You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
வெங்கய்ய நாயுடுக்கு கொரோனா வைரஸ்: அறிகுறியில்லாததால் வீட்டுத் தனிமையில் இருப்பதாக அறிவிப்பு
இந்திய குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடுக்கு (71) கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த தகவல் அவரது அதிகாரப்பூர்வ பதவிக்குரிய டிவிட்டர் பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதில், குடியரசு துணைத் தலைவர் வழக்கமான கோவிட்-19 வைரஸ் பரிசோதனைக்கு இன்று காலை உட்படுத்திக் கொண்டார். அதில் "அவருக்கு வைரஸ் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. எனினும், அவருக்கு வைரஸ் அறிகுறியேதும் இல்லாத நிலையில், நல்ல உடல்நலத்துடன் இருக்கிறார். அவர் வீட்டுத் தனிமைக்கு உட்படுத்திக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. அவரது மனைவி உஷா நாயுடுக்கு வைரஸ் பரிசோதனையில் நெகட்டிவ் என வந்துள்ளது. அவரும் சுய தனிமைக்கு உட்படுத்திக் கொண்டுள்ளார்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாநிலங்களவை தலைவரான வெங்கய்ய நாயுடு சமீபத்தில் நடந்து முடிந்த நாடாளுமன்ற மாநிலங்களவை கூட்டத்தொடரில் தினமும் முதல் பகுதியை அவரே வழிநடத்தினார்.
நாடாளுமன்ற கூட்டத்தொடரில் பங்கேற்ற 25க்கும் அதிகமான எம்.பி.க்களுக்கு ஏற்கெனவே கொரோனா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டது.
இந்த நிலையில், திட்டமிட்ட காலத்துக்கு முன்பே நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் முடித்துக் கொள்ளப்பட்டது.
முன்னதாக, பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் உமா பாரதி தனக்கு கொரோனா வைரஸ் இருப்பது பரிசோதனையில் நேற்றிரவு உறுதியானதாக தெரிவித்துள்ளார். தன்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் அனைவரும் பரிசோதனை செய்து கொண்டு தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
ஹரித்வார், ரிஷிகேஷ் இடையே உள்ள வந்தே மாதரம் குஞ்ச் என்ற இடத்தில் தான் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். அடுத்த நான்கு நாட்களுக்குப்பிறகு மீண்டும் கொரோனா பரிசோதனை செய்து கொண்டு நிலைமை சரியாகாமல் போனால் மருத்துவர்களின் ஆலோசனையைப் பெறுவேன் என்றும் உமா பாரதி கூறியிருக்கிறார்.
இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை, செப்டம்பர் 29ஆம் தேதி நிலவரப்படி 61 லட்சத்து 45 ஆயிரத்து 291 ஆக உள்ளது. உலக அளவில் அமெரிக்காவுக்கு அடுத்த நிலையில் அதிக வைரஸ் பாதிப்பை கொண்ட நாடாக இந்தியா உள்ளது. இதேபோல, உயிரிழப்பு அளவில் இந்தியாவில் வைரஸால் இதுவரை 96 ஆயிரத்து 318 பேர் இறந்துள்ளதாக ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக ஆய்வுத் தரவுகளில் கூறப்பட்டுள்ளது.
பிற செய்திகள்:
- குவைத் மன்னர் ஷேக் சபா 91 வயதில் மரணம்
- செவ்வாய் கிரகத்தில் நிலத்துக்கு கீழே 1.5 கி.மீ தூரத்தில் 3 ஏரிகள் கண்டுபிடிப்பு
- ஹத்ராஸ் கூட்டுப்பாலியல் சம்பவம்: உயிருக்கு போராடிய 19 வயது பெண் டெல்லியில் உயிரிழப்பு
- அதிமுகவின் முதல்வர் வேட்பாளர்: சர்ச்சை நாளாகுமா அக்டோபர் 7?
- கேட் க்யூ: இந்தியாவில் பரவும் புதிய வகை வைரஸ் - நீங்கள் அச்சப்பட வேண்டுமா?
- 2ஜி வழக்கு: சிபிஐ, அமலாக்கத்துறை மேல்முறையீட்டு மனுக்கள் மீது அக்டோபர் 5 முதல் தினமும் விசாரணை
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: