பறக்கும் விமானத்தில் பிறந்த குழந்தை: எப்படி நடந்தது அந்த `அதிசயம்` - மருத்துவரின் ஆச்சரிய அனுபவம்

இன்று யோசித்து பார்த்தால் அதுகுறித்து மலைப்பாகதான் உள்ளது. ஆம் பறக்கும் விமானத்தில் இந்தியாவில் முதன்முதலாக பெண் ஒருவருக்கு பிரசவம் நடந்துள்ளது. படத்தில் உள்ள இந்த மருத்துவர்தான் பிரசவம் பார்த்தவர்.

அவருக்கு கத்தரிக்கோல், சானிடைசர், துணி, எல்லாம் கிடைத்ததுதான் ஆனால் யோசித்துபார்த்தால் இது ஆச்சரியமான ஒரு விஷயம்தான் என்கிறார் அவர். பிபிசி செய்தியாளர் இம்ரான் குரேஷி மருத்துவர் ஷைலஜா வல்லபாநேனியை தொடர்பு கொண்டு பேசினார்.

விமானத்தில் இருந்த பயணிகள் அவருக்கு தொடர்ந்து உதவிபுரிந்தனர். துண்டு, டயஃபர், என தேவையான பொருட்களை வழங்கினர், பிரசவத்திற்கு பிறகு தாயை மேல் தூக்கி படுக்க வைக்க பைகள் என அனைத்தும் வழங்கினர். பிளாஸ்டிக் சர்ஜரியன் ஒருவரும் உதவி புரிந்தார்.

"நான் இதை செய்தேன் என என்னால் இன்னும் நம்பமுடியவில்லை." என்கிறார் மருத்துவர் ஷைலஜா வல்லபாநேனி. இவர்தான் இரு தினங்களுக்கு முன் டெல்லியிலிருந்து பெங்களூரு சென்ற விமானத்தில் பெண்ணிற்கு பிரசவம் பார்த்தவர்.

இம்மாதிரியான அவசரநிலைகளில் உதவும் கிட்டுகள் விமானத்தில் இல்லை என்பது ஷைலஜாவிற்கு மேலும் ஆச்சரியத்தை கொடுத்தது. "விமானத்தில் முதலுதவி பெட்டி இருப்பதுபோல பிரசவக் காலத்திற்கு உதவும் ஒரு பெட்டியும் இருக்க வேண்டும்," என்கிறார் அவர்.

என்ன நடந்தது?

டெல்லியிலிருந்து கிளம்பிய அரை மணி நேரத்தில் மருத்துவர் யாரேனும் உள்ளனரா என்று கேட்கப்பட்டது. ரியாத்தை சேர்ந்த `பிளாஸ்டிக் சர்ஜியன்` நாகராஜ், உதவ முன் வந்தார். "அவருக்கு ஏதேனும் உதவி தேவையா என நான் அங்கு சென்று பார்த்தேன். அப்போதுதான் விமானப் பணிப்பெண் அந்த பயணி கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்தார்," என்கிறார் ஷைலஜா.

முதலில் அந்த பயணி வயிற்றுவலி என்று கூறியதால் இது கருக்கலைப்பாக இருக்கலாம் என மருத்துவர் ஷைலஜா நினைத்துள்ளார். "நான் அவரின் வயிற்றை பார்த்தேன். அவர் 32-34 வாரங்கள் கர்ப்பமாக இருப்பதுபோல தோன்றியது. அவர் கழிவறைக்கு சென்று வந்ததாகவும், ரத்தம் வருவதை பார்த்ததாகவும் எனக்கு தெரிவித்தார்,"

அதன்பிறகு அந்த மருத்துவர் அந்த பயணியை அழைத்துக் கொண்டு கழிவறைக்கு சென்றார். அப்போது குழந்தை தொப்புள் கொடியுடன் வெளியே வருவதை கண்டுள்ளார். "நான் தொப்புள் கொடியை அறுப்பதற்கு முன் அதை சானிடைசர் கொண்டு சுத்தம் செய்தேன். துண்டை கொண்டு அதை மறைத்தேன். அதன்பின் பயணிகள் வழங்கிய துணியை கொண்டு குழந்தையை சுற்றினேன்," என்கிறார் மருத்துவர் ஷைலஜா.

அதன்பிறகு, "பிரசவித்த தாய்க்கு கர்ப்பையை மசாஜ் செய்தேன். அதிர்ஷ்டவசமாக இரு ஊசிகள் இருந்தன. கர்ப்ப்ப்பையிலிருந்து ரத்தம் நின்று சுருங்க தொடங்கியது. தாய் குழந்தைக்கு பால் கொடுத்தார். கருப்பை சுருங்குவதற்கு அதுவும் உதவி செய்த்து."

"விமானி என்னிடம் விமாத்தை ஐதராபாத்தில் நிறுத்த வேண்டுமா என கேட்டார். ஆனால் தாயும், சேயும் நன்றாக உள்ளதால் அதற்கு அவசியம் இல்லை என தெரிவித்தேன் என்கிறார் ஷைலஜா.

அது சுகப்பிரசவமா?

"அது சுகப்பிரசவம். இல்லை என்றால் பறக்கும் விமானத்தில் இது நடந்திருக்காது. தலை ஏற்கனவே வெளியே வந்ததால் என்னால் உதவி செய்ய முடிந்தது," என்கிறார் மருத்துவர் ஷைலஜா.

எனவேதான் ஷைலஜா பிரசவத்திற்கான கிட்டுகள் விமானத்தில் இருக்க வேண்டும் என்கிறார். "விமானப் பயணியாளர்கள் பிரசவம் பார்க்கும் அளவிற்கு தெரிந்து வைத்திருக்க வேண்டும் என்று சொல்லவில்லை. ஆனால் சில ஆண்டிசெப்டிக் மருந்துகளோ அல்லது ரத்தப்போக்கை தடுக்கும் மருந்துகளோ இருக்க வேண்டும் என்று சொல்கிறேன். பிரசவிக்கும் சூழல் ஏற்பட்டால் செய்ய வேண்டிய நடைமுறைகளும் வகுக்கப்பட வேண்டும்," என்கிறார் ஷைலஜா.

"அந்த சமயத்தில் நான் என்ன செய்கிறோம் என்பதை பொறுத்துதான் எல்லாம் அமையும். குழந்தையும், தாயையும் காக்க என்ன செய்ய வேண்டும் என்பது குறித்தே நான் யோசித்தேன். என்ன கிடைத்ததோ அதை பயன்படுத்தினேன்," என்கிறார்.

மருத்துவர் ஷைலஜா தற்போது சிசு மருத்துவராக இருந்து வருகிறார். அதற்கு முன்பு 10 வருடங்களாக மகப்பேறு மருத்துவம் பார்த்து வந்தார்.

பயணத்திற்கு பிறகு அவர்கள் அழைத்து செல்லப்பட்ட மருத்துவரிடமிருந்து எனக்கு அழைப்பு வந்தது அவர்கள் நலமாக உள்ளதாக தெரிவித்தனர் என்கிறார் மருத்துவர் ஷைலஜா.

சட்டென எல்லாம் மாறியது

பிரசவம் நடந்த விமானத்தின் விமானியாக செயல்பட்டது ஓய்வு பெற்ற விங் கமாண்டர் மிஷ்ரா. பறக்கும் விமானத்தில் அடுத்தடுத்த நடந்த நிகழ்வுகள் தனது முடிவெடுக்கும் திறனுக்கான சோதனையாக அமைந்தது என்று அவர் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் இதுகுறித்து கருத்துத் தெரிவித்துள்ள விமானி மிஸ்ரா, "கர்ப்பிணியான அந்த பயணிக்கு ரத்தப்போக்கு ஏற்பட்டதை தொடர்ந்து அவரது கரு கலைந்துவிட்டதாக அதிர்ச்சியளிக்கும் செய்தியை என்னிடம் கூறினர். உடனே விமானத்தின் குறிப்பிட்ட பகுதியை மகப்பேறு அறையாக மாற்றுவதற்கு விமானப் பணியாளர்கள் திறம்பட பங்களித்தனர். "

"அவருக்கு விமானத்தில் இருந்த மற்றவர்கள் பெரும் உதவி செய்தனர். நான் அடுத்து என்ன செய்வதென்று முடிவெடுப்பதற்காக மருத்துவர்களிடமிருந்து தகவலை எதிர்நோக்கி இருந்தேன். இந்த வருத்தமளிக்கும் செய்தியைப் பற்றி நான் முணுமுணுத்துக் கொண்டிருந்தபோது திடீரென விமானத்தில் பயணிகள் அமர்ந்திருந்த பகுதியில் சத்தம் அதிகரித்ததையும், அதைத்தொடர்ந்து கைத்தட்டல் ஒலியையும் பிறந்த குழந்தையின் அழுகுரலையும் கேட்டேன். ஆழ்ந்த சோக உணர்விலிருந்த மனது, ஆழ்ந்த மகிழ்ச்சிக்கு மாறியது. வாழ்க்கையில் அதிர்ஷ்டங்கள் இவ்வளவு விரைவாக நடந்ததை நான் ஒருபோதும் கண்டதில்லை," என்று அவர் தெரிவித்துள்ளார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: