You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ஜெயலலிதா நினைவிட திறப்பு விழாவில் பங்கேற்க மாணவர்கள் கட்டாயப்படுத்தப்படுகின்றனரா?
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிட திறப்பு விழா வரும் 27ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த விழாவிற்கு சென்னை மெரினா பகுதியில் உள்ள கல்லூரி மாணவிகள் கட்டாயமாக பங்கேற்கவேண்டும் என வாய்மொழி உத்தரவு வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
திறப்புவிழாவில் ஆயிரக்கணக்கானவர்கள் பங்கேற்கவேண்டும் என்பதற்காக கல்லூரி மாணவ, மாணவிகளை ஆசிரியர்கள் வருகை பதிவேடு எடுத்து பங்கேற்பை உறுதிப்படுத்தவேண்டும் என ஆசிரியர்களுக்கு அரசாங்க தரப்பில் இருந்தும் அழுத்தம் கொடுக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
நூற்றுக்கணக்கான மாணவிகள் ஒரே மாதிரியான சேலை உடுத்தி திறப்புவிழாவில் பங்கேற்கவேண்டும் என்பதற்காக, அவர்களுக்கு இலவசமாக சேலை வழங்கப்பட்டுள்ளது என பெயர் வெளியிட விரும்பாத ராணி மேரி கல்லூரியைச் சேர்ந்த பேராசிரியர் ஒருவர் பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.
''மாணவிகளுக்கு சேலை கொடுத்துள்ளார்கள். 30 மாணவிகளுக்கு ஒரு பேராசிரியர் என்ற கணக்கில் மாணவிகள் அனைவரும் பங்கேற்கவேண்டும் என உத்தரவிட்டுள்ளார்கள். எங்களால் வெளிப்படையாக எதிர்ப்பு தெரிவிக்கமுடியாது என்பதால் எங்கள் கருத்தை சொல்லமுடியாது. இதுபோல கல்லூரி மாணவர்களை அரசியல் கூட்டங்களுக்கு அழைத்து செல்லும் வேலையை ஆசிரியர்களான எங்களிடம் கொடுத்துள்ளார்கள் என்பது வேதனை தருகிறது,'' என்றார் அந்த பேரரிசியார்.
''குறைந்தபட்சம் ஒவ்வொரு கல்லூரியில் இருந்தும் 1,000 பேரை அழைத்துவரவேண்டும் என சொல்லியிருக்கிறார்கள். மாணவிகளை கட்டாயப்படுத்தும்போது, எங்கள் மீது அவர்களுக்கு மரியாதை இருக்காது,''என்கிறார் அந்த பேராசிரியர்.
இந்திய மாணவர் சங்கத்தின் தென் சென்னை மாவட்ட செயலாளர் சந்துரு, அரசியல் விழாவிற்கு மாணவர்களை பயன்படுத்துவதை எப்படி சட்டம் அனுமதிக்கிறது என கேள்வி எழுப்பியுள்ளார். ''ஆளும் அரசியல் கட்சி, மாணவர்களை தங்களது அரசியல் நிகழ்வுகளுக்காக பயன்படுத்துவது எப்படி சரியாகும்? மாணவர்கள் தங்களது உரிமைகளுக்காக போராடினால் அதனை சட்டத்திற்கு புறம்பான விவகாரம் என கூறி நடவடிக்கை எடுக்கிறார்கள். தற்போது அரசாங்கம் தனது பலத்தை பயன்படுத்தி இதுபோல மாணவர்களை பயன்படுத்துவது எப்படி சட்டப்படி அனுமதிக்கப்படுகிறது?'' என கேள்வி எழுப்புகிறார்.
மேலும் கொரோனா காலத்தில் இதுபோல ஆயிரக்கணக்கான மாணவர்களை ஒரு இடத்தில் திரட்டுவது நோய் கட்டுப்பாடு சட்டத்தின்படி குற்றமாகும் என்கிறார் அவர்.
மாணவர்களை ஜெயலலிதா நினைவிட திறப்புவிழாவில் மாணவர்கள் பங்கேற்பது தொடர்பாக அதிமுகவின் பதிலை பெற முயன்றோம். பிபிசி தமிழிடம் பேசிய அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் கல்லூரி மாணவர்களை விழாவிற்கு வரவேண்டும் என யாரும் கட்டாயப்படுத்தவில்லை என்றும் அதுபோன்ற தகவல் உறுதிப்படுத்தப்படவில்லை என்றும் தெரிவித்தார். ''யாரையும் கட்டாயப்படுத்தவில்லை. மாணவர்களை அழைத்துவரவேண்டும் என யாரிடமும் சொன்னதாக தெரியவில்லை,''என்றார் அவர்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்