You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
பி.எஸ்.எல்.வி சி50: வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்ட சிஎம்எஸ் 1 செயற்கைக்கோள்
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) வடிவமைத்த பி.எஸ்.எல்.வி - சி50 ராக்கெட், சி.எம்.எஸ் - 01 என்ற தொலைத்தொடர்பு செயற்கைக்கோளை தாங்கியபடி பிற்பகல் 3.30 மணியளவில் விண்ணில் சீறிப்பாய்ந்து வெற்றிகரமாக அது புவி வட்டப்பாதையில் நிறுத்தப்பட்டதாக இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்.
ஆந்திர பிரதேசத்தில், ஸ்ரீஹரிகோட்டாவில் இருக்கும் சதீஷ் தவான் விண்வெளி ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து இந்த ராக்கெட் விண்ணில் இன்று பிற்பகல் திட்டமிட்ட நேரத்தில் சீறிப்பாய்ந்தது.
இந்தியாவின் பி.எஸ்.எல்.வி தன்னுடைய 52-வது திட்டமான பி.எஸ்.எல்.வி சி50-ல், எக்ஸ் எல் ரக ராக்கெட்டை இதற்காக பயன்படுத்தியிருக்கிறது. இது 6 ஸ்டிராப்களைக் கொண்டது.
இது இந்தியா ஏவும் 42-வது தொலைத்தொடர்பு செயற்கைக்கோள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த செயற்கைக்கோள் விரிவுபடுத்தப்பட்ட சி-பேண்ட் அலைவரிசையை வழங்கும். இந்த சி-பேண்ட் மூலம் இந்தியா, அந்தமான், லட்சத்தீவுகள் ஆகிய பகுதிகளில் அலைவரிசை சேவையை பெற முடியும்.
இந்த செயற்கைக்கோளின் ஆயுட்காலம் ஏழு ஆண்டுகளுக்கு மேல் என இஸ்ரோ வலைதளத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
பி.எஸ்.எல்.வி சி 50 ஏவப்பட்டு 20 நிமிடம் 11 நொடிகளில், சி.எம்.எஸ் -01 செயற்கைக் கோள், ராக்கெட்டில் இருந்து பிரிந்து புவிவட்டப்பாதையில் வெற்றிகரமாக நிறுத்தப்பட்டது.
இந்த செயற்கைக்கோள் விண்ணில் செலுத்தப்பட்ட நடவடிக்கை, இந்திய விண்வெளி வரலாற்றில் மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய இஸ்ரோ தலைவர் சிவன், "தனியார் பங்களிப்புடன் தொடங்கப்படும் முற்றிலும் இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட புதிய செயற்கைக்கோள் ஆனந்த் விரைவில் விண்ணில் செலுத்தப்படவுள்ளது. ஸ்பேஸ்கிட்ஸ் இந்தியா, சதீஷ்சாட், யூனிட்டிசாட் ஆகியவையும் அடுத்தடுத்து விண்ணில் செலுத்தப்படவுள்ளது" என்று இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்தார்.
சந்திரயான் 3, ஆதிகேசவன், ககன்யான் போன்ற செயற்கைக்கோள் திட்டப்பணிகளும் முழு வீச்சில் நடந்து வருகிறது என்றும் அவர் கூறினார்.
பிற செய்திகள் :
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்