You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
"ஜம்மு காஷ்மீர் கொடியை ஏற்றும்வரை போராடுவோம்" - சூளுரைத்த மெஹ்பூபா முஃப்தி
- எழுதியவர், ரியாஸ் மஸ்ரூர்
- பதவி, பிபிசி, ஸ்ரீநகர்
ஜம்மு காஷ்மீர் கொடியை தாய் மண்ணில் பறக்க விடும்வரை போராடுவோம். அதுவரை வேறு எந்த கொடியையும் ஏற்ற மாட்டோம் என்று ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வரும் மக்கள் ஜனநாயக கட்சித் தலைவருமான மெஹ்பூபா முஃப்தி தெரிவித்துள்ளார்.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் இரண்டாக பிரிக்கப்பட்ட நடவடிக்கையையொட்டி, கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் தொடங்கி, 14 மாதங்களாக வீட்டுக் காவலில் வைக்கப்பட்டிருந்த மெஹ்பூபா முஃப்தி, கடந்த 14ஆம் தேதி விடுவிக்கப்பட்டார்.
இந்த நிலையில் செய்தியாளர்களை அவரது இல்லத்தில் வெள்ளிக்கிழமை (அக்டோபர் 23) மெஹ்பூபா முஃப்தி சந்தித்தார்.
அப்போது அவர், தனது மேஜை மீதிருந்த தேசிய மூவர்ண கொடியை காண்பித்து, "இந்த கொடியை ஏற்றும் காலம் வரும்போது நாங்கள் மூவர்ண கொடியை ஏற்றுவோம். அதுவரை எந்தவொரு கொடியையும் ஏற்ற மாட்டோம். அதுவரை நாங்கள் தொடர்ந்து போராடுவோம்" என்று தெரிவித்தார்.
காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வகை செய்யும் இந்திய அரசியலமைப்பின் 370ஆவது விதி ரத்து செய்யப்பட்ட நடவடிக்கையைத் தொடர்ந்து, அரசு தலைமைச் செயலகம் மற்றும் அரசு கட்டடங்களில் தேசிய மூவர்ண கொடியுடன் அதுவரை ஏற்றப்பட்டு வந்த ஜம்மு காஷ்மீர் கொடி அகற்றப்பட்டது. அந்த கொடி, 1952ஆம் ஆண்டு ஜூன் 7ஆம் தேதி ஜம்மு காஷ்மீருக்கான மாநில பேரவையால் அங்கீகரிக்கப்பட்டிருந்தது. அதில் இடம்பெற்ற மூன்று கோடுகள், ஜம்மு, காஷ்மீர், லடாக் ஆகியவற்றை குறிக்கும் வகையில் இருந்தன.
ஜம்மு காஷ்மீருக்கான பகுதியளவு சுயாதீன உரிமையை முடிவுக்கு கொண்டு வந்த பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான மத்திய அரசின் நடவடிக்கை, இரண்டு யூனியன் பிரதேசத்தை உருவாக்கி சாதாரண காஷ்மீரிகளை உளவியல் அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது என்று மெஹ்பூபா குறிப்பிட்டார்.
இந்தியாவில் பல்வேறு அவசர பிரச்னைகள் நிலவும் வேளையில், அவற்றை தீர்க்கும் நடவடிக்கையில் மோதி அரசு தோல்வி அடைந்து விட்டதாக அவர் குற்றம்சாட்டினார்.
பொருளாதாரத்தை கையாளத் தவறியதும், மக்களுக்கு அதிகாரமளிக்க தவறியதும் தொடர்ந்த வேளையில், அவற்றை மறைக்க சிறுபான்மையினரையும் காஷ்மீரையும் மத்திய அரசு இலக்கு வைத்ததாக மெஹ்பூபா தெரிவித்தார்.
காஷ்மீர் பிரச்னைகள் தீர்க்கப்படாமல் போனால் அதன் தாக்கம் மிகக் கடுமையாக இருக்கும் என்று அவர் எச்சரித்தார்.
எனது தந்தை முஃப்தி சயீத், காஷ்மீர் பிரச்னைக்கான அமைதி வழி தீர்வு குறித்து கனவு கண்டார். ஆனால், மத்திய அரசோ, பூனை முன்பாக நின்று கொண்டு ஒரு புறா கண்ணை மூடிக்கொண்டு இருப்பது போல இருக்கிறது. கண்ணை மூடினால், பூனை புறாவை கவ்வும். அதுபோலத்தான் காஷ்மீர் பிரச்னையும் தீர்க்கப்பட வேண்டியது அவசியம்.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் 5ஆம் தேதிவரை ஜம்மு காஷ்மீர் மீது இந்திய அரசுக்கு கணிசமான அளவுக்கு கட்டுப்பாடு இருந்தது. ஆனால், எங்களை அவமானப்படுத்திய அரசுக்கு, எங்களுடைய நிலம் மட்டுமே முக்கியமாகப்பட்டதே தவிர, எங்களுடைய மக்களை அது கண்டுகொள்ளவேயில்லை. அமைதி, மதிப்புக்காக லட்சக்கணக்கானோர் இந்த மண்ணில் உயிரை விட்டுள்ளனர். அவர்களின் தியாகம் வீணாக விடமாட்டோம் என்று மெஹ்பூபா முஃப்தி கூறினார்.
ஜம்மு காஷ்மீருக்கு அரசியலமைப்பு சுயாதீனம் திரும்பக் கிடைப்பது என்பது, அரசியல் யுத்தமாக மாறி விட்டது. இந்த யுத்தம் நீளமானது. இப்போது அரசியல் கட்சிகள் இந்த நோக்கத்துக்காக ஒன்றிணைந்து வருகின்றன. இந்த யுத்தத்தை இங்குள்ள கட்சிகள் இணைந்து முன்னெடுப்போம் என்று மெஹ்பூபா தெரிவித்தார்.
பிற செய்திகள்:
- சீனாவில் இருந்து காற்று வழி வரும் மஞ்சள் தூசு: கொரோனா பரவலாம் என அஞ்சும் வட கொரியா
- குஷ்பு Vs திருமாவளவன்: மன்னிப்பு கோரும் பாஜக; போராட்டம் அறிவித்த விடுதலை சிறுத்தைகள்
- அமெரிக்க அதிபர் தேர்தல்: டிரம்பின் காற்று மாசு கருத்தால் கொந்தளிக்கும் இந்தியர்கள்
- 7.5% இடஒதுக்கீடு: ஆளுநர் பதிலை மறைத்தது ஏன்? அமைச்சர் ஜெயக்குமார் புதிய விளக்கம்
- தென் கொரியாவில் 32 பேர் திடீர் மரணம் - தடுப்பூசி காரணமா?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: