You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
தமிழக அரசியல்: திருவொற்றியூர், குடியாத்தம் இடைத்தேர்தல் தள்ளிவைப்புக்கு என்ன காரணம்? விரிவான தகவல்கள்
அசாம், கேரளா, தமிழ்நாடு, மேற்கு வங்கம் ஆகிய நான்கு மாநிலங்களில் காலியாகவுள்ள ஏழு சட்டமன்ற தொகுதிகளுக்கு தற்போது இடைத்தேர்தல் நடத்த முடியாது என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
தமிழகத்திலுள்ள திருவொற்றியூர் மற்றும் குடியாத்தம், அசாமில் உள்ள ரங்கபாரா மற்றும் சிப்சாகர், கேரளாவில் உள்ள குட்டநாடு மற்றும் சாவாரா, மேற்கு வங்கத்தில் உள்ள ஃபாலகட்டா ஆகிய ஏழு தொகுதிகளும் தற்போது காலியாக உள்ளன.
தற்போதைய சூழலில் மேற்கண்ட தொகுதிகளுக்கு தேர்தல் நடத்துவது சிரமமானது என்று அந்த மாநிலத்தின் தலைமைச் செயலர்கள் மற்றும் தலைமை தேர்தல் அலுவலர்கள் தெரிவித்ததன் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் இன்று தெரிவித்துள்ளது.
சமீபத்தில் காலியான நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற தொகுதிகளுக்கு தேர்தல் நடத்துவது குறித்து மாநில அரசுகளின் உள்ளீடுகளை பெற்ற பின்பும் முடிவெடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் குடியாத்தம் தொகுதி திமுக எம்எல்ஏ காத்தவராயன், திருவொற்றியூர் தொகுதி எம்எல்ஏ கே.பி.பி. சாமி ஆகியோர் கடந்த பிப்ரவரி மாதம் மரணம் அடைந்தனர். கடந்த ஜூன் மாதம் சேப்பாக்கம்-திருவல்லிகேணி தொகுதி திமுக எம்எல்ஏ ஜெ. அன்பழகன் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தார். மேலும், கடந்த மாதம் கன்னியாகுமரி மக்களவை தொகுதி காங்கிரஸ் எம்.பி. வசந்தகுமார், கொரோனா பாதிப்புக்கு பிந்தைய சிகிச்சையின்போது உயிரிழந்தார். இந்த மூன்று சட்டமன்ற தொகுதிகள் மற்றும் கன்னியாகுமரி மக்களவை தொகுதி காலியானவை என்று தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது.
இந்த நிலையில், வரும் அக்டோபர் 28, நவம்பர் 3,7 ஆகிய நாட்களில் மூன்று கட்டங்களாக பிஹார் மாநில சட்டமன்ற தேர்தலை நடத்துவதற்கான அறிவிப்பை இந்திய தேர்தல் ஆணையம் கடந்த வாரம் வெளியிட்டது. இந்த தேர்தலுடன் தமிழகத்தில் காலியாகவுள்ள சட்டமன்ற தொகுதிகளுக்கும் ஒரு மக்களவை தொகுதிக்கும் தேர்தல் நடத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இருப்பினும் மாநில தேர்தல் அதிகாரி, தமிழக அரசின் தலைமைச்செயலாளர் தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு மேலும் மோசம் அடைந்து வருவதாகக் குறிப்பிட்டு தேர்தலை நடத்துவதற்கான உகந்த சூழ்நிலை நிலவவில்லை என்று இந்திய தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் அனுப்பியிருந்தனர். இது தொடர்பாக காணொளி வாயிலாக தேர்தல் ஆணைய உயரதிகாரிகளுடன் நடந்த கூட்டத்தின்போதும் விளக்கப்பட்டது.
இந்த நிலையில், தமிழகத்தில் காலியாகவுள்ள தொகுதிகளுக்கு தற்போதைக்கு இடைத்தேர்தல் நடத்தப்படாது என்று தேர்தல் ஆணையம் தெளிவுபடுத்தியுள்ளது.
இது தொடர்பாக தேர்தல் ஆணைய உயரதிகாரியிடம் கேட்டபோது, தற்போதைய முடிவு தற்காலிகமானதுதான் என்றும் மாநிலத்தில் நிலவும் சூழலை உன்னிப்பாக கவனித்து காலியாகவுள்ள தொகுதிகளுக்கு தேர்தல் நடத்தும் அறிவிப்பை ஆணையம் விரைவில் வெளியிடும் என்று தெரிவித்தார்.
சேப்பாக்கம் தொகுதி நிலைமை என்ன?
தமிழக சட்டமன்றத்தின் பதிவிக்காலம் 2021ஆம் ஆண்டு மே மாதம் முடிவடைகிறது. இதற்கான தேர்தல் தேதி அடுத்த ஆண்டு மார்ச்ச மாதம் அறிவிக்கப்பட்டால், உடனுக்குடன் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்து விடும். தேர்தல் விதிகளின்படி, தேர்தலை எதிர்கொள்ளும் சட்டமன்றத்தில் ஓராண்டு அல்லது அதற்கு மேலாக தொகுதியாக இருந்தால், அதற்கு இடைத்தேர்தல் நடத்தப்பட வேண்டும். அந்த வகையில், கடந்த பிப்ரவரியில் காலியானதாக அறிவிக்கப்பட்ட திருவொற்றியூர், குடியாத்தம் ஆகிய தொகுதிகளுக்கு தேர்தல் நடத்தப்பட வேண்டும். சேப்பாக்கம் தொகுதி கடந்த ஜூன் மாதம்தான் காலியானதாக அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில், தேர்தல் ஆணையம் அவசியம் என கருதினால், அந்த தொகுதிக்கும் தேர்தலை நடத்தும் அறிவிப்பை வெளியிடலாம். ஆனால், அதற்கு மாநில அரசின் கருத்தைப் பெற்றுச் செயல்படுவது அவசியம். இதனாலேயே தற்போதைக்கு திருவொற்றியூர், குடியாத்தம் ஆகிய தொகுதிகளுக்கான இடைத்தேர்தலை நடத்தும் வாய்ப்பை மட்டுமே ஆணையம் கவனத்தில் கொண்டுள்ளது என்று தேர்தல் ஆணைய உயரதிகாரி தெரிவித்தார்.
பிற செய்திகள்:
- 'சூனிய வேட்டை' - இந்தியாவில் பணிகளை நிறுத்திய சர்வதேச மனித உரிமைகள் அமைப்பு
- அர்மீனியா - அஜர்பைஜான் ராணுவ மோதல்: முன்னாள் சோவியத் நாடுகள் சண்டையிடுவது ஏன்?
- உங்கள் இதயத்தை பாதுகாப்பது எப்படி - 6 முக்கிய கேள்வி பதில்கள்
- 'அதிமுக ஆட்சிக்கு எதிராக வாக்களித்தது ஏன்?' : பன்னீர்செல்வத்திடம் பழனிசாமி கேள்வி
- அரபு உலகின் வலிமைமிக்க நாடாக ஐக்கிய அரபு அமீரகம் உருவெடுத்தது எப்படி?
- 380 ரூபாய் செலவில் கொரோனா பரிசோதனை செய்ய 12 கோடி கருவிகள்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: