புதுச்சேரி அமைச்சர் மல்லாடி கிருஷ்ணா ராவ் ராஜிநாமா - நாராயணசாமி அரசுக்கு நெருக்கடியா?

புதுச்சேரியில் சுகாதாரத்துறை அமைச்சர் மற்றும் சட்டப்பேரவை உறுப்பினர் பதவியில் இருந்து மல்லாடி கிருஷ்ணா ராவ் விலகியிருக்கிறார். அங்கு ஆளும் காங்கிரஸ் கட்சியில் உள்ளவர்களை பாரதிய ஜனதா கட்சி தன் பக்கம் இழுக்கும் அரசியல் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகிறது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு அமைச்சர் பதவியை ராஜிநாமா செய்த நமச்சிவாயம், டெல்லியில் பாரதிய ஜனதா கட்சியின் மேலிட தலைவர்கள் முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தார். ஆனால், அவரது பதவி விலகலால் காங்கிரஸ் ஆட்சிக்கு எந்த பாதிப்பும் நேராது என்று முதல்வர் நாராயணசாமி கூறியிருந்தார்.

முன்னதாக, மல்லாடி கிருஷ்ணா ராவ் தனது அரசியல் எதிர்கால திட்டங்களை தெளிவுபடுத்தாதபோதும், கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற அவரது 25ஆம் ஆண்டு அரசியல் நிறைவை குறிக்கும் விழாவில், தனது பதவியை ராஜிநாமா செய்வதாக கூறியிருந்தார். இதற்கான கடிதத்தையும் அவர் முதல்வர் நாராயணசாமியிடம் அளித்திருந்த நிலையில், அதை அவர் ஏற்கவில்லை என்று கூறப்பட்டது.

தனது ராஜிநாமா அறிவிப்பை வெளி உலகுக்கு அறிவிக்கும் முன்பே, மல்லாடி கிருஷ்ணாராவ் தனக்கு அரசு ஒதுக்கிய குடியிருப்பையும் காரையும் ஒப்படைத்து விட்டார். இந்த நிலையில், சபாநாயகருக்கு தனது எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்வதாக அறிவித்துள்ள கடிதத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் மல்லாடி கிருஷ்ணாராவ் பகிர்ந்துள்ளார்.

மல்லாடி கிருஷ்ணா ராவ் பாரதிய ஜனதா கட்சிக்கு செல்வாரா அல்லது வேறு அரசியல் திட்டம் வைத்துள்ளாரா என்பதை அறிய அவரை தொடர்பு கொள்ள பிபிசி தமிழ் முயன்று வருகிறது.

கிரண் பேடி vS நாராயணசாமி

புதுச்சேரியில் முதல்வர் நாராயணசாமிக்கும் துணைநிலை ஆளுநர் கிரண் பேடிக்கும் இடையே பனிப்போர் போல அரசியல் மோதல் தீவிரமாகி வருகிறது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு துணை நிலை ஆளுநருக்கு எதிராக வீதியில் இறங்கு போராட்டம் செய்த முதல்வர் நாராயணசாமி, அதில் தனது அமைச்சரவை சகாக்களை பங்கேற்கச் செய்த நிகழ்வு, அரசியல் கவனத்தை பரவலாக ஈர்த்தது.

ஆனால், அதே போராட்டத்தை தவிர்த்த நாராயணசாமியின் அமைச்சரவையில் இருந்து நமச்சிவாயம் மற்றும் எம்எல்ஏ ஆக இருந்த தீப்பாய்ந்தான் அதன் பிறகே காங்கிரஸில் இருந்து விலகினார்கள்.

இதே சமயம், மல்லாடி கிருஷ்ணாராவ் துணைநிலை ஆளுநருக்கு எதிரான போராட்டத்தில் கலந்து கொண்டார்.

இதன் தொடர்ச்சியாக தற்போது மல்லாடி கிருஷ்ணாராவின் ராஜிநாமா அறிவிப்பும் வெளிவந்திருக்கிறது.

புதுச்சேரி யூனியன் பிரதேசத்துக்கு உட்பட்ட ஏனாம் சட்டப்பேரவை தொகுயில் இருந்து காங்கிரஸ் சார்பாக போட்டியிட்டு 2016ஆம் ஆண்டு தேர்தலில் எம்.எல்.ஏ ஆனார் மல்லாடி கிரு‌‌ஷ்ணாராவ். இதையடுத்து சுகாதாரத் துறை அமைச்சராக பதவி வகித்து வந்தார்.

அடுத்த சில மாதங்களில் புதுச்சேரி சட்டப்பேரவைக்கு தேர்தல் நடைபெறவுள்ளது. ஏனாம் தொகுதி ஆந்திர பிரதேசத்தின் கிழக்கு கோதாவரி பகுதியில் இருக்கிறது. இதை கவனத்தில் கொண்டு புதுச்சேரி அரசியலில் இருந்து விலகி ஆந்திர அரசியலில் மல்லாடி கிருஷ்ணா ராவ் ஈடுபடலாம் என்ற தகவலும் புதுச்சேரி அரசியலில் பேசப்பட்டு வருகிறது.

ராகுல் வருகைக்கு முன்பே ராஜிநாமா

வரும் 17ஆம் தேதி புதுச்சேரிக்கு காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தேர்தல் பிரசாரத்துக்காக வருகை தரவுள்ளார். அதற்கு முன்தாகவே மல்லாடி கிருஷ்ணா ராவ் தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்வதாகக் கூறி சபாநாயகருக்கு கடிதம் அனுப்பியிருப்பதாக கூறப்படுகிறது.

கடந்த 10ஆம் தேதி, புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி டெல்லிக்கு வந்தபோது அவருடன் மல்லாடி கிருஷ்ணா ராவ் சென்றிருந்தார்.

ஆட்சிக்கு ஆபத்து வருமா?

புதுச்சேரி சட்டப்பேரவையில் மொத்தம் உள்ள இடங்கள் 30 மற்றும் 3 நியமன உறுப்பினர்கள். இதில் 2016 தேர்தல் முடிவில், காங்கிரஸ் கட்சி 15 இடங்களைப் பெற்றிருந்தது. அதற்கு 2 உறுப்பினர்களைக் கொண்ட திமுக, மாஹே தொகுதி சுயேச்சை உறுப்பினர் ராமச்சந்திரனின் ஆதரவு உள்ளது. ஆகவே, மொத்தம் 18 உறுப்பினர்களின் ஆதரவுடன் காங்கிரஸ் ஆட்சியை தொடங்கியது.

பிறகு சொத்து குவிப்பு வழக்கில் தட்டாஞ்சாவடி உறுப்பினர் அசோக் ஆனந்த் மீதான வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டதால் அவரது பதவி பறிக்கப்பட்டது. அந்த தொகுதிக்கு நடந்த தேர்தலில் என்ஆர் காங்கிரஸ் வசம் இருந்த தொகுதியை திமுக கைப்பற்றியதால் காங்கிரஸ் கூட்டணியின் பலம் 19 ஆனது.

இதில் தனவேலு என்ற காங்கிரஸ் உறுப்பினர், முதல்வர் மற்றும் ஆட்சிக்கு எதிரான கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டதாக கடந்த ஆண்டு எழுந்த சர்ச்சையைத் தொடர்ந்து அவரது உறுப்பினர் பதவி பறிக்கப்பட்டது. அந்த இடத்துக்கு இன்னும் தேர்தல் நடத்தப்படவில்லை.

இந்த நிலையில், நமச்சிவாயம், தீப்பாய்ந்தான் ஆகியோர் சமீபத்தில் பதவி விலகினர். இதனால் சட்டப்பேரவையில் காங்கிரஸ் கட்சியின் பலம் 12 ஆக குறைந்தது. கூட்டணியின் பலம் 4 ஆக இருந்ததால் ஆட்சிக்கு ஆபத்து ஏற்படவில்லை.

இந்த நிலையில், மல்லாடி கிருஷ்ணாராவின் இன்றைய ராஜிநாமா அறிவிப்பைத் தொடர்ந்து, அது சபாநாயகரால் ஏற்கப்பட்டால், காங்கிரஸின் தனிப்பட்ட பலம் 11 ஆக சுருங்கும். அப்படி அமைந்தால் காங்கிரஸ் கூட்டணி உறுப்பினர்களின் எண்ணிக்கையுடன் சேர்த்து அதன் பலம் 15 ஆக இருக்கும்.

அந்த வகையில், மேலும் 1 உறுப்பினர்களின் பலத்தை காங்கிரஸ் இழந்தால் கூட, ஆட்சி அமைக்க தேவைப்படும் பெரும்பான்மையை காங்கிரஸ் கட்சி இழக்க நேரிடும். அப்படி ஒரு நிலை ஏற்பட்டால் அது புதுச்சேரியில், தேர்தலுக்கு முன்பே ஆட்சி கவிழும் சூழல் உருவாகலாம் என்று கருதப்படுகிறது.

புதுச்சேரியில் எதிர்கட்சி வரிசையில், என்.ஆர். காங்கிரஸுக்கு 7, அதிமுகவுக்கு 4 என்ற அளவில் பலம் உள்ளது. இவர்களைத் தவிர நியமன உறுப்பினர்கள் 3 பேர் உள்ளனர். பேரவையில் வாக்கெடுப்பு நடத்தப்படும் நிலை வந்தால் அதில் நியமன உறுப்பினர்களும் வாக்களிக்கலாம் என சமீபத்தில் தேர்தல் ஆணையம் கூறியிருக்கிறது. இந்தநியமன உறுப்பினர்கள் பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: