You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
இந்தியாவில் தொடங்கியது ஓட்டுநரில்லா மெட்ரோ ரயில் - பயணிகள் பாதுகாப்புக்கு உத்தரவாதம் இருக்குமா?
இந்தியாவின் முதலாவது ஓட்டுநரில்லா மெட்ரோ ரயில் சேவையை பிரதமர் நரேந்திர மோதி டெல்லியில் திங்கட்கிழமை (டிசம்பர் 28) தொடங்கி வைத்தார்.
இதையொட்டி நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோதி, "அடல் பிஹாரி வாஜ்பேயி பிரதமராக இருந்த 2002ஆம் ஆண்டில் முதலாவது மெட்ரோ ரயில் சேவை டெல்லியில் தொடங்கப்பட்டது. மத்தியில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சிக்கு வந்த 2014ஆம் ஆண்டில் 5 இந்திய நகரங்களில் மெட்ரோ ரயில் சேவைகள் வழங்கப்பட்டு வந்தன. இப்போது 18 நகரங்களில் மெட்ரோ ரயில் சேவைகள் உள்ளன," என்று கூறினார்.
இந்த புதிய ரயில் சேவையுடன், டெல்லி ஏர்போர்ட் எக்ஸ்பிரஸ் லைனில் செல்லுபடியாகக் கூடிய தேசிய பொது போக்குவரத்து அட்டை எனப்படும் என்சிஎம்சி கார்ட் திட்டத்தை பிரதமர் மோதி தொடக்கி வைத்தார்.
கடந்த 18 மாதங்களில் இந்திய ஸ்டேட் வங்கி, யூகோ வங்கி, கனரா வங்கி, பஞ்சாப் நேஷனல் வங்கி உள்ளிட்ட 18 வங்கிகள் வழங்கிய ரூபே டெபிட் கார்டை மெட்ரோ ரயில் பயணத்துக்கு நேரடியாக பயணி ஸ்வைப் செய்து கொள்ளலாம். 2022ஆம் ஆண்டில் இத்தகைய அட்டை அனைத்து டெல்லி மெட்ரோ ரயில் சேவைக்கும் பயன்படும் வகையில் இருக்கும் என்று பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
தற்போது டெல்லியில் தொடங்கப்பட்டுள்ள ஓட்டுநரில்லா மெட்ரோ ரயில் சேவை மூலம், உலக அளவில் அத்தகைய சேவையை வழங்கும் நாடுகளில் உள்ள மெட்ரோ நிறுவனங்களின் வரிசையில் தாங்களும் இணைந்திருப்பதாக டெல்லி மெட்ரோ ரயில் நிறுவனம் கூறுகிறது.
இந்த சேவை மெஜந்தா லைன் எனப்படும் 38 கி.மீ தூரத்துக்கு இயக்கப்படும் பாதையில் வழங்கப்படுகிறது.
டெல்லியில் மொத்தம் 390 கி.மீ தூரத்துக்கான மெட்ரோ ரயில் சேவை அமலில் உள்ளது. டெல்லி மட்டுமின்றி அண்டை மாநில எல்லை நகரங்கள் மற்றும் தேசிய தலைநகர் வலய (என்சிஆர்) பகுதிகளான நொய்டா, குருகிராம், ஃபரிதாபாத், காஸியாபாத் ஆகியவற்றுக்கும் மெட்ரோ ரயில் சேவை இயக்கப்படுகிறது.
டெல்லியில் முதலாவது மெட்ரோ ரயில் சேவை 2002ஆம் ஆண்டில் 8.4 கி.மீ தூரம் கொண்ட ஷாதரா - தீஸ் ஹஸாரி இடையே இயக்கப்பட்டது. அப்போது முதல் ஒவ்வொரு காலத்திலும் மெட்ரோ ரயில் திட்டங்கள் பல கட்டங்களாக விரிவு பெற்றுள்ளன.
இதன் தொடர்ச்சியாக தற்போது அதி நவீன தொழில்நுட்பத்தின் உதவியுடன் ஓட்டுநரில்லா மெட்ரோ ரயில் சேவையை வழங்க வசதியாக, மெட்ரோ ரயில் பொது விதிகள் 2020இல் மாற்றம் செய்யப்பட்டது.
இந்த புதிய சேவை, ஜனக்புரி மேற்கு முதல் நொய்டாவின் பொட்டானிக்கல் கார்டன் பகுதிவரை இயக்கப்படுகிறது. இதன் தொடர்ச்சியாக இதேபோன்ற ஓட்டுநரில்லா சேவையை பிங்க் லைன் எனப்படும் மஜ்லிஸ் பார்க் முதல் ஷிவ் விஹார் வரையிலான பாதையில் இயக்கவும் டெல்லி மெட்ரோ திட்டமிட்டிருக்கிறது.
ஓட்டுநர் இல்லா ரயில்கள் எவ்வாறு கட்டுப்படுத்தப்படும்?
டிஎம்ஆர்சி அளித்துள்ள தகவலின்படி, தற்போது ஓட்டுநர் இயக்கும் பெரும்பாலான ரயில்களின் செயலாக்கம், தானியங்கி கட்டுப்பாட்டு அறை மூலமே நடக்கிறது. இந்த கட்டுப்பாட்டு அறை, ஆபரேஷன்ஸ் கன்ட்ரோல் சென்டர் என அழைக்கப்படுகிறது.
இங்கு பணியாற்றும் பொறியாளர்கள், நேரலையாக ஒவ்வொரு ரயிலின் நடமாட்டத்தையும் கண்காணிக்கிறார்கள். இது வான் பாதையில் விமான போக்குவரத்தை கண்காணிப்பது போன்றது. இத்தகைய மூன்று கட்டுப்பாட்டு அறைகள் டெல்லியில் இயங்கி வருகின்றன. இரண்டு கட்டுப்பாட்டு அறைகள் டெல்லி மெட்ரோ தலைமையகத்திலும், ஒரு கட்டுப்பாட்டு அறை சாஸ்திரி பார்க் என்ற இடத்திலும் உள்ளது.
ரயில்கள் இயங்கும் பாதை அடிப்படையில் அதன் கட்டுப்பாடு மற்றும் கண்காணிப்பு அளவு தீவிரமாக இருக்கும் என்கிறார்கள் டிஎம்ஆர்சி அதிகாரிகள்.
மெட்ரோ சேவையின் பழைய பாதைகளாக கருதப்படும் ரெட் லைன், ப்ளூ லைன் ஆகியவை ஓட்டுநரின் கவனத்துடன் இயக்கப்பட வேண்டியவை. அங்கு கதவுகளை திறப்பது மற்றும் மூடுவது, ரயிலின் வேகம் என அனைத்தையும் ஓட்டுநர்கள் கட்டுப்படுத்த வேண்டும். அதே சமயம், ஓட்டுநர்கள் வரையறுக்கப்பட்ட வேக வரம்பை மீறி ரயிலை தன்னிச்சையாக இயக்க முடியாது. எனவே, ஏதோ ஒரு வகையில் தற்போதைய டெல்லி மெட்ரோ ரயில்கள் பலவும் கட்டுப்பாட்டு அறைகள் மூலமே இயங்கி வருகின்றன. அதனால், பயணிகள் எப்போதும் போல பயணிக்கலாம். அவர்களுக்கு எந்த வேறுபாடும் தெரியாது என அதிகாரிகள் கூறுகிறார்கள்.
இந்த நிலையில், மெஜந்தா லைனில் இயக்கப்படும் ரயில்கள் ஓட்டுநரின்றி இயங்கும். அதன் முழு கட்டுப்பாடுகளும் கட்டுப்பாட்டு அறையில் உள்ள பொறியாளர்களால் நிர்வகிக்கப்படும்.
அதே சமயம், ரயில் இயக்கத்தின்போது பயன்படக்கூடிய வன்பொருளில் (ஹார்டுவேர்) மாற்றம் தேவை என்றால் மட்டுமே அந்த ரயிலை ஒரு ஓட்டுநர் இயக்க வேண்டிய தேவை எழும் என்கிறார்கள் டெல்லி மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள்.
பிற செய்திகள்:
- இந்தியாவில் 16 லட்சம் உயிர்களை பலி வாங்கிய காற்று மாசு - நம்மை தற்காத்துக் கொள்வது எப்படி?
- "கொரோனா புதிய திரிபு இளைஞர்களை எளிதில் தாக்கும்" - எச்சரிக்கும் லண்டன் தமிழ் மருத்துவர்
- "பிரிட்டனில் இருந்து தமிழகம் வந்த 13 பேருக்கு கொரோனா வைரஸ்"
- விண்வெளி வீரர் ஸ்காட் கெல்லி: விண்வெளியில் ஓராண்டு தாக்குபிடிப்பது எப்படி?
- கை விரல் ரேகை இல்லை - வங்கதேசத்தில் அரிய வகை மரபணு நோயால் பாதிக்கப்பட்ட குடும்பம்
- உலக நாடுகளில் பரவத் தொடங்கிய புதிய வகை கொரோனா - எங்கெல்லாம் பாதிப்பு?
- 2,000 ஆண்டுகளுக்கு முந்தைய பழங்கால 'ஃபாஸ்ட் ஃபுட்' கடை கண்டுபிடிப்பு
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்