You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
லவ் ஜிகாத் புகார் வழக்குகள்: திருமணங்களில் சதி ஏதும் இல்லை என்கிறது எஸ்.ஐ.டி.
- எழுதியவர், சமீராத்மஜ் மிஷ்ரா
- பதவி, பிபிசி செய்தியாளர்
(குறிப்பு: இந்திய சட்டங்கள் எதிலும் 'லவ் ஜிஹாத்' என்ற சொல் வரையறுக்கப்படவில்லை. மத்திய அரசின் எந்த அமைப்பும், எந்த வழக்கிலும் 'லவ் ஜிஹாத்' என்ற சொல்லைக் குறிப்பிடப்படவில்லை. தனித்துவமான சூழல்களில் செய்திக்கு முன் இது போன்ற குறிப்பு வெளியிடப்படுகிறது. பல அரசியல் தலைவர்கள் இந்த சொல்லைப் பயன்படுத்துகின்றனர், ஆனால் இந்த வாக்கியம் 2020 பிப்ரவரி 4 ஆம் தேதி மக்களவையில் மத்திய உள்துறை இணை அமைச்சர் கிஷன் ரெட்டி, நட்சத்திரக் குறியிட்ட கேள்வியொன்றுக்குப் பதிலளித்த போது தெரிவித்த கருத்தாகும். )
இரு வேறு மதங்களை சேர்ந்த ஆணும் பெண்ணும் திருமணம் செய்துகொள்ளும் விவகாரம் சாதாரண சமூக நடைமுறை என்ற இருந்த நிலை மாறி, இதற்காக நீதிமன்றத்தையும் சட்டத்தையும் நாடும் நிலை வந்துள்ளது. அது மட்டுமன்றி, இது ஒரு சதிச் செயல் என்ற தோற்றமும் உருவாக்கப்படுகிறது.
உத்தரபிரதேச மாநிலம், கான்பூரில் இந்த சதிக் குற்றச்சாட்டு குறித்து விசாரிக்க ஒரு சிறப்பு விசாரணைக் குழு அதாவது எஸ்ஐடி சமீபத்தில் அமைக்கப்பட்டது. ஏறக்குறைய இரண்டு மாதங்களில் இதுபோன்ற 14 திருமணங்கள் குறித்த புகார்களை எஸ்ஐடி விசாரித்தது. அந்த திருமணங்கள் குறித்து சில அமைப்புகள் கேள்வி எழுப்பியிருந்தன. ஆனால், இதில் எந்தச் சதியும் இருப்பதாக எஸ்.ஐ.டி. சந்தேகிக்கவில்லை.
கான்பூர் மாவட்டத்தில், கட்டாயத் திருமண வழக்குகளை விசாரிக்க அமைக்கப்பட்ட எஸ்ஐடி, திங்கள்கிழமை தனது விசாரணை அறிக்கையை காவல் துறை ஐ ஜி மோஹித் அகர்வாலிடம் சமர்ப்பித்தது. மொத்தம் இதுபோன்ற 14 வழக்குகளை எஸ்ஐடி விசாரித்தது. அவற்றில், 11 வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் குற்றச் செயல்களில் ஈடுபட்டிருப்பது கண்டறியப்பட்டது. ஆனால் எந்தவொரு வழக்கிலும் சதி எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை.
"மோசடி செய்து, இந்துப் பெண்களுடன் காதல் உறவு கொண்டிருந்த 11 வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. மீதமுள்ள மூன்று வழக்குகளில், பெண்கள் தங்கள் விருப்பத்துடன் தான் திருமணம் செய்துள்ளனர். அதனால், காவல்துறை இறுதி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது." என்று கூறுகிறார் கான்பூர் மண்டல காவல் துறை ஐ ஜி மோஹித் அகர்வால்,
11 வழக்குகளில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும், குற்றம் சாட்டப்பட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் மோஹித் அகர்வால் தெரிவித்தார். "மைனர் பெண்களிடம் பொய்யான பெயர்களைக் கூறிக் காதல் வலை விரிப்பவர்கள் மீது, பாலியல் பலாத்காரம், கடத்தல் மற்றும் கட்டாயப்படுத்த திருமணம் செய்தல் ஆகிய குற்றச்சாட்டுகளும் பதியப்பட்டுள்ளன. ஆரம்பத்தில் ஆறு வழக்குகள் மட்டுமே விசாரணையில் இருந்தன, ஆனால் ஊடகங்களின் கவனத்திற்கு வந்தபிறகு இன்னும் சில வழக்குகள் வெளிச்சத்துக்கு வந்தன, பின்னர் அனைத்து விசாரணைகளும் எஸ்.ஐ.டி-யிடம் ஒப்படைக்கப்பட்டன. எஸ்.ஐ.டி விசாரணையில் சதி அல்லது வெளிநாட்டு நிதி குறித்த எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை. " என்று அவர் கூறினார்.
முன்னதாக, இந்த ஆண்டு ஆகஸ்ட்-செப்டம்பர் மாதத்தில், கான்பூரில் உள்ள சில இந்து மத அமைப்புகள், லவ் ஜிஹாத் சம்பவங்கள் நடந்திருப்பதாக மோஹித் அகர்வாலிடம் புகார் அளித்திருந்தன. ஐ.ஜி. மோஹித் அகர்வால், அவற்றை விசாரிக்க எட்டு பேர் கொண்ட எஸ்.ஐ.டி.யை அமைத்தார். எந்தவொரு பெண்ணும் சதிச் செயலுக்கு இரையாகாமல் காப்பதே காவல்துறையின் முக்கிய நோக்கம் என்றார் ஐ ஜி மோஹித் அகர்வால்.
இதற்கிடையில், லவ் ஜிகாத் என்று குற்றம்சாட்டப்படும் வழக்கில் ஒரு பெண்ணின் குடும்பத்தின் சார்பாக ஆணுக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட எஃப்.ஐ.ஆரை அலகாபாத் உயர் நீதிமன்றம் திங்கள்கிழமை ரத்து செய்தது.
உ.பி.யின் குஷி நகரில் வசிக்கும் சலாமத் அன்சாரி மற்றும் பிரியங்கா கர்வார் ஆகியோர் கடந்த ஆண்டு ஆகஸ்டில் திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்குச் சற்று முன்பு, பிரியங்கா இஸ்லாம் மத்ததை ஏற்றுக்கொண்டு தனது பெயரை 'ஆலியா' என்று மாற்றிக்கொண்டார். இந்த நிகழ்வுக்குப் பின்னால் சதித் திட்டம் இருப்பதாக சலாமத்துக்கு எதிராக, ப்ரியங்காவின் குடும்பத்தினர் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்திருந்தனர், அதில் அவர் மீது கடத்தல் மற்றும் கட்டாயத் திருமணம் ஆகிய குற்றங்கள் சாட்டப்பட்டன. போக்ஸோ சட்டத்தின் பிரிவுகளின் கீழும் சலாமத்துக்கு எதிராகக் குற்றச்சாட்டுகள் பதிவாயின.
ஆனால் முழு வழக்கையும் விசாரித்த பின்னர், நீதிமன்றம் அனைத்துக் குற்றச்சாட்டுகளையும் ரத்து செய்து, மதத்தைப் பொருட்படுத்தாமல், ஒருவருக்கு விருப்பமானவருடன் வாழும் உரிமை, வாழும் உரிமை மற்றும் தனிப்பட்ட சுதந்திரத்திற்கான அடிப்படை உரிமை என்பதில் அடங்கும் என்று கூறினார். வயது வந்த இருவர், ஒருவருக்கொருவர் மனம் ஒப்ப வாழ்ந்தால், குடும்பமோ, அரசோ, தனி நபரோ அதை ஆட்சேபிக்க உரிமை இல்லை என்று நீதிமன்றம் தெளிவாகக் கூறியது.
இந்தத் தீர்ப்பை வழங்கிய நீதிமன்றம், இதற்கு முன்னர் வழங்கப்பட்ட சில தீர்ப்புகளில், திருமணத்திற்காக மதம் மாற்றுவது தடைசெய்யப்பட்டதையும் அத்தகைய திருமணங்கள் சட்டவிரோதமானவை என்று கூறியதையும் கூட தவறென்று குறிப்பிட்டது. கடந்த மாதம்தான், அலகாபாத் உயர்நீதிமன்றம் தனது ஒரு தீர்ப்பில் திருமணத்திற்காக மதம் மாற்றுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று கூறியிருந்தது. நீதிமன்றத்தின் முந்தைய உத்தரவைச் சுட்டிக்காட்டி நீதிமன்றம் இந்த முடிவை வழங்கியது.
இருவேறு மதங்களைச் சேர்ந்த ஆண் பெண் இடையே நடக்கும் திருமணங்கள் தொடர்பாக அண்மைக் காலங்களில் நாடு முழுவதும் ஒரு விவாதம் எழுந்துள்ளது. இதை எதிர்ப்பவர்கள், முஸ்லீம் ஆண்கள் மற்றும் இந்துப் பெண்களின் திருமணங்களை ஒரு சதி என்று கூறி, அதை 'லவ் ஜிஹாத்' என்று அழைக்கின்றனர். சமீபத்தில் உத்தரபிரதேசம், மத்தியப் பிரதேசம் போன்ற பல மாநில அரசுகளும் மதம் கடந்த திருமணங்கள் குறித்து அதிருப்தி தெரிவித்ததோடு, அவற்றைத் தடுக்க புதிய சட்டத்தையும் அறிமுகப்படுத்தின.
இது தொடர்பாக தனது அரசு சட்டங்களை உருவாக்கும் என்று உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் சமீபத்தில் நடைபெற்ற சட்டமன்ற இடைத்தேர்தலின் போது அறிவித்திருந்தார். இது தொடர்பான உத்தரவுக்கு செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. இந்தச் சட்டத்தின்படி, மதம் கடந்த திருமணங்களில், திருமணத்திற்கு இரண்டு மாதங்கள் முன்பாக நோட்டீஸ் வழங்க வேண்டும், சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியாளரின் அனுமதியைப் பெற வேண்டும். மசோதாவின் வரைவின் கீழ், தகவல்களை மறைத்து அல்லது தவறான தகவல்களை வழங்கித் திருமணம் செய்து கொள்ளும் குற்றத்துக்கு அதிகபட்சமாக 10 ஆண்டுகள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
ஒரு சட்டம் உருவாக்கப்பட வேண்டிய அளவுக்கு, அதுவும், சட்டமன்றக் கூட்டத்தொடருக்குக் காத்திருக்காமல் உடனடியாக அவசரச் சட்டத்தைக் கொண்டுவர வேண்டிய அளவுக்கு இது முக்கியமான ஒரு பிரச்சனையா என்ற கேள்விகளும் எழுகின்றன.
உத்தரப்பிரதேச காவல் துறை இயக்குநராக இருந்த ஓய்வு பெற்ற ஐ.பி.எஸ் அதிகாரி விக்ரம் சிங், "சட்டவிரோதமாகத் திருமணம் செய்து கொள்வதற்கோ அல்லது மதம் மாற்றுவதற்கோ எதிராக இந்திய தண்டனைச் சட்டத்தில் பிரிவுகள் இருப்பதாகத் தெரியவில்லை. இந்தச் சட்டம் 1861 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டிருக்கலாம்.
ஆனால் கற்பனை செய்யப்படக்கூடிய அனைத்துக் குற்றங்களுக்குமான தண்டனைகள் அதில் இருக்கின்றன. சட்டம் சரியாகச் செயல்படுத்தப்படாவிட்டால், அதை மேம்படுத்த முயற்சிக்க வேண்டும். புதிய சட்டத்தைக் கொண்டுவருவதன் மூலம் என்ன நடக்கும்? தற்போதுள்ள சட்டங்களைச் செயல்படுத்தப்படுவதே பெரிய சவாலாக இருக்கும் நேரத்தில், புதிய சட்டம் என்ன சாதித்துவிடப் போகிறது." என்று கேள்வி எழுப்புகிறார்.
புதிய சட்டத்தில் சில விஷயங்கள் மட்டுமே சேர்க்கப்பட்டுள்ளன என்று கூறும் விக்ரம் சிங், சட்டவிரோத மதமாற்றங்கள், கட்டாயத் திருமணம் அல்லது உண்மைகளை மறைத்துத் திருமணம் போன்ற குற்றங்களைக் கையாள பல சட்டங்கள் ஏற்கனவே நடைமுறையில் உள்ளன. பிரச்சினை சட்டம் குறித்ததல்ல, அதன் அமலாக்கம் குறித்தது என்று கூறுகிறார்.
பிபிசியுடனான உரையாடலில், விக்ரம் சிங், "நிர்பயா விஷயத்தை எடுத்துக் கொள்ளுங்கள். அதன்பிறகு இந்திய தண்டனைச் சட்டப் பிரிவுகளில் எத்தனை மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. ஆனால் பாலியல் வல்லுறவு சம்பவங்கள் குறைந்துவிட்டனவா? செயல்பாடு முறையாக நடந்திருந்தால் குறைந்திருக்கும். நீதிமன்றம் தண்டனை வழங்கியிருந்தால் குறைந்திருக்கும்.
குற்றம் நிரூபிக்கப்படுவது குறைந்து வருகிறது. லவ் ஜிஹாத் குறித்த தரவு எதுவும் எங்களிடம் இல்லை என்று அரசாங்கம் கூறுகிறது. தரவு இல்லாதபோது, சட்டம் என்ன செய்யும்? அவசர சட்டத்தை கொண்டு வருவதற்கு முன்பு அதற்கான ஆய்வுகள் செய்யப்பட்டிருக்க வேண்டும். முதலில் சிக்கலைப் புரிந்து கொண்டு, பின்னர் ஒரு சட்டத்தை உருவாக்குங்கள், அது நன்றாக இருக்கும்." என்று அரசைச் சாடுகிறார்.
புதிய சட்டம், சட்டவிரோதமாக மதமாற்றம் செய்வதற்கு ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கிறது, ஆனால் பாதிக்கப்பட்டவர் பதினெட்டு வயதுக்குட்பட்டவராகவோ பட்டியலின / பழங்குடியினர் ஆகவோ இருந்தால், தண்டனை பத்து ஆண்டுகள் ஆகும். விக்ரம் சிங் இதுவும் தவறு என்கிறார். "சாதி மற்றும் மதத்தின் பெயர் சட்டத்தில் சேர்க்கப்படாமல் இருப்பது தான் நல்லது. சட்டம் அனைவருக்கும் சமம், பாதிக்கப்பட்டவர் யாராக இருந்தாலும் சட்டத்தை மீறுபவருக்கு எதிராக ஒரே தண்டனை மட்டுமே இருக்க வேண்டும்,." என்று கூறுகிறார் அவர்.
அரசியல் நோக்கர்களும் அவசரச் சட்டம் கொண்டுவர என்ன தேவை என்று வியக்கிறார்கள். மூத்த ஊடகவியலாளர் சுபாஷ் மிஸ்ரா கூறுகையில், "20 கோடி மக்கள் தொகையில் ஆண்டுக்கு 100 வழக்குகள் கூட இல்லை. எனவே இதற்காக ஒரு சட்டத்தைக் கொண்டு வருவது ஆச்சரியமாக இருக்கிறது.
உண்மையில், இதன் பின்னணியில் உள்ள நோக்கம் அரசியல் ஆதாயம் மட்டுமேயன்றி, சமூக, சட்டத் தேவைகள் ஏதுமில்லை. உண்மையில், தேர்தல் வெற்றிக்கு இதுபோன்ற சட்டங்கள் உதவலாம். மற்றபடி, இதற்கு எந்தவிதமான தேவையோ தரவோ இல்லை. அரசின் இந்த முடிவை அரசின் அமைப்பான எஸ் ஐ டி-யே நிராகரித்துவிட்டது. இந்த வழக்குகளில் எந்தச் சதியும் இல்லை என்று கான்பூரில் உள்ள எஸ்ஐடி கூறியுள்ளது.
நகரங்களின் பெயர்களை மாற்றுவதிலும் குடியுரிமைச் சட்ட எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களின் போது எடுக்கப்பட்ட விரைவான நடவடிக்கைகளிலும் சுபாஷ் மிஸ்ரா இதே நோக்கத்தைத் தான் குறிப்பிடுகிறார். அரசாங்கத்தின் இந்த முடிவுகளுக்குப் பின்னால் உள்ள நோக்கம் 'செய்தியைத் தெரியப்படுத்துவது' மட்டுமே, வேறு ஒன்றும் இல்லை என்று அவர் கூறுகிறார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :