தமிழகத்தில் இன்று முதல் அமலுக்கு வரும் பொது முடக்க தளர்வுகள் என்னென்ன?

முக்கிய இந்திய நாளிதழ்களில் வெளியான செய்திகள் சிலவற்றைத் தொகுத்து வழங்குகிறோம்.

இந்து தமிழ் திசை: "தமிழகத்தில் இன்று அமலுக்கு வரும் பொது முடக்க தளர்வுகள் என்னென்ன?"

தமிழகத்தில் கொரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில், 7-ம் கட்டமாக ஆகஸ்ட் 31-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், இன்று முதல் சில தளர்வுகள் அமலுக்கு வருவதாக இந்து தமிழ் திசை நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் அவ்வப்போது பொது முடக்க கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு வருகின்றன.

அதன்படி, இன்று (ஆகஸ்டு 10) முதல் உடற்பயிற்சிக் கூடங்கள், ஓட்டுநர் பயிற்சி நிலையங்கள் இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி, 50 வயதுக்கு மேற்பட்டோர், 15 வயதுக்கு குறைந்தவர்கள், கர்ப்பிணிகள், இணை நோய்கள் உள்ளோரை அனுமதிக்க வேண்டாம். உடற்பயிற்சி மேற்கொள்வோர் இடையே 6 அடி இடைவெளி இருக்க வேண்டும். முகக்கவசம் அணிந்தவர்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும் என்று அரசு சார்பில் வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளது.

மேலும், பொது முடக்க கட்டுப்பாடு தளர்வுகளின் ஒரு பகுதியாக சென்னை உள்ளிட்ட மாநகராட்சிப் பகுதிகளில் ரூ.10 ஆயிரம் வரை ஆண்டு வருவாய் உள்ள கோயில்கள், மசூதிகள், தேவாலயங்களில் இன்று முதல் வழிபாட்டுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கோயில்களை திறப்பதற்கு சென்னையில் மாநகராட்சி ஆணையரிடமும், இதர மாவட்டங்களில் மாவட்ட ஆட்சியர்களிடமும் அனுமதி பெற வேண்டும்" என்று அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினத்தந்தி: "ராணுவ தளவாடங்களை இறக்குமதி செய்ய கட்டுப்பாடு"

உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையில் 101 வகையான ராணுவ தளவாடங்களின் இறக்குமதிக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருப்பதாக பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அறிவித்து உள்ளதாக தினத்தந்தி செய்தி வெளியிட்டுள்ளது.

உள்நாட்டில் ராணுவ தளவாடங்களின் உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையில் 101 வகையான ராணுவ தளவாடங்களை இறக்குமதி செய்வதற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருப்பதாகவும், உள்நாட்டில் உள்ள ராணுவ தளவாடங்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்களுக்கு அடுத்த 5 முதல் 7 ஆண்டுகளுக்குள் படிப்படியாக ரூ.4 லட்சம் கோடி மதிப்பிலான ஒப்பந்தங்கள் வழங்கப்படும் என்றும் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ட்விட்டர் பதிவு ஒன்றில் தெரிவித்து உள்ளார்.

பிரதமர் நரேந்திர மோதி அறிவித்த 'தற்சார்பு இந்தியா' திட்டத்தின் கீழ் உள்நாட்டில் உள்ள ராணுவ தளவாட உற்பத்தி நிறுவனங்களுக்கு ஊக்கம் அளிக்க ராணுவ அமைச்சகம் தயாராகிவிட்டதாகவும் அதில் அவர் குறிப்பிட்டு உள்ளார்.

இந்த ரூ.4 லட்சம் கோடி கொள்முதலில் ரூ.1 லட்சத்து 30 ஆயிரம் கோடிக்கு தரைப்படை மற்றும் விமானப்படைக்கும், ரூ.1 லட்சத்து 40 ஆயிரம் கோடிக்கு கடற்படைக்கும் ராணுவ தளவாடங்கள் கொள்முதல் செய்யப்படும் என்று அவர் தனது ட்விட்டர் பதிவில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

தினமணி: "மருத்துவர்கள் உயிரிழப்பு எண்ணிக்கை - தமிழகத்தில் புதிய சர்ச்சை"

தமிழக மருத்துவர்கள் 43 பேர் கொரோனாவால் உயிரிழந்ததாக இந்திய மருத்துவ சங்கத்தின் (ஐஎம்ஏ) தலைமையகம் தெரிவித்துள்ள நிலையில், அந்த எண்ணிக்கை தங்களிடம் உள்ள தரவுகளை சரிபார்க்காமல் வெளியிடப்பட்டவை என்று ஐஎம்ஏ அமைப்பின் மாநிலப் பிரிவு தெரிவித்துள்ளதாக தினமணி செய்தி வெளியிட்டுள்ளது.

கொரோனாவால் இறந்ததாகக் கூறப்படும் பல மருத்துவர்களுக்கு அந்த நோய்த்தொற்றே ஏற்படவில்லை என்றும் ஐஎம்ஏ அமைப்பின் மாநிலப் பிரிவு விளக்கமளித்துள்ளது. இதுபோன்ற தவறான தகவல்களை வேண்டுமென்றே சிலர் திட்டமிட்டு பரப்புவதாகவும் அவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

முன்னதாக, ஐஎம்ஏ தலைமையகத்தில் இருந்து மாநில வாரியாக கொரோனாவுக்கு பலியான மருத்துவர்களின் விவரம் வெளியிடப்பட்டதாக செய்திகள் வந்தன. அதில், நாடு முழுவதும் 196 மருத்துவர்கள் இதுவரை உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதிகபட்சமாக தமிழகத்தில் 43 பேரும், அதற்கு அடுத்தபடியாக மகாராஷ்டிரா, குஜராத்தில் தலா 23 பேரும் பலியானதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது.

இது பல்வேறு சர்ச்சைகளுக்கு வித்திட்டது. ஆனால், அதனை ஐஎம்ஏ அமைப்பின் தமிழகப் பிரிவும், சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கரும் மறுத்தனர்" என்று அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: