You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
இந்தியா-சீனா எல்லை: "ஒரு அங்குல நிலத்தையும் விட்டுத்தர மாட்டோம்" - ராஜ்நாத் சிங் திட்டவட்டம்
இந்தியா, சீனா எல்லையில் உள்ள பாங்கோங் ஏரியில் நிலைநிறுத்தப்பட்டுள்ள இரு நாட்டு படையினரை பரஸ்பரம் விலக்கிக் கொள்ளும் நடவடிக்கையில் ஒருமித்த கருத்து எட்டப்பட்டுள்ளதாக இந்திய மாநிலங்களவையில் அதன் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக மாநிலங்களவையில் வியாழக்கிழமை, கிழக்கு லடாக்கின் தற்போதைய நிலைமை என்ற தலைப்பில் ராஜ்நாத் சிங் கள நிலவரத்தை விளக்கிப் பேசினார்.
அப்போது அவர், "2020ஆம் ஆண்டில் இந்திய எல்லைக்குள் சீனா தொடர்ச்சியாக நுழைய தொடர்ச்சியாக முயற்சித்தது. எல்லை நில உரிமை கோரல் விவகாரத்தில் சீனாவின் நிலையை எப்போதுமே இந்தியா நிராகரித்து வருகிறது. அதே சமயம், அந்நாட்டுடனான இரு தரப்பு உறவை இந்தியா பேணி வருகிறது. அமைதியும் இணக்கமும் படை விலக்கல் நடவடிக்கைக்கு முக்கியமானது என்பதை இந்தியா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது" என்று கூறினார்.
"1962ஆம் ஆண்டில் நடந்த இந்திய, சீன போருக்குப் பிறகு சீனா 38,000 சதுர கி.மீ நிலத்தை ஆக்கிரமித்திருந்தது. இது தவிர லடாக்கில் சீனாவுக்கு சட்டவிரோதமாக பாகிஸ்தான் 5,180 சதுர கி.மீ நிலத்தை வாங்கியிருந்தது. அருணாச்சல பிரதேசத்தில் 90 ஆயிரம் சதுர கி.மீ பரப்பு நிலத்துக்கு சீனா உரிமை கோரி வருகிறது. ஆனால், இந்த நியாயமற்ற உரிமை கோரல்களை எப்போதுமே இந்தியா ஏற்கவில்லை. இரு தரப்பு நல்லுறவு தழைக்க வேண்டுமானால் அதற்கான முயற்சி இரு தரப்பிலும் நடக்க வேண்டும்" என்று ராஜ்நாத் சிங் கூறினார்.
"பாங்கோங் ஏரியில் வடக்கு மற்றும் தெற்குப் பகுதியில் நிறுத்தப்பட்டுள்ள படையினரை விலக்கிக்கொள்ளும் விவகாரத்தில் பரஸ்பரம் உடன்பாடு எட்டப்பட்டுள்ளது. இந்திய இறையாண்மையை பாதுகாக்க எத்தகைய சவாலையும் எதிர்கொள்வோம் என நமது படையினர் நிரூபித்துள்ளனர்," என்று ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.
இதைத்தொடர்ந்து சீன அத்துமீறல்களைத் தொடர்ந்து நடைபெற்ற பேச்சுவார்த்தை விவரங்களை ராஜ்நாத் சிங் பட்டியலிட்டார்.
அப்போது அவர், "சீன நடவடிக்கைகள் இருதரப்பு உறவுகளை பாதித்துள்ளன. ஆனால், இந்திய படையினர் எல்லையில் உள்ள சவால்களை துணிச்சலாக எதிர்கொண்டு வருகின்றனர். இந்தியாவின் ஒரு அங்குல நிலத்தைக் கூட நாங்கள் விட்டுக்கொடுக்க மாட்டோம். எல்லையில் தற்போதுள்ள நிலைமையை மாற்ற எந்த முயற்சியும் எடுக்கக்கூடாது என்பதை சீனாவுக்கு இந்தியா தெளிவுபடுத்தியிருக்கிறது. இரு நாடுகளுக்கும் இடையே ஒன்பது சுற்று பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. அவற்றில் எல்லையில் தற்போதுள்ள நிலையை கடந்து கண்காணிப்பில் ஈடுபட்டுள்ள படையினர் தத்தமது எல்லை சாவடிகளுக்கு திரும்ப வேண்டும் என வலியுறுத்தினோம். அதில் நல்ல முன்னேற்றம் உள்ளது என்று ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.
பிற செய்திகள்:
- திமுக கூட்டணியில் குழப்பம்? அச்சத்தில் தோழமை கட்சிகள்
- ட்விட்டரை எச்சரித்த இந்திய அரசு: "எங்கள் சட்டத்துக்கு கட்டுப்படுங்கள்"
- "கொக்கைன் ஹிப்போ'' நீர்யானைகளை கொல்ல அறிவுறுத்தும் விஞ்ஞானிகள் - எதற்காக?
- KOO செயலிக்கு மாறும் அமைச்சர்கள்: ட்விட்டர் - இந்திய அரசு மோதல் காரணமா?
- விற்காத லாட்டரிக்கு 12 கோடி ரூபாய் பரிசு; கோடீஸ்வரரான தென்காசிக்காரர்
- கொரோனா முஸ்லிம் சடல அடக்கத்துக்கு அனுமதி தந்த இலங்கை பிரதமர்
- "சீன வைரஸ் ஆய்வகத்தில் இருந்து கொரோனா கசிந்திருக்க வாய்ப்பில்லை" - உலக சுகாதார நிறுவனம்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: