You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ஆற்றில் சிக்கிய இளைஞர்களை மீட்க சேலையை கயிறாக மாற்றிக் காப்பாற்றிய பெண்கள்
பெரம்பலூர் மாவட்டம், மருதையாற்றில் குளித்துக் கொண்டிருந்தபோது ஆற்றில் சிக்கிய சில இளைஞர்களை தங்களின் சேலையை கயிறாக மாற்றி 3 பெண்கள் காப்பாற்றியுள்ளனர்.
பெரம்பலூர் மாவட்டம் சிறுவாச்சூர் கிராமத்தை சேர்ந்த இளைஞர்கள் 12 பேர் கிரிக்கெட் விளையாடி முடித்து, அருகே இருக்கும் கொட்டரை மருதையாற்றை சுற்றிப்பார்க்க சென்றுள்ளனர்.
பிறகு அங்கிருக்கும் உபரிநீர் வடிகாலில் குளிக்கச் சென்றுள்ளனர். அங்கு குளித்துக்கொண்டிருக்கும் போது நீரில் சிக்கினார்கள்.
இதனால் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த இளைஞர்களை, ஆற்றின் மற்றொரு பகுதியில் குளித்துக்கொண்டிருந்த செந்தமிழ்செல்வி, முத்தம்மாள், ஆனந்தவள்ளி ஆகிய 3 பெண்கள், உடனே தங்களின் சேலையை கயிறாக மாற்றி இளைஞர்களைக் காப்பாற்ற முயன்றனர்.
அப்போது, இரண்டு இளைஞர்களைச் சேலைகள் மூலம் மேலே இழுத்துக் காப்பாற்றிவிட்டனர். மேலும் இரண்டு இளைஞர்கள் நீரின் ஆழத்துக்கு சென்று விட்டதால் அவர்களை மீட்க முடியவில்லை.
நடந்த சம்பவம் குறித்து இளைஞர்களைச் சேலை கொடுத்து மீட்ட செந்தமிச்செல்வி கூறுகையில், "துணி துவைத்து, குளிப்பதற்காக மருதையாறு அணைக்கு சென்றிருந்தோம். நாங்கள் கரையில் குளித்துக் கொண்டிருக்கும் போது, அங்கே வந்த இளைஞர்கள் சிலர் எங்களிடம், அணையின் மற்ற பகுதிகள் வழுக்குவதால், நாங்கள் இருக்கும் பகுதியில் குளிக்கலாமா? என்று கேட்டனர்.
மேலும், அவர்கள் அனைவருக்கும் நீச்சல் தெரியாது என கூறவே, நாங்களும் அவர்களுக்காகத் தள்ளி குளிப்பதாகக் கூறிவிட்டு, நாங்கள் இருக்கும் பகுதியிலேயே கீழே இறங்காமல் குளிக்குமாறு அறிவுறுத்தினோம்," என்றார்.
குறிப்பாக, அணையின் மற்ற பகுதிகள் ஆழம் அதிகமாக இருக்கிறது என்பதாலும், பாசி பிடித்து இருப்பதாலும் உள்ளே இறங்க வேண்டாம் என்று அவர்களிடம் பலமுறை எச்சரித்தோம் என்று செந்தமிழ்செல்வி கூறினார்.
"பிறகு அங்கிருந்த இளைஞர்கள், நாங்கள் குளித்துக் கொண்டிருப்பதால் அருகே வர கூச்சப்பட்டுக்கொண்டு அங்கேயே அமர்ந்துவிட்டனர். அடுத்த கொஞ்ச நேரத்தில் அவர்கள் உள்ளே எப்படிச் சென்றார்கள் என்று கவனிக்கவில்லை.
ஆனால், அடுத்தடுத்து இரண்டு பேர் உள்ளே குளிக்க இறங்கிவிட்டனர். பிறகு, சற்று நேரத்தில் அங்கிருந்த இளைஞர்கள் கூச்சலிடுவதைக் கேட்டு நாங்கள் அங்கே செல்வதற்குள், அடுத்து 2 பேர் அவர்களைக் காப்பாற்ற உள்ளே இறங்கிவிட்டனர்.
பிறகு நாங்கள் மூவரும் எங்களது சேலை எடுத்துக்கொண்டு ஓடினோம்.
அவர்களை காப்பாற்றுவதற்காக உள்ளே சிக்கியவர்களிடம் எங்களது சேலையைக் கயிறாக மாற்றி வீசினோம். அப்போது, மேலிருந்து இரண்டு நபர்களைச் சேலை மூலமாக இழுத்து மீட்க முடிந்தது. ஆனால், அவர்களுக்குக் கீழிருந்த மேலும் இரண்டு நபர்களை மீட்க, நானும் சிறிது தூரம் உள்ளே இறங்கினேன்.
அவர்கள் தலை தெரியாத அளவிற்கு உள்ளே மூழ்கிவிட்டனர். எப்படியாவது அவர்களை மீட்டுவிடலாம் என்று முயன்ற போது, எனக்கும் ஆற்றில் வழுக்கத் தொடங்கியது. அதன் பின்னர் என்னையும் தாங்கி மேலே கொண்டு வந்தனர்" என செந்தமிழ்செல்வி தெரிவித்தார்.
மூன்று பேரை காப்பாற்றி மீண்டு வந்ததே பெரிய விஷயமாகத் தெரிகிறது என்கிறார் செந்தமிழ்செல்வி.
"எங்களால் மேலும் இரண்டு பிள்ளைகளைக் காப்பாற்ற முடியாதது மனதுக்கு மிகவும் வேதனையளிக்கிறது. அந்த இருவரும் தான் எங்களது கண் முன்னே தெரிகின்றனர்," என்று வேதனையுடன் செந்தமிழ்செல்வி கூறினார்.
தண்ணீருக்குள் சிக்கி மீட்கப்பட்ட கார்த்திக், செந்தில்குமார் ஆகிய இருவரும் நலமாக உள்ளனர். ஆனால், பவித்ரன் (வயது 17) மற்றும் பயிற்சி மருத்துவர் ரஞ்சித் (வயது 25) நீரில் மூழ்கி உயிரிழந்தனர். இதையறிந்து சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்புத் துறையினர், உயிரிழந்த இருவரின் உடலை மீட்டு, பெரம்பலூர் மாவட்ட அரசு மருத்துவமனைக்கு உடற்கூராய்வுக்காக அனுப்பிவைத்தனர்.
நீரில் மூழ்கி உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த இளைஞர்களைத் துணிச்சலுடன் சேலையை வீசி காப்பாற்றிய செந்தமிழ்செல்வி, முத்தம்மாள், ஆனந்தவள்ளி ஆகிய மூன்று பெண்களை, உள்ளூர் மக்கள் பெரிதும் பாராட்டி வருகின்றனர்.
மேலும், இவர்களுக்கு நீச்சல் தெரிந்து துணிச்சலுடன் ஆற்றில் ஓரளவுக்கு இறங்கிய காரணத்தால்தான் இரண்டு இளைஞர்களைக் காப்பாற்ற முடித்தது. இவர்களைப் போன்ற பெண்களை தமிழக அரசு ஊக்குவிக்க வேண்டும் என அப்பகுதி கிராம மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
சர்வதேச அளவில் கோவிட்-19 பாதிப்பு எண்ணிக்கைகளை வரைபட வடிவில் நீங்கள் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
பிற செய்திகள்:
- இந்திய பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு என்ன? மன்மோகன் சிங் வழங்கும் 3 யோசனைகள்
- முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு கொரோனா தொற்று
- ரஷ்யாவில் எம்பிபிஎஸ் படிக்கும் 4 தமிழக மாணவர்கள் ஆற்றில் மூழ்கி உயிரிழப்பு
- ராஜேந்திர சோழன்: 1,000 ஆண்டுகள் முன்பு இந்தியாவை, கீழை நாடுகளை வென்ற தமிழ் மன்னன்
- இலங்கை தேர்தல்: இந்திய வம்சாவளித் தமிழர்களின் பிரச்சனைகள் தீருமா?
- EIA 2020: "தேசத்தை கொள்ளையடிப்பதே இதன் நோக்கம்" - ராகுல் காந்தி குற்றஞ்சாட்டு
- சாத்தான்குளம் தந்தை மகன் சிறை மரண வழக்கில் கைதான சிறப்பு எஸ்.ஐ. கொரோனாவுக்கு பலி
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: