You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
நிவர் புயல்: பாதிக்கப்பட்டவர்களுக்கு என்ன நிவாரணம்? பயிர் சேத இழப்பு எப்போது தரப்படும்?
கடலூர் மாவட்டத்தில் நிவர் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் ஆய்வு செய்ய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று(நவம்பர் 26) நேரில் ஆய்வு செய்தார்.
இதில் புயலால் பாதிக்கப்பட்ட வேளாண் நிலங்கள் மற்றும் முகாமில் தங்க வைக்கப்பட்டிருந்த மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். மேலும் தேசிய பேரிடர் மீட்புக் குழுவினரிடம் மீட்புப் பணிகள் குறித்தும் கேட்டறிந்தார். இதனைத் தொடர்ந்து தமிழக முதல்வர் நிவாரணப் பொருட்களை வழங்கினார். இதையடுத்து நிவர் புயலால் கடலூர் மாவட்டத்தில் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் ஆய்வு கூட்டம் நடத்தப்பட்டது. இந்த கூட்டத்தில் அமைச்சர் எம்.சி சம்பத், தலைமை செயலாளர் சண்முகம், ககன்தீப் சிங் பேடி, ஆட்சியர் சந்திரசேகர் சகாமூரி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.தமிழக அரசு சரியான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் செய்த காரணத்தினால் நிவர் புயலால் பெரிய அளவில் பாதிப்புகள் ஏற்படவில்லை என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
ஆய்வு கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்தபோது, முதல்வர் பழனிசாமி புயல் பாதிப்பு குறித்து பேசினார்.
"நிவர் புயல் தமிழகத்திற்கு வந்தாலும் அதனால் பெரிய பாதிப்பு தமிழகத்தில் ஏற்படவில்லை. தமிழகத்தில் நிவர் புயலால் பாதிக்கப்பட்டிருந்தால், பாதிக்கப்பட்ட மக்களைத் தங்க வைப்பதற்காக 4,733 முகாம்கள் தயார் செய்து வைத்திருந்தோம். இதில் சுமார் 13 லட்சம் பேர் தங்க வைக்கும் அளவிற்கு ஏற்பாடு செய்திருந்தோம். இதில் 2,099 முகாம்களில் மக்கள் தற்போது தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதில் சுமார் 2 லட்சத்து 30 ஆயிரம் பேர் இந்த முகாம்களில் தங்கி இருந்தனர்" என்று அவர் கூறினார். "கடலூர் மாவட்டத்தைப் பொருத்தவரை 440 முகாம்கள் அமைக்கப்பட்டு, அதில் மட்டும் 5,2226 பேர் முகாம்களில் தங்கினார்கள். அதேபோன்று கடலூர் மாவட்டத்தில் 77 மின் கம்பங்கள் இந்த புயலால் பாதிக்கப்பட்டுள்ளது. அந்த 77 மின் கம்பங்களையும் சரி செய்து மின்சாரம் தடையில்லாமல் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதேபோன்று புயல் காற்றினால் கடலூர் மாவட்டத்தில் 321 மரங்கள் சாய்ந்துள்ளன. அனைத்து மரங்களும் அப்புறப்படுத்தப்பட்டு பாதை சீர் செய்யப்பட்டு இருக்கின்றன," என்றார் அவர்.
"1617 ஹெக்டேர் நெற்பயிர்கள் சேதம் அடைந்திருப்பதாகவும், 315 ஹெக்டேர் மணிலா வேளாண் பயிர்கள் நீரில் மூழ்கி இருப்பதாகவும் தகவல் கிடைத்துள்ளது. 35 ஹெக்டேர் வாழை காற்றினால் சேதமடைந்து இருக்கின்றன. 8 ஹெக்டேர் மரவள்ளிக்கிழங்கு நீரில் மூழ்கி இருக்கின்றன என்றும் தகவல் கிடைத்துள்ளது. மேலும் மாவட்ட நிர்வாகம் முழுமையாகக் கணக்கிடப்பட வேண்டும் என்று அறிவுறுத்தியிருக்கிறேன். ஆகவே பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு பேரிடர் நிதியிலிருந்து அவர்களுக்கு நிவாரணம் வழங்கப்படும்.அதேபோன்று பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தில் விவசாயிகள் அவர்களது பயிர்களைக் காப்பீடு செய்திருந்தால், அவர்களுக்கு அந்த இழப்பீடு தொகை பெற்றுத் தரப்படும். தமிழக அரசு அறிவித்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் முறையாக பின்பற்றிய காரணத்தினால் கடலூர் மாவட்டமானது இந்த நிவர் புயலில் இருந்து பெரும் பாதிப்பு ஏற்படாமல் பாதுகாக்கப்படுகிறது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்," என்று கூறினார்."ஒவ்வொரு மாவட்டத்திலும் புயல் பாதிப்பு குறித்து கணக்கெடுக்கப்படுகிறது. சேதம் எவ்வளவு என்று தெரிந்த பிறகு அதற்கு தகுந்த இழப்பீட்டை அரசு வழங்கும். தமிழக அரசு சரியான நடவடிக்கை எடுக்கப்பட்ட காரணத்தினால் உயிர்ச்சேதம் குறைக்கப்பட்டிருக்கிறது பொருட்சேதம் இல்லை," எனத் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
நிவர் புயல் நிலவரம்: பாம்பன் அருகே உள்வாங்கிய கடல், மக்கள் மத்தியில் பீதி
நிவர் புயல் கரையை கடந்து பலவீனமான நிலையில், ராமேஸ்வரம் அருகே பாம்பன் கடல் உள்வாங்கி உள்ளது மக்களுக்கு பீதியை உண்டாக்கியுள்ளது.
இதனிடையே, புயல் கரையைக் கடந்திருந்தாலும், கனமழை பெய்யும் வாய்ப்பிருப்பதால் வீட்டிலேயே இருக்கும்படி மக்களை கேட்டுக்கொண்டுள்ளார் புதுவை முதல்வர் நாராயணசாமி. மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நாராயணசாமியுடன் புயல் நிலவரம் குறித்துப் பேசியுள்ளார். நிவர் தொடர்பாக நடந்து வரும் பல்வேறு செய்திகளின் விவரம்:
உள்வாங்கிய பாம்பன் கடல்
வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை கடந்த சில நாள்களுக்கு முன்பு நிவர் புயலாக மாறியது. புயல் உருவானதையடுத்து வழக்கத்துக்கு மாறாக பாம்பன் வடக்கு கடல் பகுதி சூறைக்காற்றுடன், சீற்றத்துடன் காணப்பட்டது.இந்த நிலையில் நேற்று இரவு புதுச்சேரிக்கும் மரக்காணத்துக்கும் இடையே புயல். கரையை கடந்தது. இதன் எதிரொலியாக கடந்த 3 நாட்களாக கடும் சீற்றத்துடன் காணப்பட்ட பாம்பன் வடக்கு கடற்கரை அமைதியானது.
இதனை தொடர்ந்து நேற்று இரவு முதல் கடல், கரையில் இருந்து 8 மீட்டர் தூரம் உள்வாங்கி காணப்படுகிறது. இதனால் மீனவர்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ளது. கடந்த 2018ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ஏற்பட்ட கஜ புயலின் போது பாம்பன் வடக்கு கடற்கரை இதே போல் அமைதியாக இருந்தது பின்னர் திடீரென சீற்றம் ஏற்பட்டு விசைப்படகுகள் மற்றும் நாட்டுபடகுகள் ஒன்றோடு ஒன்று மோதிய காரணத்தினால் படகுகள் சேதமடைந்தது. தற்போது மீண்டும் இவ்வாறான சூழ்நிலை ஏற்பட்டுள்ளதால் மீனவர்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ளது.மேலும் பாம்பனில் புதிதாக அமைக்கப்பட்டு வரும் புதிய ரயில் பால கட்டுமான பணியில் ஈடுபட்டு வந்த ராட்சத கிரேன் மற்றும் ஜெனரேட்டர் பொருத்தப்பட்ட மிதவைகள் கடல் சீற்றம் காரணமாக பழைய ரயில் பாலத்தில் மோதி சேதம் ஏற்படக் கூடும் என்பதால் கட்டுமானப் பொருட்களை கரையில் நிறுத்தி வைத்தனர்.தற்போது கடல்நீர் உள்வாங்கியதால் கனரக மிதவைகள் மற்றும் கிரேன்கள் தரை தட்டி மணலில் புதைந்து நிற்கின்றன. நிவர் புயல் காரணமாக பாம்பன்,தூத்துக்குடி தூறைமுகங்களில் கடந்த மூன்று நாட்காளக ஏற்றப்பட்டிருந்த 3ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு இறக்கப்பட்டது.
கடலூரில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேரில் ஆய்வு
கடலூர் மாவட்டத்தில் நிவர் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
வெள்ளம் பாதித்த பகுதிகளைத் துரிதப்படுத்த முதல்வர் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
முன்னதாக புயல் காரணமாக ஏற்பட்ட பலத்த காற்றின் காரணமாக விழுந்த மரங்கள் அகற்றப்பட்டு வருகிறது.
குறிப்பாக கடலூர் மாவட்டத்தில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் உள்ள மக்களை முகாம்களில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டு, அவர்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, நிவர்" புயலால் செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை மாவட்டங்களில் 24.11.2020 மதியம் 1.00 மணி முதல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அரசு பேருந்துகள் சேவை, புயல் கரையை கடந்து விட்டதால் இன்று நண்பகல் 12.00 மணி முதல் வழக்கம்போல் இயக்கப்பட்டுள்ளன.
புயல் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் நிறுத்தப்பட்டுள்ள விநியோகம், விரைவில் சீரடையும் என்று தமிழக மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.
புதுவையில் நிவர் புயலால் பெரிய பாதிப்பு ஏதுமில்லை என்று அறிவித்துள்ள புதுவை முதல்வர் நாராயணசாமி, ஆனால், கனமழை நீடிக்கும் என்றும் மக்கள் வீடுகளிலேயே இருக்கவேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
வங்கக் கடலின் தெற்குப் பகுதியில் உண்டான நிவர் புயல் புதன்கிழமை மற்றும் வியாழக்கிழமைக்கு இடைப்பட்ட இரவில் கரையைக் கடந்துள்ளது.
அது அதிதீவிரப் புயலாக கரையைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் வலுவிழந்து தீவிரப் புயலாகவே கரையைக் கடந்தது. இதன் காரணமாக எதிர்பார்க்கப்பட்ட அளவைவிட பாதிப்பு ஒப்பீட்டளவில் குறைவாகவே இருந்தது.
நாராயணசாமியுடன் பேசிய அமித் ஷா
நிவர் புயல் பாதிப்பு குறித்து புதுச்சேரி முதல்வர் நாராயணசாமியிடம் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கேட்டறிந்தார். மேலும் பாதிப்புகள் குறித்து தேவையான உதவிகளை செய்வதாக புதுச்சேரி முதல்வரிடம் அமித்ஷா தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் பத்திரிகையாளர்களிடம் பேசிய புதுவை முதல்வர் நாராயணசாமி,
"புதுச்சேரியில் 23 சென்டிமீட்டர் அளவு மழை பதிவாகியுள்ளது. பல பகுதிகளில் நீர் தேங்கியும் உள்ளது. இந்த தேங்கிய நீர் கடலில் சென்று வடியவில்லை. இது வடிய காலதாமதம் ஆவதால் புதுச்சேரி நகரப் பகுதிகளில் மழை நீர் சூழ்ந்துள்ளது. சில பகுதிகள் மட்டுமே மரங்கள் விழுந்துள்ளன" என்று தெரிவித்தார்.
மேலும் இது குறித்துப் பேசிய அவர், "மீனவ பகுதிகளில் படகுகள், வலைகள் ஆகியவற்றுக்கு சேதம் ஏற்பட்டிருக்கிறதா என்றும், உயிர்ச்சேதம் ஏதும் ஏற்பட்டுள்ளதா என்றும் ஆய்வு செய்ய இருக்கிறோம். இதுவரை உயிர் சேதம் குறித்து எந்த அறிவிப்பும் வரவில்லை. புயல் இரவு நேரத்தில் வந்த காரணத்தினால் பொதுமக்கள் அனைவரும் வீடுகளில் பாதுகாப்பாக இருந்ததால், பாதிப்பு குறைந்துள்ளது.
தடைப்பட்ட மின்சாரம் 12 மணி நேரத்திற்குள் கொடுக்கப்படும் என்று அறிவித்திருந்த நிலையில் புதுச்சேரியில் ஒரு சில பகுதிகளில் மின்சாரம் கொடுக்கப்பட்டுள்ளது. மற்ற பகுதிகளில் படிப்படியாக மின்சாரம் கொடுக்கப்படும்," என்றார்.
"தற்போது முக்கியமாக தேங்கியிருக்கும் தண்ணீரைக் கடலுக்குக் கொண்டு போகும் பணியில் ஈடுபட்டு வருகிறோம். இரண்டு தினங்களுக்கு முன்பு அமல்படுத்திய 144 தடைச் சட்டம் தளர்த்தப்பட்டுள்ளது. பாதிப்பு குறித்து கணக்கெடுத்த பிறகு நிவாரணம் அறிவிக்கப்படும்" என்றும் தெரிவித்துள்ளார் முதல்வர் நாராயணசாமி.
இந்த புயல் காரணமாக 27ஆம் தேதி வரை கனமழை நீடிக்கும் என்பதால், பொதுமக்கள் அனைவரும் பாதுகாப்பாக அவர்கள் வீடுகளில் இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. இதுவரை நிவாரண முகாம்களில் 2000க்கும் மேற்பட்டோர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
அவர்களுக்கு தேவையான உணவு, குடிநீர், மருத்துவம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரப்பட்டுள்ளன. காற்று 140 கிமீ வேகத்தில் அடித்தாலும் கூட, அது விட்டு விட்டு அடித்த காரணத்தால் பாதிப்புகள் ஏற்படவில்லை. மேலும் காரைக்காலில் மீன்பிடிக்கச் சென்ற அனைத்து மீனவர்களும் நேற்று மாலையே கரை திரும்பி விட்டனர் என்றும் நாராயணசாமி தெரிவித்தார்.
"அமைதியாக இருப்பதால் புயல் கரையை கடந்து விட்டது என்று யாரும் வெளியில் வர வேண்டாம். ஒருவேளை, புயலின் கண் பகுதி கடந்து கொண்டிருக்கலாம். இது அதிக பாதிப்பை ஏற்படுத்தும். எனவே, அதிகாரப்பூர்வ தகவல் வரும் வரை காத்திருக்கவும்," என்று தேசிய பேரிடர் மீட்புக் குழுவும், முதல்வர் நாராயணசாமியைப் போலவே வேண்டுகோள் விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
அதி தீவிர புயல் நிவர், புதன்கிழமை 11.30 மணி முதல் வியாழக்கிழமை 2.30 மணிக்கு இடையே தீவிர புயலாக வலுவிழந்து முழுமையாக கரையை கடந்தது என்று இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல இயக்குநர் பாலச்சந்திரன் இன்று, வியாழக்கிழமை, அதிகாலை தெரிவித்துள்ளார்.
'புயல் இன்னும் தமிழகத்திலேயே இருக்கிறது'
சென்னையில் இன்று காலை 4.15 மணியளவில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "இந்த புயல் வடக்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து அடுத்த ஆறு மணி நேரத்தில் புயலாக மேலும் வலுவிழக்கும்" என்று அவர் கூறினார்.
இதன் காரணமாக வட தமிழகத்தில் மழை பெய்யக்கூடும். பலத்த காற்றும் வீசக்கூடும். புயல் இன்னும் தமிழக பகுதியிலேயே இருக்கிறது என்று பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
நிவர் புயல் கரையைக் கடக்கும்போது தமிழகம் மற்றும் புதுச்சேரி கடலோரப் பகுதிகளில் காற்றின் வேகம் 120 - 130 கிலோ மீட்டர் வரை இருக்கும்; அது அதிகபட்சமாக 145 கிலோ மீட்டர் வரை அதிகரிக்கலாம் என்று முதலில் கணிக்கப்பட்டிருந்தது. ஆனால், புயலின் முன்பகுதி கரையைத் தொட்ட பிறகு அதன் வேகம் குறைந்து பயந்த அளவு வேகத்தில் காற்று வீசவில்லை.
சொந்த ஊருக்கு திரும்பும் சுற்றுலாவாசிகள்
நிவர் புயல் புதுச்சேரி அருகே கரையைக் கடந்ததையடுத்து, டெல்டா மாவட்டங்களில் பொதுப் போக்குவரத்தை இயக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதன்படி நாகை புதிய பேருந்து நிலையத்தில் பயணிகளின் வருகையை பொறுத்து குறைவான அளவிலான பேருந்துகள் இயக்கப்படுகிறது.
குறிப்பாக நாகை மாவட்டத்தில் கீழ்வேளூர், வேளாங்கண்ணி, வேதாரண்யம், உள்ளிட்ட பகுதிகளுக்கு மாலைமுதல் பேருந்துகள் இயக்கப்படும் என மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது. சென்னை, கோவை, மதுரை, உள்ளிட்ட புறநகர் பேருந்துகளுக்கு முன் பதிவு நடைபெற்று வருவதால், புயலுக்கு முன்னதாக நாகூர், வேளாங்கண்ணி உள்ளிட்ட பகுதிகளுக்கு சுற்றுலா வந்தவர்களுக்கு தங்களது சொந்த ஊருக்கு திரும்பி வருகின்றனர்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :