"வெளிப்படையான வரி விதிப்பு - நேர்மையானவர்களுக்கு மரியாதை" - புதிய திட்டத்தை தொடங்கி வைத்தார் நரேந்திர மோதி

பட மூலாதாரம், Getty Images
நேர்மையாக வரி செலுத்துவோரை கௌரவிப்பதற்காக, "வெளிப்படையான வரி விதிப்பு - நேர்மையானவர்களுக்கு மரியாதை'' என்னும் வரி சீர்த்திருத்த திட்டத்தை இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி இன்று (வியாழக்கிழமை) தொடங்கி வைத்தார்.
மத்திய நேரடி வரி வாரியம், பல முக்கிய வரி சீர்திருத்தங்களை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, வருமான வரி செலுத்துதல் மற்றும் முறையீடு செய்தல் உள்ளிட்டவற்றில் பல்வேறு மாற்றங்களை கொண்டுவரும் இந்த திட்டத்தின் தொடக்க விழா இன்று காணொளி காட்சி வாயிலாக நடைபெற்றது. இதில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உள்ளிட்ட அமைச்சர்களும், துறைசார் அதிகாரிகளும் பங்கேற்றனர்.
இந்த விழாவில் பிரதமர் நரேந்திர உரையாற்றியபோது குறிப்பிட்ட சில முக்கிய விடயங்களை இங்கே பட்டியலிடுகிறோம்.
- கடந்த 6-7 ஆண்டுகளில், வருமான வரி கணக்கு தாக்கல் செய்பவர்களின் எண்ணிக்கை சுமார் இரண்டரை கோடி உயர்ந்துள்ளது. 130 கோடி பேர் வசிக்கும் நாட்டில், இந்த அளவு மிக குறைவு என்பதும் உண்மைதான்..
- வரி செலுத்தும் முறை மக்களுக்கு மிக மிக எளிமையானதாக இருக்க வேண்டும். நேர்மையாக வரி செலுத்துவோர், நாட்டின் வரி வசூலிப்பு முறை மீது நம்பிக்கைக் கொள்ள வேண்டும்.
- மத்திய அரசின் திட்டங்கள் மக்களை எளிதில் சென்று சேருகின்றன. உரிய நேரத்தில் வரி செலுத்துவோர், நாட்டின் வளர்ச்சியில் அக்கறை கொண்டவர்கள். வரி விதிப்பில் செய்யப்பட்டு உள்ள சீர்திருத்தங்கள் புதிய உச்சத்தை தொட்டுள்ளன.
- 2012-13ம் ஆண்டின் மொத்த வரித்தாக்கலில், 0.94 சதவீதம் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது. 2018-19ம் ஆண்டில், இந்த அளவு 0.26 சதவீதமாக குறைந்துள்ளது. அதாவது, ஆய்வுக்கு உட்படுத்தப்படும் வரித்தாக்கல்களின் எண்ணிக்கை நான்கு மடங்கு குறைந்துள்ளது.
- நம் நாட்டில் கட்டமைப்பு சீர்திருத்தங்களின் நடைமுறை இன்று ஒரு புதிய கட்டத்தை எட்டியுள்ளது. 'வெளிப்படையான வரிவிதிப்பு - நேர்மையானவர்களுக்கு மரியாதை', 21 ஆம் நூற்றாண்டின் வரித்தாக்கல் முறையின் புதிய வழி இன்று தொடங்கப்பட்டுள்ளது.
- புதிதாக தொடங்கப்பட்டுள்ள தளத்தில், முகமில்லா மதிப்பீடு, முகமில்லா மேல்முறையீடு மற்றும் வரிசெலுத்துவோர் சாசனம் போன்ற முக்கிய சீர்திருத்தங்கள் உள்ளன. முகமில்லா மதிப்பீடு மற்றும் வரிசெலுத்துவோர் சாசனம் இன்று முதல் அமலுக்கு வருகிறது.

பட மூலாதாரம், Getty Images
- முகமில்லா மேல்முறையீடு வசதி, நாடு முழுவதும் மக்களுக்கு செப்டம்பர் 25ம் தேதி முதல் பயன்பாட்டுக்கு வரும். வரிசெலுத்தும் முறை, இன்று முகமில்லாததாக மாறியுள்ளதால், இது வரி செலுத்துவோருக்கு நியாயம், அச்சமின்மை என்ற நம்பிக்கையை அளிக்கிறது
- பல வரிகளை மாற்றி ஜிஎஸ்டி வந்தது போல், இந்த பணியும் சில காலமாக மேற்கொள்ளப்பட்டு முடிக்கப்பட்டுள்ளது
- வரி செலுத்துவோர் மற்றும் வருமான வரி துறைக்கு இடையே நம்பிக்கையை அதிகரிப்பதற்கான வழி இது.
- நியாயமான மற்றும் எளிமையான வரி விதிப்பு என்பது நமது நாட்டின் முக்கியக் கொள்கையாக உள்ளது. வரி முறையை எளிமைப்படுத்துவதன் மூலம், நாட்டில் வரி செலுத்துவோரின் எண்ணிக்கை அதிகரிக்க முடியும். நாட்டின் முன்னேற்றத்தில் நேர்மையாக வரி செலுத்துவோருக்கு முக்கியப் பங்கு உள்ளது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:








