தமிழகத்தில் இறக்கும் யானைகள்: சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்ட மதுரை உயர் நீதிமன்ற கிளை

(இன்றைய நாளில் நடந்த முக்கிய நிகழ்வுகளை இங்கே தொகுத்து வழங்குகிறோம்.)

தமிழகத்தில் யானைகள் இறப்பு தொடர்பான அனைத்து வழக்குகளையும் சிபிஐ விசாரிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக கொடைக்கானலை சேர்ந்த மனோஜ் இமானுவேல், உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல மனுவை தாக்கல் செய்திருந்தார்.

அதில், "சமீப ஆய்வின்படி யானைகளின் எண்ணிக்கை விகிதம் குறைந்து கொண்டே வருகிறது. சில கொடியவர்கள், தந்தம் போன்றவற்றுக்காக யானைகளை கொடூரமான முறையில் கொல்லும் அவலம் நடக்கிறது. இது போன்ற நிகழ்வுகளால், யானை இனமே அழியும் அபாயம் உள்ளது. ஆகவே யானைகள் தந்தங்களுக்காக வேட்டையாடப்படுவது குறித்து தேசிய வனவிலங்கு குற்றத்தடுப்பு பிரிவு மற்றும் சிபிஐ இணைந்து விசாரிக்க உத்தரவிட வேண்டும்" என கேட்டுக் கொள்ளப்பட்டிருந்தது.

இதே போல தமிழகத்திலுள்ள காடுகளில் விலங்குகளை கொன்று அவற்றின் உடலை கடத்துவது குறித்து சிபிஐ அல்லது சிபிசிஐடி விசாரிக்கக் கோரி, திருச்சி மாவட்டத்தை சேர்ந்த நித்திய சௌமியா மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்குகள் நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ்,சதீஷ்குமார் அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தன.

அப்போது வனவிலங்கு குற்றத்தடுப்பு சிறப்புப் பிரிவின் தரப்பில் அறிக்கை தாக்கல் செய்தனர். அதில், "இதுபோன்ற குற்றங்கள் சர்வதேச அளவில் நடைபெறுகின்றன. இது மிகப்பெரும் மாஃபியா போல உள்ளது" என குறிப்பிடப்பட்டிருந்தது.

இதை தொடர்ந்து நீதிபதிகள், "யானை மிகவும் முக்கியமான உயிரினம். சுற்றுச்சூழலை பாதுகாப்பதில் யானைகள் மிக முக்கிய பங்காற்றுகின்றன. இந்த விவகாரத்தில் பலருக்கு தொடர்பு உள்ள நிலையில், இந்த குற்ற சம்பவத்தில் தொடர்புடையவர்கள் வெவ்வேறு மாநிலங்களிலும் உள்ளனர். ஆகவே தமிழகத்தில் யானைகள் இறப்பு தொடர்பான அனைத்து வழக்குகளையும் சிபிஐ விசாரிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை 3 மாதத்திற்கு ஒத்திவைத்தனர்.

சாத்தான்குளம் வழக்கு: தந்தை, சகோதரரன் உடல்கூராய்வு அறிக்கை கேட்டு மகள் மனு

சாத்தான் குளத்தில் தந்தை மற்றும் சகோதரன் உயிரிழந்து 8 மாதங்கள் கடந்த நிலையிலும் உடற்கூறு பரிசோதனை முடிவுகள் வழங்கப்படவில்லை என நெல்லை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வரிடம் ஜெயராஜின் மகள் பெர்சி மனு அளித்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்த வணிகர்களான தந்தை மகனான ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் கடந்த 2020ஆம் ஆண்டு ஜூன் 19ஆம் தேதி காவல்துறை விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட நிலையில் விசாரணையின் போது காயம் அடைந்த அவர்கள் பின்னர் நீதிமன்ற காவலில் இருந்தபோது மர்மமான முறையில் உயிரிழந்தனர்.

அவர்கள் இருவரும் காவல்துறையினர் தாக்கியதிலேயே உயிரிழந்ததாக கூறப்பட்டது.

இந்த நிலையில், ஜூன் 24ஆம் தேதி ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோரின் உடல்கள் மூன்று அரசு மருத்துவர்கள் முன்னிலையில் பரிசோதனை செய்யப்பட்டன. உடல் கூராய்வு முடிவு அடங்கிய அறிக்கைகள் சீலிட்ட கவரில் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டன.

இருப்பினும் அந்த அறிக்கைகள் ஜெயராஜின் குடும்பத்தினரான தங்களுக்கு வழங்கப்படவில்லை என கூறி ஜெயராஜின் மகள் பெர்சி நெல்லை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை முதல்வரிடம் மனு அளித்துள்ளார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: