You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புகளுக்கு மே 4 முதல் ஜூன் 10வரை தேர்வுகள் அறிவித்த மத்திய அமைச்சர்
மத்திய இடைநிலை கல்வி வாரியத்தின் 10 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கான தேர்வுகள் 2021ஆம் ஆண்டு மே 4 முதல் ஜூன் 10ஆம் தேதிவரை நடைபெறும் என்று இந்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்துள்ளார்.
இந்த தேர்வுகளின் முடிவுகள் ஜூலை 15ஆம் தேதிக்குள் அறிவிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
இது தொடர்பான அறிவிப்பை டெல்லியில் வியாழக்கிழமை மாலையில் அறிவித்தார் ரமேஷ் பொக்ரியால். இந்த நிகழ்வு, அவரது சமூக ஊடக பக்கங்களில் நேரலையாக ஒளிபரப்பப்பட்டது.
சிபிஎஸ்இ வகுப்புகளுக்கான தேர்வு தேதி உள்ளிட்ட விவரங்கள், cbse.nic.in என்ற சிபிஎஸ்இ இணையதளத்தில் வெளியிடப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
மாணவர்கள் தங்களுடைய செயல்முறை தேர்வுகள், எழுத்துத் தேர்வுகள் போன்ற விவரங்களை அதில் பார்த்துக் கொள்ள வேண்டும் என அமைச்சர் பொக்ரியால் அறிவுறுத்தினார்.
கொரோனா பொது முடக்கம் மற்றும் வைரஸ் பரவல் காரணமாக, மாணவர்களின் நலன்களை கருத்தில் கொண்டு அவர்களின் பாடத்திட்டத்தில் 10ஆம் வகுப்புக்கு 12 சதவீதமும், 12ஆம் வகுப்புக்கு 30 சதவீதமும் பாடமுறை குறைக்கப்பட்டிருப்பதாக அமைச்சர் பொக்ரியால் தெரிவித்தார்.
சிபிஎஸ்இ வகுப்புகளுக்கான தேர்வு தேதிகள் டிசம்பர் 31 ஆம் தேதி அறிவிக்கப்படும் என்று இந்திய கல்வி அமைச்சகம் கடந்த வாரம் ட்விட்டரில் அறிவித்திருந்தது.
டிசம்பர் 22 அன்று தனது இணையவழி உரையாடலின்போது பேசிய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால், சிபிஎஸ்இ தேர்வுகள் 2021 ஜனவரி அல்லது பிப்ரவரி மாதங்களில் நடைபெறாது என்று தெளிவுபடுத்தியிருந்தார்.
இந்த நிலையில், தேர்வு தேதி தொடர்பான அறிவிப்பை வெளியிட்ட அமைச்சர், தேர்வுகளுக்கு ஆயத்தமாகி வரும் மாணவர்களுக்கும் வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
இதற்கிடையே சிபிஎஸ்இ தேர்வுகள் கட்டுப்பாட்டாளர் சன்யாம் பரத்வாஜ், "10 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கான மாணவர்களுக்கான செயல்முறை தேர்வு, உள்ளுறை மதிப்பீடு ஆகியவற்றை 2021ஆம் ஆண்டு மார்ச் மாதம் 1ஆம் தேதி முதல் நடத்த அனுமதிக்கப்பட்டுள்ளன," என்று கூறியுள்ளார்.
பிற செய்திகள்:
- வேளாண் சட்டங்களுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றிய கேரள சட்டமன்றம்
- சிரியாவில் பேருந்து மீது திடீர் தாக்குதல்: 28 பேர் பலி
- 2020இல் கொரோனாவால் இந்தியாவிலேயே அதிகம் உயிரிழந்த தமிழக மருத்துவர்கள்
- யேமென் போர்: விமான நிலையத்தில் வெடிகுண்டு தாக்குதல் - 22 பேர் பலி
- "ரஜினி அரசியலை கைவிட்டதால் தப்பித்தது தமிழ்நாடு" - இலங்கை தமிழர் தலைவர்
- குரேஷியா நிலநடுக்கம்: 7 பேர் பலி, ஒரு நகரில் பாதி அழிந்தது
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்