You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
இந்திய ஸ்டேட் வங்கி கிளார்க் பணியிட ஒதுக்கீடு: அரசுக்கு மதுரை எம்.பி எழுப்பும் சந்தேகங்கள்
இந்திய ஸ்டேட் வங்கி "கிளார்க்" பணியிடங்களுக்கான ஆரம்பநிலைத் தேர்வு முடிவுகள் புதன்கிழமை வெளியான நிலையில், அதில் கடைப்பிடிக்கப்பட்ட இடஒதுக்கீடு குறித்து மதுரை தொகுதி மக்களவை உறுப்பினர் சு. வெங்கடேசன் சில சந்தேகங்களை எழுப்பியிருக்கிறார்.
சந்தேகம் எழுப்பும் கட் ஆஃப்
இது தொடர்பாக அவர் இந்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சர் தாவர்சந்த் கெலாட்டுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
அதில், இந்திய ஸ்டேட் வங்கி கிளார்க் பணியிடங்களுக்கான ஒவ்வொரு பொது மற்றும் இடஒதுக்கீட்டு பிரிவினருக்கான கட் ஆஃப் மதிப்பெண்கள் வெளியிடப்பட்டுள்ளன. அது பல கேள்விகளை எழுப்புகிறது என்று கூறியுள்ளார்.
பொதுப் பிரிவினர்க்கான கட் ஆஃப் 62 எனவும், ஓ.பி.சி, எஸ்.சி பிரிவினர்க்கும் அதே 62 மதிப்பெண்களே கட் ஆஃப் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
எஸ்.டி பிரிவினர் கட் ஆஃப் 59.5 ஆகும். அதை விட பொருளாதார ரீதியாகப் பின் தங்கியோர் (EWS) கட் ஆஃப் குறைவாக அதாவது 57.75 ஆக உள்ளது. இந்த கட் ஆஃப் விவரங்கள் சமுக யதாரத்தங்களோடு பொருந்துவதாக இல்லாததால், இட ஒதுக்கீடு முறையாக அமலாகிறதா என்ற கேள்வி இயல்பாகவே எழுகிறது.
எல்லோரின் கட் ஆஃப் விவரங்களும் தேர்வு பெற்றவர்களின் பட்டியலுடன் வெளியிடப்படாததால் இட ஒதுக்கீடு அமலாகிறதா என்பதற்கான சமூக தணிக்கைக்கான வாய்ப்பின்றி உள்ளது.
அமைச்சருக்கு எழுப்பிய கேள்விகள்
இந்த தேர்வுகள் இந்திய வங்கிப் பணிகள் சேவை (IBPS) என்ற அமைப்பின் வாயிலாக நடத்தப்பட்டு வங்கிகளுக்கு தேர்வு பெற்றோர் பட்டியல் வழங்கப்படுகிறது. அந்த அமைப்பும் தகவல் உரிமைச் சட்டம் உள்ளிட்ட சமூக கண்காணிப்பிற்கு உட்பட்டதில்லை என்று கூறப்படுகிறது. அரசின் ஆணைகளைக் கடைப்பிடிக்க வேண்டிய எந்தவொரு அமைப்பும் இப்படி சமூகக் கண்காணிப்பிற்கு அப்பாற்பட்டதாக எப்படி இருக்க முடியும்? இதோ விடை கோரும் கேள்விகள் என்று குறிப்பிட்டு அவற்றை சு. வெங்கடேசன் பட்டியலிட்டுள்ளார்.
1) ஏன் தேர்வு பெற்றவர்களின் பட்டியல் முழுமையாக ஒவ்வொரு தனியரின் கட் ஆஃப் மதிப்பெண்களோடும், அவர்கள் சார்ந்துள்ள பிரிவு விவரங்களோடும் பொதுவில் வெளியிடக்கூடாது?
2) பொதுப் பட்டியல் என்பது இடஒதுக்கீட்டுப் பிரிவினரையும் உள்ளடக்கியதுதான்; அவர்கள் பொதுப் பட்டியல் கட் ஆஃப் மதிப்பெண்களுக்கு மேலாகப் பெறும் போது பொதுப் பட்டியலில் இடம் பெறுவார்கள் என்ற நெறி கடைப்பிடிக்கப்பட்டுள்ளதா?
3) மேற்கூறிய கேள்விக்கான விடை 'ஆம்' எனில், எவ்வாறு பொது, ஓ.பி.சி, எஸ்.சி பிரிவினர் கட் ஆஃப் ஒரே அளவில் உள்ளன?
4) தற்போது வெளியிடப்பட்டுள்ள பட்டியலில் "பொதுப் பிரிவில்" எவ்வளவு ஓ.பி.சி, எஸ்.சி, எஸ்.டி, இ.டபிள்யூ.எஸ் பிரிவை சார்ந்தவர்கள் இடம் பெற்றுள்ளனர்?
5) இட ஒதுக்கீட்டுப் பிரிவில் தேர்வு பெற்றவர்களின் கட் ஆஃப் எதில் துவங்கி எதில் முடிவடைகிறது?
6) இ.டபிள்யூ.எஸ் பிரிவின் கட் ஆஃப், எஸ்.டி கட் ஆஃப் ஐ விடக் குறைவாக உள்ளது. எவ்வளவு இ.டபிள்யூ.எஸ் பிரிவைச் சேர்ந்தவர்கள் தேர்வில் இடம் பெற்றனர்? எவ்வளவு பேர் துவக்க நிலைத் தேர்வில் வெற்றி பெற்றுள்ளனர்?
7) ஒவ்வோர் இட ஒதுக்கீடு பிரிவு மற்றும் இட ஒதுக்கிட்டு பிரிவை சாராதவர்கள் தேர்வில் இடம் பெற்றனர்? எவ்வளவு பேர் துவக்க நிலைத் தேர்வில் வெற்றி பெற்றுள்ளனர்? பிரிவு வாரியாக விவரங்கள் வேண்டும்.
8) இட ஒதுக்கீட்டுப் பிரிவினர் பொதுப் பட்டியலில் இடம் பெறுவதற்கு என்ன விதிகள் பின்பற்றப்படுகின்றன?
இக் கேள்விகளுக்கெல்லாம் விடைகள் தேவைப்படுகின்றன. இட ஒதுக்கீடு அமலாக்கம் பற்றி வெளிப்படையான அணுகுமுறையும், சமூகத் தணிக்கையும் உறுதி செய்யப்பட வேண்டும்.
இது சம்பந்தமாக இந்திய சமூகநீதி மற்றும் அதிகாரம் வழங்கல் துறை மற்றும் இந்திய நிதித்துறை அமைச்சகத்தின் பதிலை எதிர்பார்க்கிறேன் என்று அந்த கிடத்தில் சு. வெங்கடேசன் கூறியுள்ளார்.
பிற செய்திகள்:
- ராணுவ பயிற்சிக்காக கைகோர்த்த 4 நாடுகள்: சீனாவுக்கு கவலை ஏன்?
- "எல்டிடிஈ வெளிநாட்டு செல்வாக்கை நிரூபிக்க ஆதாரம் உள்ளது" - உறுதிகாட்டும் இலங்கை அரசு
- கொரோனா தொற்று, மரணம்: இந்தியாவின் நிலை குறித்த மோதியின் கூற்றுகளில் எவ்வளவு உண்மை?
- மகாராஷ்டிராவில் சிபிஐக்கு திடீர் கட்டுப்பாடு: சுஷாந்த் சிங், டிஆர்பி மோசடி விசாரணைக்கு தடங்கலா?
- ஆசியாவில் இதுவரை இல்லாத பொருளாதார மந்தநிலை: எப்போது மாறும் இந்த நிலை?
- கார்கில் போருக்கு செயற்கைக்கோள் வடிவமைத்த தமிழ் பெண் விஞ்ஞானி
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: