காலம் முடிவுக்கு வந்தபோது எல்லா அரசுகளும் தம் விருப்பப்படி நோட்டுகளை அடித்துத்தள்ள ஆரம்பித்தன. இதனால் எல்லாப் பொருட்களின் விலையும் உயர்ந்தது. க்ரூட் பெட்ரோலியத்தின் விலையும் உயர்ந்தது. அப்போது, ஏற்கனவே உயர்த்திய வரியைக் குறைக்க வேண்டும். அப்போதுதான் பெட்ரோல் விலை உயராது. ஆனால், அரசு அதைச் செய்யவில்லை. ஏனென்றால் நிதிப் பற்றாக்குறை கடுமையாக இருந்தது.
அரசுக்கு இரு வகைகளில் வரி வருகிறது. ஒன்று நேர்முக வரி. மற்றொன்று மறைமுக வரி. ஒரு நேர்மையான அரசு என்பது, மறைமுக வரியைக் குறைவாகவும் நேர்முக வரியை அதிகமாகவும் வைத்திருக்க வேண்டும் என்பார் டாக்டர் மன்மோகன் சிங். ஏனென்றால் நேர்முக வரியை சாமானியர்கள் செலுத்த மாட்டார்கள்.
பணம் உடையவர்கள், நிறுவனங்களுக்கே விதிக்கப்படும். ஆனால், இந்த அரசு மறைமுக வரியை வைத்துக்கொண்டு, கார்ப்பரேட் நிறுவனங்களுக்கான வரியைக் குறைத்தது. 36 சதவீதம் இருந்த வரி 25 சதவீதமாகக் குறைக்கப்பட்டது. 2020ல் இது நடந்தது. இதனால், அரசின் வருவாயில் 1 லட்சத்து 55 ஆயிரம் கோடி குறைந்தது. இந்த இழப்பை எங்காவது ஈடுகட்ட வேண்டுமென பெட்ரோலுக்கும் டீசலுக்கும் கடுமையாக வரி விதிக்கப்பட்டது. ஏனென்றால் இந்த வரியை எளிதில் வசூலித்துவிட முடியும்.
மத்திய அரசு மட்டுமல்லாமல் மாநில அரசும் கடுமையாக வரிகளை விதிக்கிறது. கிட்டத்தட்ட 22 ரூபாய் அளவுக்கு மாநில அரசு வரி விதிக்கிறது.
கே. பெட்ரோல், டீசல் விலை உயர்வின் மூலமாக எல்லாப் பொருட்களின் விலையும் உயரும். அந்தத் திசையில் ஏன் அரசு செயல்படுகிறது?
ப. அதை அவர்களிடம்தான் கேட்க வேண்டும். ஒருவர் டிவிஎஸ் - 50யில் பயணம் செய்துதொழில் செய்கிறார் என வைத்துக்கொள்வோம். கடந்த சில ஆண்டுகளில் அவர் பெட்ரோலுக்காக செலவழிக்கும் தொகை கணிசமாக அதிகரித்திருக்கும். ஆனால், அவரது வருவாய் அதே அளவுக்குத்தான் இருக்கும். கோவிட் - 19 காலத்தில் குறையக்கூட செய்திருக்கும். ஆகவே இந்த விலை உயர்வை சரிக்கட்ட, உணவுச் செலவைத்தான் அவர்கள் குறைத்துக்கொள்ள வேண்டியிருக்கும். குறிப்பாக குழந்தைகளுக்கான புரோட்டீன் கிடைக்காமல் போகக்கூடும்.
இது நீண்ட கால பாதிப்பை ஏற்படுத்தும். குழந்தைகளின் வளர்ச்சியைப் பாதிக்கும். இரண்டு, மூன்று ஆண்டுகள் இந்த நிலை நீடித்தால், நிச்சயம் நீண்ட கால விளைவுகள் இருக்கும்.
கே. இப்போது திடீரென சமையல் எரிவாயுவின் விலை உயர்ந்திருக்கிறது. இதற்கு என்ன காரணம்?
ப. பெட்ரோலியத்தின் விலை உயர்ந்தால் எரிவாயுவின் விலையும் உயரும். ஆனால், திடீரென இப்போது உயர்ந்ததற்குக் காரணம், சிங்கப்பூர் பெஞ்ச்மார்க் விலை என்கிறார்கள். அதேநேரம் சமையல் எரிவாயுவுக்கு வழங்கப்பட்ட மானியம் குறைக்கப்பட்டிருக்கிறது. எவ்வளவு மானியம் கொடுக்கப்படுகிறது என்பதை வெளிப்படையாகவும் சொல்வதில்லை.
உஜ்வாலா என்று ஒரு திட்டம். அதில் முதல் மாதம் எரிவாயு இலவசமாகக் கொடுப்பார்கள். ஆனால், தொடர்ந்து மாதாமாதம் எரிவாயு வாங்க ஏழைகளிடம் காசு இருக்காது. அவர்கள் திரும்பவும் மண்ணெண்ணைக்கே சென்றுவிடுவார்கள். இதெல்லாம் ஏன் நடக்கிறது என்றால், அரசுக்கு வருவாய் பற்றாக்குறை. அது ஏன் ஏற்படுகிறது? வரியைக் குறைப்பதால். வரியைக் குறைக்கலாம். பொதுவாக யாரால் வரி கட்டமுடியுமோ அவர்கள் வரி கட்ட வேண்டும்.
யாரால் வரி கட்ட முடியாதோ, அவர்களுக்கு வரி இருக்கக்கூடாது. ஆனால், இங்கே மாற்றி வசூலிக்கிறார்கள். சாதாரண மக்களுக்கு வரி போட்டுவிட்டு, தேசத்திற்காக இதைச் செய்யுங்கள் என்கிறார்கள். ஏன் எளிய மக்கள் மட்டும் தேசத்திற்காகச் செய்ய வேண்டும்? அந்த கார்ப்பரேட்கள் தேசத்திற்காகச் செய்ய மாட்டார்களா?
கே. ஒரு பொருளை விற்கும்போது, அந்தப் பொருளின் விலையைவிட வரி அதிகமாக இருக்கலாமா என்ற கேள்வி எழுப்பப்படுகிறது. அப்படி ஏதும் கட்டுப்பாடு உண்டா?
ப. அப்படியேதும் இல்லை. பெட்ரோலின் அடக்கவில்லை 31-32 ரூபாய்தான். ஆனால், 90 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. அதாவது அடக்கவிலையைப் போல இரு மடங்கு வரி விதிக்கப்படுகிறது. இதனால் விலைவாசி கடுமையாக உயரும்.
கே. மாநில அரசு தங்கள் வரியைக் குறைத்து பெட்ரோல் விலையைக் குறைக்க முடியுமா?
ப. எப்படிச் செய்ய முடியும்? வலதுசாரிகள், மாநில அரசு தன் வரியைக் குறைத்துக்கொள்ள வேண்டியதுதானே என்கிறார்கள். மாநில அரசுகளைப் பொறுத்தவரை, விற்பனை வரி, சொத்துவரி, கலால் வரி ஆகியவற்றின் மூலம்தான் வருவாய் கிடைக்கும். விற்பனை வரியைப் பொறுத்தவரை, அந்த உரிமை ஜிஎஸ்டி மூலம் மத்திய அரசுக்குக் கொடுக்கப்பட்டுவிட்டது. கடந்த ஐந்தாண்டுகளாக ரியல் எஸ்டேட் படுத்துவிட்டதால் கடந்த ஐந்தாண்டுகளாக சொத்து விற்பனைகள் குறைந்ததால், பத்திரப் பதிவிலிருந்தும் வரி இல்லை. ஆகவேதான் மாநில அரசு இந்த அளவுக்கு வரியை வசூலிக்கிறது. மாநில அரசும் தன் ஊழியர்களுக்கு சம்பளம் கொடுத்தாக வேண்டுமே.
கே. சில ஆண்டுகளுக்கு முன்பாக காங்கிரஸ் ஆட்சியின்போதுதான், பெட்ரோல் - டீசல் விலையை அரசின் கட்டுப்பாட்டிலிருந்து விடுவிக்க வேண்டுமென முடிவெடுக்கப்பட்டது. அப்படி நடந்திருக்காவிட்டால், இந்த அளவுக்கு விலை உயர்ந்திருக்காது அல்லவா?
ப. அந்தத் தருணத்தில் நிதி நிலை மிக மோசமாக இருந்தது. ஒரு கட்டத்தில் ஒரு பீப்பாய் எண்ணை 140 டாலர் வரை விற்றது. பதவியிலிருந்து விலகும்போது 117 டாலர்களாக இருந்தது. இன்று 60 டாலர்களுக்கு விற்கிறது. காங்கிரஸ் ஃபார்முலாபடி விற்றிருந்தால், இன்று பெட்ரோல் 50 ரூபாய்க்கு விற்றிருக்கும்.
கச்சா எண்ணையின் விலை தொடர்ந்து ஏற்ற - இறக்கத்தில் இருந்ததால் அரசு தன் கட்டுப்பாட்டில் இருந்து விடுவிக்க முடிவுசெய்தது. ஒரு கட்டத்தில் விலை மிக அதிகமானபோது, அப்போதைய மத்திய அரசு Oil bondகளை வெளியிட்டு, கடன்களைத் திரட்டி, சுமையைத் தாங்கியது. அரசு கடன் வாங்கியாவது மக்களுக்கு நல்லது செய்ய வேண்டுமென்பது அந்தக் காலம். ஆனால், சாமானியர்கள் மீது வரியைச் சுமத்தி, நண்பர்களுக்கு உதவிசெய்வது இந்தக் காலம்.
கே. இந்த Oil bondகள் மூலமாக வாங்கிய கடனை அடைப்பதற்காகத்தான் இந்த விலை உயர்வு என பா.ஜ.கவினர் சொல்கிறார்கள்..
ப. இல்லை. சுத்தமாக அடைக்கவில்லை. 2026ல்தான் அடைக்கப்போகிறார்கள். மொத்தமே 30,000 கோடி ரூபாய் Oil bondகளின் மூலம் கடனாகத் திரட்டப்பட்டிருக்கும். ஆனால், முதலாளிகளுக்கு விட்டுக்கொடுத்த வரிச்சலுகை மட்டும் 1,54,000 கோடி ரூபாய்.
கே. சில ஆண்டுகளுக்கு முன்பாக, பெட்ரோல் - டீசல் விலையில் சிறிய அளவு உயர்வு ஏற்பட்டாலே கடுமையான எதிர்ப்புகள் ஏற்படும். இப்போது அப்படி ஏதும் ஏற்படுவதில்லை. விலை உயர்வு நமக்குப் பழகிவிட்டதா?
ப. அன்று ஊடகங்களுக்குச் சுதந்திரம் இருந்தது. அவர்கள் தைரியமாக ரிப்போர்ட் செய்தார்கள். இப்போது காலநிலை மாறுபாடு குறித்து பேசிய 21 வயதுப் பெண் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார். பேசுவதற்கே இன்று யாருக்கும் தைரியம் இல்லை. அதுதான் உண்மை.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: