You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
விவசாயிகள் போராட்டம், பதற்றம்: விவசாய சட்டங்களை எதிர்த்து பஞ்சாப், ஹரியாணா விவசாயிகளின் டெல்லி சலோ போராட்டம்
மத்திய அரசு கொண்டுவந்த விவசாயச் சட்டங்களை எதிர்த்து 'டெல்லி சலோ' (டெல்லிக்கு செல்) என்ற போராட்டத்தில் பங்குபெற விவசாயிகள் பஞ்சாப் ஹரியாணா எல்லைப் பகுதியில் குவிந்துள்ளதால் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.
மத்திய அரசு கொண்டுவந்த விவசாயச் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் இந்தப் போராட்டத்துக்கு அறைகூவல் விடுத்திருந்தனர். டெல்லியை இணைக்கும் ஐந்து நெடுஞ்சாலைகள் வழியாகப் பயணித்து டெல்லியை சென்றடைவது என்பது அவர்களது திட்டம்.
பஞ்சாப் மற்றும் ஹரியாணா மாநிலங்களில் விவசாய சட்டங்களை எதிர்த்து தொடர்ந்து போராட்டங்கள் நடந்து கொண்டிருந்த நிலையில் இந்த டெல்லி சலோ போராட்டம் இன்று நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் பஞ்சாப், ஹரியாணா மாநிலங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. பல இடங்களில் போலீஸாரின் தடையை மீறி போராட்டக்காரர்கள் முன்னேறிச் செல்ல முயன்றதால் பதற்ற நிலை ஏற்பட்டது.
ஹரியாணா, பஞ்சாபில் பதற்றம்
ஹரியாணாவில் ஷாபாத் என்னும் இடத்திற்கு அருகில் விவசாயிகள் போலீசாரின் தடுப்புகளை தகர்த்து முன்னே செல்ல முயன்றனர்.
போராட்டக்காரர்களை தடுக்க போலீஸார் தண்ணீரை பீய்ச்சி அடித்தனர்.
பஞ்சாப் மற்றும் ஹரியாணாவை இணைக்கும் சாலைகள் அனைத்தும் அடைக்கப்பட்டுள்ளன. மேலும் சட்டத்தை மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
ஹரியாணா மாநிலம் அம்பாலாவில் ஷாம்பு என்ற எல்லைப் பகுதியில் விவசாயிகள் போலீஸார் தடுப்புகளை தகர்ப்பது போன்ற காணொளிகளை ஊடகங்களில் காண முடிகிறது.
ஹரியாணா மற்றும் பஞ்சாப் இடையே உள்ள ஷாம்பு எல்லைப் பகுதியில் கூடிய விவசாயிகளைக் கலைக்க பாதுகாப்புப் படையினர் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர்.
ஹரியாணாவின் கர்னா பகுதியில் போராட்டத்தில் ஈடுப்பட்ட விவசாயி ஒருவர், "அவர்கள் சாலைகள் அடைத்துவிட்டனர். சாலைகளை அடைத்ததால் பொது மக்கள் சிரமத்தில் உள்ளனர்," என்று தெரிவித்தார்.
என்ன சொன்னார் பஞ்சாப் முதல்வர்?
பஞ்சாப் முதல்வர் கேப்டன் அம்ரிந்தர் சிங், அரசியலைப்பு தினத்தன்று விவசாயிகளின் அரசமைப்பு உரிமைக்கு எதிரான குற்றங்கள் நடப்பது வேதனைக்குரியது.
மேலும் இதுகுறித்து ஹரியாணா முதல்வருக்கு கோரிக்கை ஒன்றையும் வைத்தார்.
"விவசாயிகளை தடுக்க வேண்டாம். அவர்களின் குரல் டெல்லியில் ஒலிக்கட்டும்" என்று ஹரியாணா முதல் மனோகர் லால் கட்டாரிடம் கோரிக்கை வைத்தார் பஞ்சாப் முதல்வர் கேப்டன் அம்ரிந்தர் சிங்.
டெல்லி முதல்வர் கேஜ்ரிவால் என்ன சொன்னார்?
மத்திய அரசு கொண்டுவந்த மூன்று விவசாயச் சட்டங்களும் விவசாயிகளுக்கு எதிரானது. அதனை திரும்பப் பெறுவது விட்டுவிட்டு விவசாயிகளின் அமைதியான போராட்டத்தை அரசு தடுக்கிறது.
"விவசாயிகள் மீது தண்ணீர் பீய்ச்சி அடிக்கப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு எதிரான இந்த குற்றம் முற்றிலும் தவறானது. அமைதியாக போராடுவது விவசாயிகளின் உரிமை" என கேஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
சட்டங்கள் என்னென்ன? அவை என்ன சொல்கின்றன?
விவசாயிகளின் கோபத்துக்குக் காரணமான சட்டங்கள் எவையெவை?
மொத்தம் மூன்று சட்டங்கள். 1. அத்தியாவசியப் பொருட்கள் திருத்தச் சட்டம் 2020,
2. விவசாய விளைபொருள்வியாபாரம் மற்றும் வர்த்தக (மேம்பாடு மற்றும் எளிமைப்படுத்துதல்) சட்டம் 2020,
3. விவசாயிகளுக்கு(அதிகாரமளித்தல் மற்றும் பாதுகாப்பு) விலை உத்தரவாத ஒப்பந்தம் மற்றும் விவசாய சேவைகள் சட்டம் 2020.
இவை ஆங்கிலத்தில் முறையே Essential Commodities (Amendment) Act 2020, Farming Produce Trade and Commerce (Promotion and Facilitation) Act 2020, The Farmers (Empowerment and Protection) Agreement on Price Assurance and Farm Services Act 2020 எனஅழைக்கப்படுகின்றன.
அத்தியாவசியப் பொருட்கள் திருத்தச் சட்டத்தை எடுத்துக்கொண்டால், இந்தியாவில் வெங்காயம், பருப்பு போன்ற பொருட்களின் விலை உயரும்போது அவற்றை ஏற்றுமதி செய்யவும் சேமித்து வைக்கவும் அரசுஅவ்வப்போது கட்டுப்பாடுகளை விதிக்கிறது.
இப்போது வந்துள்ள சட்டத் திருத்தத்தின்படி இம்மாதிரி கட்டுப்பாடுகளை பின்வரும் சூழலில்தான் விதிக்கமுடியும்: அதாவது, தோட்டப் பயிர்களைப் பொறுத்தவரை அவற்றின் விலை கடந்த 12 மாதங்களின் சராசரிவிலையைவிட 100 சதவீதம் அதிகரிக்க வேண்டும். தானியங்களைப் பொருத்தவரை, கடந்த ஐந்து ஆண்டுகளின்சராசரி விலையைவிட 50 சதவீதம் அதிகரிக்க வேண்டும். அப்படி இருந்தாலும்கூட இந்தக் கட்டுப்பாடு உணவுப்பொருட்களைப் பதப்படுத்தும் நிறுவனங்களுக்குப் பொருந்தாது.
விளைபொருட்களை உற்பத்தி செய்யவும் சேமித்து வைக்கவும் வேறு இடங்களுக்குக் கொண்டுசெல்லவும் விற்பனை செய்யவும் விவசாயிகளுக்கு முழு சுதந்திரம் இந்த சட்டத் திருத்தத்தின்மூலம் அளிக்கப்படும் என்கிறது மத்திய அரசு.
இதனால், இந்தத் துறையின் பொருளாதாரம் மேம்பட்டு, நேரடி அந்நிய முதலீடு விவசாயத் துறையில் கிடைக்குமென மத்திய அரசு நம்புகிறது. உணவு விநியோகச் சங்கிலியில் தேவைப்படும் குளிர்ப்பதன கிடங்குகள் போன்றவற்றைக் கட்டத் தேவைப்படும் முதலீட்டை இந்தச் சட்டம் எளிதாக்கும் என்பது இந்தச் சட்டத்தை ஆதரிப்பவர்களின் வாதம்.
இரண்டாவதாக உள்ள விவசாய விளைபொருள் வியாபாரம் மற்றும் வர்த்தக (மேம்பாடு மற்றும் எளிமைப்படுத்துதல்) சட்டத்தைப் பொருத்தவரை விவசாய விளை பொருட்களை மாநிலத்திற்கு உள்ளேயும் வெளியேயும் எந்த இடத்திலும் வியாபாரமும் வர்த்தகமும் செய்ய வழிவகுக்கிறது. இதன் மூலம், மாநில அரசுகளால் இயக்கப்படும் விவசாய ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்திற்கு வெளியிலும் பொருட்களை விற்க வழி செய்யப்படுகிறது. இதனால், விவசாயிகளுக்கு அவர்களின் உற்பத்திப் பொருட்களுக்குக் கூடுதல் விலை கிடைக்குமென அரசு கூறுகிறது.
ஆனால், விவசாய வர்த்தகத்தின் மீது மாநில அரசு கொண்டிருக்கும் கட்டுப்பாடு இந்தச் சட்டத்தின்மூலம் இல்லாமல் போகிறது. வேறு மாநிலத்தைச் சேர்ந்த வியாபாரிகள், மற்றொரு மாநிலத்தில் எங்கு வேண்டுமானாலும் வந்து பொருட்களை வாங்கிச் சொல்லலாம் என்பதால், ஒரு மாநிலத்தில் ஒரு பொருளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டாலும், மாநில அரசால் ஏதும் செய்ய முடியாது என்ற அச்சமும் இருக்கிறது.
மூன்றாவது சட்டம், விலை உத்தரவாதம், விவசாய சேவைகள் ஒப்பந்தம் மற்றும் விவசாய சேவைகள் சட்டம் 2020. விவசாயிகளுடன் எந்த மூன்றாவது நபரும் ஒப்பந்தம் ஒன்றைச் செய்துகொள்ள இந்தச் சட்டம் வழிவகுக்கிறது. சுருக்கமாகச் சொன்னால், விவசாய கான்ட்ராக்ட்களுக்கு இந்தச் சட்டத்தின் மூலம் சட்டரீதியான பாதுகாப்பு கிடைக்கும்.
இந்த மூன்று சட்டங்கள் மூலமும் விவசாயிகள் தங்கள் விளை பொருட்களுக்கு நல்ல விலையைப் பெற முடியும், கூடுதலான வர்த்தக வாய்ப்புகள் கிடைக்கும் என்கிறது மத்திய அரசு. மேலும், நுகர்வோரும் வர்த்தகர்களும் பயனடைவார்கள் என்றும் அது கூறுகிறது. ஆகவே மூன்று தரப்பினருக்கும் பயனளிக்கக்கூடிய சட்டங்கள் இவை என்கிறது மத்திய அரசு.
இந்தியாவில் விவசாயம் என்பது மாநில அரசின் கீழ் உள்ளது. ஆகவே விவசாயம் தொடர்பாக இயற்றப்பட்டிருக்கும் இந்த மூன்று சட்டங்களும் மாநில அரசின் உரிமைகளைப் பறிப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டுகின்றன. மேலும், பெரிய விதை நிறுவனங்கள், கான்ட்ராக்ட் விவசாயநிறுவனங்கள், மிகப் பெரிய சங்கிலித் தொடர் சூப்பர் மார்க்கெட்களுக்கு ஏதுவாக இந்தச்சட்டங்களைக் கொண்டுவந்திருப்பதாக அவை குற்றம்சாட்டுகின்றன.
விவசாய ஒழுங்கு முறை விற்பனைக் கூடங்களுக்கு வெளியிலும் விவசாயப் பொருட்களை விற்பனை செய்ய இந்தச் சட்டம் வகை செய்வது பல மாநிலங்களில் எதிர்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :