You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
கொரோனா வேகமாக பரவும் மாநிலங்களில் ஒன்றானது புதுச்சேரி
புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் கடந்த மே மாதம் இறுதி வரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 100க்கும் குறைவாகவே இருந்தது. ஆனால், தற்போது புதுச்சேரியில் கொரோனா தொற்று தினந்தோறும் அதிகரித்து வருகிறது. தினமும் சராசரியாக 300க்கும் அதிகமான நபர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். மேலும், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 143ஆக உயர்ந்து, இறப்பு விகிதம் 1.49 சதவீதமாக பதிவாகியுள்ளது.
புதுச்சேரியில் கடந்த 10 நாட்களில் மொத்தமாக 3,774 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது மருத்துவமனைகளில் போதிய படுகை வசதியில்லாததால் 55.84 சதவீதம் நோயாளிகள் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். மேலும் கடந்த 4 நாட்களில் 29 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர்.
கடத்த சில வாரங்களாகப் புதுச்சேரியில் கோவிட் தொற்றால் பாதிக்கபட்டர்வகளின் எண்ணிக்கை மிகவும் அதிகமாகி வருகிறது. தொற்றின் பாதிப்பு 14 நாட்களில் இரண்டு மடங்காக உயர்கிறது. இது நாட்டின் மிகவும் வேகமான ஒன்றாகும் என்று கூறுகிறார் ஜிப்மர் மருத்துவமனை இயக்குநர் ராகேஷ் அகர்வால்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "புதுச்சேரியில் தீவிர தொற்று பரவலின் காரணமாக மருத்துவமனைகளில் படுக்கைகளின் தேவை பல மடங்காக உயர்ந்துள்ளது. இதனால் கொரோனா சிகிச்சைக்காக இருந்த 200 படுக்கைகள் 325 ஆகா உயர்த்தப்பட்டுள்ளது.
நோய்த் தொற்று அதிகரித்து அதிகரித்து வரும் சூழலில், அதற்குத் தேவையான பிராண வாயு மற்றும் உயர் தீவிர சிகிச்சை அதிக அளவில் தற்போது தேவைப்படுகிறது," என்று கூறப்பட்டுள்ளது.
இந்த சூழ்நிலையில் மருத்துவ நிர்வாகத்திற்கு பல்வேறு சவால்கள் எழுந்துள்ளதாகக் கூறும் இயக்குநர், பல்வேறு தரப்பு நோயாளிகளின் உயர் மருத்துவச் சிகிச்சைகளுக்காக எந்த வித அறிகுறிகளும் இல்லாமல் வரக்கூடிய நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிக்கும் பொழுது, மிக அதிக அளவிலான மருத்துவ பணியாளர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுகின்றனர் என்று கூறினார்.
"கடந்த ஐந்து மாதங்களில் ஜிப்மர் மருத்துவமனையில் 233 மருத்துவ பணியாளர்கள் மற்றும் பிற சிகிச்சைக்காக வந்த நோயாளிகள் 243 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் அதிக எண்ணிக்கையிலான மருத்துவ பணியாளர்கள் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்," என்று ராகேஷ் அகர்வால் தெரிவித்துள்ளார்.
இதனால் ஜிப்மர் மருத்துவமனையில் உயர் சிறப்புச் சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள் இல்லாமல் சேவை நின்று போகும் சூழ்நிலை உருவாகும் அபாயம் உள்ளது என்று அவர் கூறுகிறார்.
தற்போதைய நிலவரப்படி, புதுச்சேரி மாநிலத்தில் 50,000 பேருக்கும் அதிகமாக கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது என்று புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
"அதிகப்படியாக மருத்துவ பரிசோதனை செய்வதற்காக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அதிலும், கொரோனா சிகிச்சைக்காகக் கூடுதலாக மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் துப்புரவுப் பணியாளர்களைப் புதிதாக நியமிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் நெருக்கடியான சூழல் நிலவி வருகிறது. முழு ஒரு நாள் ஊரடங்கு பின்பற்றப்பட்டு நோய்த் தாக்கம் குறையவில்லை. எனவே, தொடர்ந்து இந்த நோய்த் தொற்றை கட்டுப்படுத்துவதற்காக முயற்சியில் அரசு செயல்பட்டு வருகிறது. அதற்குத் தேவையான உபகரணங்கள் அனைத்தும் வாங்கப்பட்டு வருகிறது," எனக் அவர் கூறினார்.
"மேலும், தனியார் மருத்துவக் கல்லூரிகள் குறைந்தபட்சம் தலா 300 படுகைகள் கொடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளோம். ஆனால், ஒரு தனியார் மருத்துவக் கல்லூரி மட்டும் தேவையான படுகைகளைக் கொடுக்கவில்லை எனப் புகார் வந்தது.
அதன் அடிப்படையில் அந்த கல்லூரியை பேரிடர் மேலாண் சட்டத்தின் கீழ் எடுத்துக்கொண்டு, கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு முழுமையாக மருத்துவம் அளிப்பதற்கு முடிவு செய்து, அதற்கான ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆகவே, தனியார் மருத்துவ கல்லூரிகள் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவம் செய்யும்போது அரசோடு ஒத்துழைக்க வேண்டும்," என முதல்வர் நாராயணசாமி கேட்டுக் கொண்டார்.
இதற்கிடையே, தமிழகத்தை விட புதுச்சேரியில் தினம்தோறும் அதிக அளவில் கொரோனா மாதிரி பரிசோதனைகள் செய்து வருகிறோம் என்று சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணா ராவ் தெரிவித்தார்.
"பிற மாநிலங்களைக் காட்டிலும், புதுச்சேரியில் நாங்கள் பரிசோதனையை விரைவு படுத்தியதன் காரணத்தினால், நோய்த் தொற்று பாதிக்கப்பட்டவர்கள் உடனடியாக கண்டறியப்படுகின்றனர். அதே போன்று தொற்றிலிருந்து குணமடையும் சதவீதமும் அதிகரித்துள்ளது.
புதுச்சேரி சுற்றலா நகரம் என்பதால் தமிழகப் பகுதிகளிலிருந்து அதிக அளவில் புதுச்சேரியில் வருகின்றனர். இதன் காரணத்தினால், தற்போது நோய்த் தொற்று அதிகரித்துக்கொண்டே இருக்கிறது," என்கிறார் மல்லாடி கிருஷ்ணாராவ்.
குறிப்பாக, பொது மக்களிடையே கொரோனா நோய்த் தொற்று குறித்த விழிப்புணர்வு இல்லாத காரணத்தினாலேயே புதுச்சேரியில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதாக கூறுகின்றனர் தன்னார்வலர்கள்.
இது தொடர்பாக, புதுச்சேரி உயிர்துளி இரத்த தானம் தன்னார்வல அமைப்பைச் சேர்ந்த பிரபு கூறுகையில், "நோய்த் தொற்று அறிகுறிகளுடன் பரிசோதனைக்கு மருத்துவமனை வருபவரைப் பரிசோதனை செய்து வீட்டுக்கு அனுப்பிவிடுகின்றனர். இதன்பிறகு அவருக்குப் பரிசோதனை முடிவுகள் வர இரண்டு நாட்கள் ஆகும் நிலையில், அதுவரை பரிசோதனை எடுத்த நபர் தன்னை தனிமைப்படுத்திக் கொள்ளாமல் இருக்கிறார். பிறகு அவருக்குத் தொற்று உறுதி செய்து மருத்துவமனைக்கு அழைக்கும் போது, அதற்குள் அவர் மூலகமாகப் பலருக்குப் பரவ வாய்ப்பு ஏற்படுகிறது," என்கிறார்.
மேலும், தமிழகம் மற்றும் பிற மாநிலத்தைப் போன்று புதுச்சேரியில் பிளாஸ்மா சிகிச்சை முறையை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்துகிறார் பிரபு.
"புதுச்சேரியில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வீடுகளில் தனிமைப்படுத்தி சிகிச்சை மேற்கொண்டு வருகின்றனர். ஆனால், அந்த வழிமுறையைத் தவிர்த்து, தற்போது மூடப்பட்டுள்ள அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகள் பயன்படுத்தி, தொற்று பாதிக்கப்படும் நபர்களை அரசு நேரடி கட்டுப்பாட்டில் வைத்தால் மட்டுமே இந்நோய்த் தொற்றை தற்போது கட்டுப்படுத்த முடியும்," என்கிறார் தன்னார்வலர் பிரபு.
எதிர்கட்சி புகார்
"2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நோயாளிகளுக்கு மருத்துவமனையில் படுக்கை வசதிகள் ஏற்படுத்தப் படாததால் வீட்டிலேயே சிகிச்சை பெற்றுக் கொள்ளுங்கள் எனத் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர். இப்படித் திருப்பி அனுப்பப்படுபவர்களால் அவரது வீட்டில் உள்ள பிற நபர்களுக்கும் ஒரு வாரக் காலத்திற்குள் நோய்த் தொற்று ஏற்படுகிறது," என்கிறார் எதிர்க்கட்சி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் அன்பழகன்.
"3 மாதத்திற்கு முன் சிகிச்சை பெற்றுக் குணமானவர்களைக் கூட உடனே வீட்டிற்கு அனுப்பாமல் ஒரு வாரம் தனிமைப்படுத்த அரசு உதவியது. ஆனால் தற்போது அரசின் தவறான பொறுப்பற்ற செயலாலும், எவ்வித முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காததாலும் இன்று அதிகரித்து வரும் நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்பட போதிய படுக்கை வசதி இல்லை.
இந்நிலையில் நோயின் வீரியத் தாக்குதலை மூடி மறைக்கும் விதத்தில் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொள்ளுங்கள் என நோய்த் தொற்று உள்ளவர்களைத் திருப்பி அனுப்பி நோய்த் தொற்று அதிகளவில் பரவ அரசே காரணமாக உள்ளது," எனக் கூறினார்.
இந்நிலை தொடர்ந்தால் இம்மாத இறுதிக்குள் புதுச்சேரியில் கொரோனா நோய்த் தொற்று பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 10 ஆயிரத்தைத் தாண்டிவிடும் என்று கூறுகிறார் அன்பழகன்.
"தற்போதைய சூழலில், ஜிப்மர், தனியார் மருத்துவக் கல்லூரிகள், மாநில மருத்துவ உயர் அதிகாரிகள், ஓய்வு பெற்ற மருத்துவ நிபுணர்கள், அரசின் செயலர்கள் உள்ளிட்டோரிடம் கலந்தாலோசிக்க வேண்டும். பின்னர், இதற்காக உரிய ஏற்பாடுகளைச் செய்து மக்களைக் காப்பாற்ற உரிய நடவடிக்கையை முதல்வரும், துணை நிலை ஆளுநரும் எடுக்க வேண்டும்," என்று வலியுறுத்துகிறார் எதிர்கட்சி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் அன்பழகன்.
பிற செய்திகள்:
- NRA - CET: ஒரே நாடு, ஒரே தேர்வு: சர்ச்சையா, சாதகமா - உண்மை என்ன?
- தமிழக வீரர் மாரியப்பன், ரோஹித் சர்மா உள்பட 5 பேருக்கு கேல் ரத்னா விருது
- இலங்கை "தமிழர் பூமி" - விக்னேஷ்வரனின் உரைக்கு நாடாளுமன்றத்தில் எதிர்ப்பு
- தமிழ் வழியில் படித்து நாசாவின் தலைசிறந்த விஞ்ஞானியான மெய்யப்பனின் வெற்றிக்கதை
- ரஷ்யா: விஷம் கொடுக்கப்பட்டதாக சந்தேகம் - கோமா நிலையில் எதிர்கட்சி தலைவர்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: