டெல்லி விவசாயிகள் போராட்டம்: நாளை ஜெய்ப்பூர் சாலையில் டெல்லி சலோ, 14ம் தேதி உண்ணாவிரதம்

டெல்லி விவசாயிகள் போராட்டத்தைத் தீவிரப்படுத்தப் போவதாக போராட்டக்குழுவினர் சில நாள்களுக்கு முன்பு அறிவித்தனர்.

இந்நிலையில் டிசம்பர் 14-ம் தேதி ஒரு நாள் உண்ணாவிரதத்தில் ஈடுபடப்போவதாக விவசாயிகள் தலைவர்கள் இன்று சனிக்கிழமை தெரிவித்துள்ளனர்.

அது மட்டுமில்லாமல், ராஜஸ்தானில் இருந்து டெல்லி வரும் ஜெய்பூர் - டெல்லி நெடுஞ்சாலையிலும் விவசாயிகள் டெல்லி சலோ போராட்டத்தை மேற்கொள்ளப்போவதாகவும், ஞாயிற்றுக்கிழமை 11 மணிக்கு விவசாயிகள் ஷஹஜன்பூரில் இருந்து பயணத்தைத் தொடங்குவார்கள் என்றும் அவர்கள் அறிவித்துள்ளார்கள் என்கிறது பி.டி.ஐ. செய்தி நிறுவனம்.

அரசாங்கம் மீண்டும் பேச விரும்பினால் நாங்கள் தயாராக உள்ளோம். ஆனால், முதலில் அந்த மூன்று சட்டங்களை திரும்பிப் பெறுவது குறித்து விவாதிக்கவேண்டும் என்று விவசாயிகள் தலைவர்கள் தெரிவித்தனர்.

இதனிடையே மத்திய விவசாயத் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமரை சந்தித்த ஹரியாணா துணை முதல்வர் துஷ்யந்த் சௌதாலா, அடுத்த 20 முதல் 40 மணி நேரத்தில் அடுத்த சுற்றுப் பேச்சுவார்த்தை நடக்கும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

தாம் துணை முதல்வராக இருக்கும்வரை குறைந்தபட்ச ஆதரவு விலை விவசாயிகளுக்குத் தரப்படும் என்று அவர் உறுதி கூறினார்.

இதனிடையே முற்போக்கு ஹரியாணா விவசாயிகள் அரசாங்கத்தின் புதிய சட்டங்களை ஆதரித்து தீர்மானம் அளித்துள்ளதாகவும் தோமர் தெரிவித்தார்.

இதற்கிடையே ஏ.என்.ஐ. செய்தி நிறுவனத்திடம் பேசிய ரயில்வே அமைச்சர் பியுஷ் கோயல், விவசாயிகள் போராட்டத்தை நக்சலைட்டுகள், மாவோயிஸ்டுகள் ஊடுருவி வழிநடத்தாவிட்டால் அவர்கள் புதிய விவசாய சட்டங்களில் விவசாயிகளுக்கு நன்மை உண்டு என்பதை ஏற்பார்கள் என்று கூறியுள்ளார்.

பேச்சுவார்த்தைக்கு மத்திய அரசின் கதவுகள் 24 மணி நேரமும் திறந்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: