You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
அம்மோனியம் நைட்ரேட்: எஞ்சிய ரசாயனத்தை அகற்ற சென்னை காவல்துறை நடவடிக்கை
சென்னையில் தேக்கி வைக்கப்பட்டுள்ள அம்மோனியம் நைட்ரேட் வேதிப்பொருள் அடங்கிய எஞ்சிய கன்டெய்னர்கள், இன்னும் இரண்டு, மூன்று நாட்களுக்குள் ஏலம் எடுத்தவர்களுக்கு அனுப்பப்படும் என்று சென்னை மாநகர காவல்துறை ஆணையர் மகேஷ் குமார் அகர்வால் தெரிவித்திருக்கிறார்.
கரூரைச் சேர்ந்த தனியார் நிறுவனம் ஒன்று விவசாயப் பணிகளுக்குப் பயன்படுத்துவதாகக் கூறி, 740 மெட்ரிக் டன் அம்மோனியம் நைட்ரேட்டை 2015ஆம் ஆண்டு வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்தது.
ஆனால், அந்த தனியார் நிறுவனத்திடம் தகுந்த உரிமம் இல்லை என்று கூறி, இறக்குமதி செய்யப்பட்ட அம்மோனியம் நைட்ரேட்டை சுங்கத் துறை பறிமுதல் செய்தது.
பறிமுதல் செய்யப்பட்ட அம்மோனியம் நைட்ரேட், தற்போது மணலியில் உள்ள சுங்கத் துறையின் வேதிப் பொருட்களுக்கான சத்வா சிஎஸ்எஃப் கிடங்கில் 37 கன்டெய்னர்களில் கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக சேமித்து வைக்கப்பட்டிருக்கிறது. இதை எதிர்த்து தனியார் நிறுவனம் தொடர்ந்த வழக்கில், சுங்கத் துறைக்குச் சாதகமாக தீர்ப்பு வெளிவந்தது.
இதனால், பறிமுதல் செய்யப்பட்ட அம்மோனியம் நைட்ரேட்டை ஏலம் விட முடிவு செய்யப்பட்டது. மழை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் 740 மெட்ரிக் டன் அம்மோனியம் நைட்ரேட்டில், 697 மெட்ரிக் டன் வேதிப் பொருள் மட்டுமே எஞ்சியிருந்தது.
இந்த நிலையில், கடந்த பிப்ரவரி மாதம் நடத்தப்பட்ட ஏலத்தில், தெலங்கானா மாவட்டம் ஹைதராபாதைச் சேர்ந்த ஒரு நிறுவனம் அந்த ரசாயனத்தை கொண்டு செல்ல தேர்வானது.
இருந்தபோதும், அம்மோனியம் நைட்ரேட் இருந்த கன்டெய்னர்கள், தெலங்கானாவுக்குக் கொண்டுசெல்லப்படாமல், கிடங்கிலேயே இருந்தன.
லெபனான் நாட்டின் தலைநகர் பெய்ரூட் நகர வெடிவிபத்துக்குப் பிறகு, இந்தியா முழுவதும் அம்மோனியம் நைட்ரேட் இருப்பு வைத்திருக்கும் இடங்களில் அச்சம் பரவியது. இதனால், சென்னையில் தேக்கி வைக்கப்பட்டிருக்கும் அம்மோனியம் நைட்ரேட்டை உரிய இடத்துக்கு கொண்டு செல்லும் பணிகள் துரிதப்படுத்தப்பட்டன. அதன்படி, ஞாயிற்றுக்கிழமை 10 கண்டெய்னர்களில் 181 மெட்ரிக் டன் அம்மோனியம் நைட்ரேட் தெலங்கானா மாநிலத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டது.
இந்த நிலையில் எஞ்சியிருக்கும் 27 கண்டெய்னர்களும், இன்னும் இரண்டு மூன்று நாட்களில் இங்கிருந்து அகற்றப்படும் என சென்னை மாநகர காவல்துறை ஆணையர் மகேஷ் குமார் அகர்வால் தெரிவித்திருக்கிறார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "மீதமுள்ள கண்டெய்னர்கள் தகுந்த பாதுகாப்புடன் வைக்கப்பட்டிருக்கின்றன. தீயணைப்புத் துறையினர் கண்காணித்துவருகிறார்கள். இன்னும் இரண்டு - மூன்று நாட்களில் மீதமுள்ள இந்த கண்டெய்னர்களும் சென்னையிலிருந்து அனுப்பப்பட்டுவிடும்" என்று கூறினார்.
பிற செய்திகள்:
- ராஜேந்திர சோழன்: 1,000 ஆண்டுகள் முன்பு இந்தியாவை, கீழை நாடுகளை வென்ற தமிழ் மன்னன்
- இலங்கை தேர்தல்: இந்திய வம்சாவளித் தமிழர்களின் பிரச்சனைகள் தீருமா?
- EIA 2020: "தேசத்தை கொள்ளையடிப்பதே இதன் நோக்கம்" - ராகுல் காந்தி குற்றஞ்சாட்டு
- சாத்தான்குளம் தந்தை மகன் சிறை மரண வழக்கில் கைதான சிறப்பு எஸ்.ஐ. கொரோனாவுக்கு பலி
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: