You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
எம்.எல்.ஏவை மணந்த சௌந்தர்யா கணவருடன் செல்ல சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி
கள்ளக்குறிச்சி தொகுதியின் அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் பிரபுவை மணந்த சௌந்தர்யா அவரது கணவருடன் செல்லலாம் என சென்னை உயர்நீதிமன்றம் அனுமதித்துள்ளது.
கள்ளக்குறிச்சி தொகுதியின் அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் பிரபு தியாகதுருகத்தைச் சேர்ந்த சாமிநாதன் என்பவரது மகள் சௌந்தர்யாவைத் திருமணம் செய்து கொண்டார். இதற்கு சௌந்தர்யாவின் பெற்றோர் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர்.
இதையடுத்து, சௌந்தர்யாவின் தந்தை சாமிநாதன் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். அதில், இந்த விவகாரம் தொடர்பாக காவல்துறையில் புகார் அளித்தபோதும் அவர்கள் எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால், தனது மகளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உத்தரவிட வேண்டும் எனக் கோரியிருந்தார்.
இந்த வழக்கு நேற்று நீதிபதி சுந்தரேஷ் முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி சம்பந்தப்பட்ட இளம் பெண் சௌந்தர்யாவை வெள்ளிக்கிழமையன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும்படி காவல் துறையினரிடம் தெரிவித்தார். வழக்குத் தொடர்ந்த சௌந்தர்யாவின் தந்தையும் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டுமெனவும் உத்தரவிடப்பட்டிருந்தது.
இந்த வழக்கு இன்று மீண்டும் நீதிபதி எம்.எம். சுந்தரேஷ் - கிருஷ்ணகுமார் அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது தியாகதுருகம் காவல்துறையினர் சௌந்தர்யாவையும் சாமிநாதனையும் தனித்தனியாக ஆஜர்படுத்தினர். நீதிபதி இருவரிடமும் தனித்தனியாக விசாரணை நடத்தினார்.
சௌந்தர்யாவிடம், "பிரபு உங்களை வலியுறுத்தி திருமணம் செய்துகொண்டிருக்கிறாரா, உங்கள் தந்தை கூறியிருக்கும் குற்றச்சாட்டுகள் குறித்து நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?" என்பதுபோன்ற கேள்விகள் எழுப்பப்பட்டன. இதற்குப் பிறகு வழக்கின் விசாரணை சிறிது நேரத்திற்கு ஒத்திவைக்கப்பட்டது.
பிறகு இந்த வழக்கில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. சௌந்தர்யா 18 வயது நிரம்பியவர் என்பதாலும் தன்னை யாரும் கட்டாயமாக, வலியுறுத்தி திருமணம் செய்யவில்லை என்று கூறுவதாலும் பிரபுவுடன் செல்ல நீதிமன்றம் அனுமதி அளித்து, வழக்கை முடித்துவைத்தது.
இதற்குப் பிறகு நீதிமன்ற வளாகத்திலேயே செய்தியாளர்களிடம் பேசினார், சௌந்தர்யாவின் தந்தை சாமிநாதன். "நீதிபதிகள் இருவரிடமும் விசாரணை நடத்திய பிறகு, என் பெண்ணிடம் பேசிப்பார்க்கும்படி சொன்னார்கள். நான் என் மகளிடம் சென்று 'நான் உனக்கு திருமணம் செய்துவைக்க மாட்டேனா? உன்னைப் படிக்க வைத்திருக்கிறேன். உன் எதிர்காலத்தை தீர்மானிக்கும் உரிமை எனக்கு இல்லையா?' என்று கேட்டேன். ஆனால், நான் பேசியதை என் பெண் காது கொடுத்தே கேட்கவில்லை. அந்த அளவுக்கு மூளைச் சலவை செய்திருக்கிறார்கள்" என்று தெரிவித்தார்.
மேலும், "வயது வித்தியாசம்தான் இதில் முக்கியமான பிரச்சனை என்று நீதிபதியிடம் தெரிவித்தேன். ஆனால், திருமணம் நடந்துவிட்டது. இனி சட்டப்படிதான் செய்யமுடியும் என நீதிபதிகள் தெரிவித்தனர். பிரபு நான்கு வருடங்களுக்கு முன்பே என் பெண்ணைக் காதலித்ததாக சொல்லியிருக்கிறார். அப்படியானால் என் பெண்ணுக்கு 15 வயது இருக்கும்போது காதலித்தாரா? பிரபு என் வீட்டில்தான் வளர்ந்தார். என்னை அப்பா என்றும் என் மனைவியை அம்மா என்றும்தான் அழைப்பார். அப்படியானால் என் மகள் அவருக்கு தங்கைதானே வேண்டும்? ஆனால், அவர் இந்த வாதங்களுக்கு செவிகொடுக்கவில்லை. அவருடைய தந்தை வழக்கு போட வேண்டாம் என்று சொல்லி, எனக்கு பணம் கொடுப்பதாகச் சொன்னார். எனக்கு என் குழந்தையின் எதிர்காலம்தான் முக்கியம். பணம் வேண்டாம் என்று சொல்லிவிட்டேன்" என்றும் சாமிநாதன் தெரிவித்தார்.
தன் மகள் 15 வயதாக இருக்கும்போதே காதலித்தது தொடர்பாக பிரபு மீது புகார் கொடுக்கவிருப்பதாகவும் சாமிநாதன் தெரிவித்தார்.
பிற செய்திகள்:
- நிலக்கரி சுரங்கங்களை தனியாரிடம் ஒப்படைக்கும் மத்திய அரசு - இந்தியா எப்படி சமாளிக்கும்?
- தொல்லியல் படிப்புக்கான தகுதியில் தமிழ் உள்ளிட்ட செம்மொழிகள் சேர்ப்பு
- ஹாத்ரஸ் சம்பவம்: கொலைவெறி தாக்குதல், நள்ளிரவில் தகனம், முகத்தைக்கூட பார்க்காமல் தவித்த குடும்பம்
- பீமா கோரேகான் வழக்கில் 83 வயது பழங்குடியின நல ஆர்வலர் ஸ்டேன் ஸ்வாமி கைது
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: