You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
கொரோனா ஊரடங்கு தமிழ்நாட்டில் மேலும் தளர்வு ஏற்படுமா? முதல்வர் என்ன கூறுகிறார்?
கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை தொடர்பாக மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை நடத்திய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, வைரஸ் தடுப்பு கட்டுப்பாடுகளை மேலும் தளர்த்துவது தொடர்பாக மருத்துவ நிபுணர்கள் குழுவுடன் இன்று ஆலோசனை நடத்தினார்.
தமிழ்நாட்டில் இன்று மேலும் 6,352 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டதாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மேலும், மாநிலத்தில் மேலும் 1,285 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டுள்ளதாகவும் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில் கூடுதலாக 87 பேர் உயிரிழந்துள்ளதாகவும் சுகாதாரத்துறை கூறியுள்ளது. மாநிலத்தில் கொரோனா வைரஸ் மொத்த வைரஸ் பாதிப்பு, 4,15,590 ஆக பதிவாகியுள்ளது.
இந்த நிலையில், அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் காணொளி காட்சி மூலமாக இன்று பேசிய முதல்வர் பழனிசாமி, கொரோனா காலத்தில் தமிழகத்தில் ஏற்பட்டுள்ள தொழில் வளர்ச்சி மற்றும் நோய் கட்டுப்பாடு நடவடிக்கைகள் குறித்து விளக்கம் அளித்தார்.
தமிழக அரசின் முயற்சியால் மக்கள் பொருளாதார பாதிப்பில் இருந்து பாதுகாக்கப்பட்டனர் என்றும் வேலைவாய்ப்பின்மை இரண்டே மாதங்களில், ஆறில் ஒரு பங்காக சரிந்துள்ளது எனவும், தனி நபர் வருவாய் படிப்படியாய் உயர்ந்து கொரோனா சூழலால் ஏற்பட்ட பொருளாதார பாதிப்பிலிருந்து தமிழ்நாடு விரைந்து மீண்டு வருகிறது எனவும் ஆய்வறிக்கைகளை சுட்டிக்காட்டிப் பேசினார்.
14 முறை மாநில பேரிடர் மேலாண்மை குழுக்கூட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன என்றும் தமிழ்நாட்டில் நோய்த் தொற்றின் நிலைமையை தொடர்ந்து கண்காணித்து, தேவையான தளர்வுகளுடன் தமிழ்நாட்டு மக்களின் நலன் கருதி பொது முடக்கத்தை மிகவும் கவனமாகவும், பாதுகாப்பாகவும் அமல்படுத்திக் கொண்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார். இதுவரை கோவிட் நோய் தொற்று கட்டுப்பாடு, சிகிச்சை மற்றும் நிவாரணப் பணிகளுக்காக தமிழக அரசு சுமார் ரூ.7,162 கோடிக்கும் மேல் வழங்கியுள்ளது என்றார்.
''தற்போது மாநில அளவில் கோவிட் மருத்துவமனைகளில் 58,840 படுக்கைகளும், கோவிட் சிறப்பு மையங்களில் 77,223 படுக்கைகளும் மற்றும் ஆக்சிஜன் வசதிகளுடன் கூடிய 26,801 படுக்கைகளும் தயார் நிலையில் உள்ளன. ஐசியூ வசதி கொண்ட 4,782 படுக்கைகளும், 5,718 வென்டிலேட்டர்களும் தயார் நிலையில் உள்ளன. கோவிட் தொற்று சிகிச்சைக்காக 2,882 வென்டிலேட்டர்கள் தயார் நிலையில் உள்ளன.
தமிழகத்தில் 146 ஆய்வகங்கள், அதாவது 63 அரசு மற்றும் 83 தனியார் ஆய்வகங்கள் உள்ளன. தமிழ்நாட்டில் இதுவரை 45.73 லட்சம் நபர்களுக்கு சுகூஞஊசு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே கோவிட்-19 ஆய்வக பரிசோதனை செய்வதில் தமிழ்நாடு தொடர்ந்து முதலிடம் வகித்து வருகிறது,'' என்று தெரிவித்தார்.
மேலும், ''தமிழ்நாட்டில் இந்திய முறை மருத்துவ சிகிச்சையும் நோயாளிகளுக்கு சிறப்பாக அளிக்கப்படுகின்றது. நோய் எதிர்ப்பு சக்தியினை அதிகரிப்பதற்காக சித்த மருந்தான கபசுர குடிநீர் பெரும்பான்மையான மக்களுக்கு விநியோகிக்கப்பட்டு வருகிறது.இந்நடவடிக்கைகளின் காரணமாக, நாட்டிலேயே சிகிச்சை முடிந்து குணமானவர்கள் (3,49,682 நபர்கள்) 85.45 சதவீதத்திற்கும் மேல் உள்ள மாநிலமாகவும், மிக குறைவான, அதாவது 1.7சதவீத இறப்பு உள்ள மாநிலமாகவும் தமிழ்நாடு விளங்குகிறது,'' என்றார்.
அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் கோவிட் நோய் சிகிச்சை குறித்த நிலையான வழிமுறைகள் கடைப்பிடிக்கப்படுகின்றனவா என்பதை மாவட்ட ஆட்சித் தலைவர்கள் தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என்று முதல்வர் வலியுறுத்தினார்.
''மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் வாழும் அடித்தட்டு மக்களுக்காக இலவசமாக மறுமுறை உபயோகிக்க தக்க முகக் கவசங்கள் ஆகஸ்ட் 5ம் தேதி முதல் நியாயவிலைக்கடைகள் மூலம் விநியோகிக்கப்பட்டு வருகிறது. இதுவரை, 46 இலட்சம் மறுமுறை உபயோகிக்கத்தக்க முகக் கவசங்களை சென்னையில் உள்ள ஏழை, எளிய மக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டுள்ளன. பிற மாவட்டங்களில், இதுவரை 72.56 லட்சம் முகக்கவசங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன,''என்றார் முதல்வர்.
தொழில் முதலீடுகள் குறித்து பேசிய அவர், ''ஏப்ரல் முதல் ஜூன் 2020 காலங்களில் அதிக புதிய முதலீடுகளை ஈர்த்து, வேலைவாய்ப்புகளை உருவாக்கியதில், இந்தியாவிலேயே முதல் மாநிலமாக தமிழ்நாடு உள்ளது என்பதை ஒரு தனியார் நிறுவன ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு ஊரக புத்தாக்கத் திட்டத்தின் கீழ், ஊரக தொழில்களை மேம்படுத்தவும், வருமானத்தைப் பெருக்கவும், 300 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சுமார் 1,40,000 பயனாளிகள் பயன்பெறும் வகையில் கொரோனா சிறப்பு நிதி உதவி தொகுப்பு திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இக்கொரானா காலகட்டத்தில் ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரை, 1,53,576 சுய உதவிக் குழுக்களுக்கு, 5,934 கோடி ரூபாய் வங்கி கடன் உதவி வழங்கப்பட்டுள்ளது. இதில் தனியே கொரோனா நோய்த் தொற்று காலத்தில் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட 67,354 சுய உதவிக் குழுக்களுக்கு சுமார் 720 கோடி ரூபாய் அவர்களின் பொருளாதாரத்தை மேம்படுத்தவும், வருமானத்தை பெருக்கவும் கடனாக வழங்கப்பட்டுள்ளது,'' என்றார் முதல்வர்.
பிற செய்திகள்:
- அமித் ஷா: எய்ம்ஸில் என்ன சிகிச்சை அளிக்கப்பட்டது? பிரணாப் முகர்ஜி உடல்நிலை என்ன?
- அதிமுக Vs பாஜக: யார் தலைமையில் கூட்டணி? தொடரும் சர்ச்சை
- பிரான்சில் இதுவரை இல்லாத அளவு தீவிரமடையும் கொரோனா பரவல்: மீண்டும் பொது முடக்கமா?
- இந்தர்ஜித் கௌர்: மத்திய பணியாளர் தேர்வாணையத்தின் முதல் பெண் தலைவர்
- ஐபிஎல் 2020: சிஎஸ்கே அணி வீரர், ஊழியர்கள் பலருக்கு கொரோனா
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: