You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ஊர்வனங்களுக்காக ஓர் தொங்கு பாலம் - நைனிடால் மலை சாலையில் அரிய முயற்சி
இந்தியாவின் மலைகள் நிறைந்த உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள நைனிடால் வனப்பகுதி வளைவுச்சாலைகளில் வாகனங்களிடம் மிதிபடாமல் ஊர்வனங்கள் சாலையை கடக்க தொங்கு பாலம் அமைக்கப்பட்டிருக்கிறது.
90 அடி நீளம் கொண்ட இந்த பசுமை தொங்கு பாலம், மூங்கில், சணல், புல் கட்டுகளால் உருவாக்கப்பட்டிருக்கிறது. இந்தியாவிலேயே இப்படி ஒரு தொங்கு பாலம் அமைக்கப்பட்டிருப்பது இதுவே முதல் முறை.
இந்திய வட மாநிலங்களில் குறிப்பிடத்தக்க சுற்றுலா தலங்களில் ஒன்றாக நைனிடால் விளங்குகிறது. மலை வளைவுச் சாலைகள் கொண்ட இந்த பகுதியில் சாலைகளில் முதலைகள், காட்டு விலங்குகள் சர்வ சாதாரணமாக செல்வதை காண முடியும்.
அதேசமயம், அந்த சாலைகளில் வேகமாக செல்லும் வாகனங்களின் சக்கரங்களில் சிக்கி அந்த ஊர்வனங்கள் உள்ளிட்ட விலங்குகள் உயிரிழப்பதும் தொடர்கிறது.
இதையடுத்து அந்த பகுதியில் சாலையை கடக்கும் ஊர்வனங்களுக்காக ஒரு பிரத்யேக தொங்கு பாலத்தை இங்குள்ள வனத்துறையினர் உருவாக்கியிருக்கிறார்கள்.
இது குறித்து அங்குள்ள வன அதிகாரி சந்தர்சேகர் ஜோஷி பிபிசியிடம் கூறுகையில், "தொங்கு பாலத்தின் இரு புறமும் கேமிராக்கள் பொருத்தி அதில் கடக்கும் ஊர்வனங்கள் உள்ளிட்ட விலங்குகளின் நடமாட்டத்தை கண்காணிக்கிறோம்," என்று தெரிவித்தார்.
அரிதான முயற்சியாக உருவாக்கப்பட்ட இந்த தொங்கு பாலம், இப்போது இந்த பகுதிக்கு வரும் சுற்றுலாவாசிகள் பார்வையிடும் தவிர்க்க முடியாத பகுதியாகியிருக்கிறது. இதனால், இந்த சாலையில் பயணம் செய்யும் சுற்றுலாவாசிகள், வாகனங்களை ஓரமாக நிறுத்தி விட்டு, தொங்கு பாலத்தின் கீழ் நின்று கொண்டு செல்ஃபி எடுத்து அதை இணையத்தில் பகிர்ந்து வருகிறார்கள்.
இந்த இடம் சுற்றுலாவசிகளை மட்டுமின்றி இந்த சாலையை கடக்கும் விலங்குகளையும் ஈர்க்க வேண்டும் என்று இங்கு பணியாற்றும் வன அலுவலர்கள் எதிர்பார்க்கிறார்கள்.
"அடர்த்தியான இந்த காட்டுப்பகுதியில் யானைகள், சிறுத்தைகள், மான்கள், காட்டெருமைகள், காளைகள் போன்றவற்றின் நடமாட்டம் அதிகமாக உள்ளது. இதனால், தூரத்திலேயே அவற்றை பார்க்கும் வாகன ஓட்டிகளில் பலரும் முன்கூட்டியே வாகனங்களை நிறுத்தி அவை சாலையை கடக்க வழிவிடுகிறார்கள். ஆனால், சிறிய வகை ஊர்வனங்களான பாம்புகள், அனில்கள், பல்லிகள் போன்றவற்றை வாகன ஓட்டிகளால் தூரத்திலேயே பார்க்க முடியாது. அதனால், சில நேரங்களில் அந்த ஊர்வனங்கள், வாகனங்களில் அடிபட்டு உயிரிழக்கின்றன," என்று ஓர் வன அதிகாரி கூறுகிறார்.
இந்த தொங்கு பாலம், சுற்று வட்டாரத்தில் உள்ள வன உயிரினங்களின் கவனத்தை ஈர்த்து அதை அவை பயன்படுத்தும் காலம் வர வேண்டும் என்ற நம்பிக்கையுடன் இந்த பகுதியை வன அலுவலர்கள் கண்காணித்தவாறு இருக்கிறார்கள்.
பிற செய்திகள் :
- பைடன் 1.0, ஒபாமா 3.0 ஆக இருக்குமா? எதிர் நிற்கும் சவால்கள் என்ன?
- கொரோனா: குணமடைந்த 3 மாதம் கழித்தும் நுரையீரல் பாதிப்பு - ஆய்வில் அதிர்ச்சி
- தமிழ்நாட்டில் காங்கிரஸின் பலத்தை மிகை மதிப்பீடு செய்கிறாரா ராகுல் காந்தி?
- நாசாவின் கவனத்தை ஈர்த்த 6 வயது மாற்றுத் திறனாளி சிறுவன்
- மக்கள் நீதி மய்யத்தில் இணைந்த முன்னாள் ஐ.ஏ.எஸ் சந்தோஷ் பாபு
- தமிழ்நாட்டில் காங்கிரஸின் பலத்தை மிகை மதிப்பீடு செய்கிறாரா ராகுல் காந்தி?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்